கிறிஸ்தவ மதத்தில் இறைவனின் மகனான இயேசு கிறிஸ்துவை என் நண்பர் என்று சொன்னதும் போலீஸ் அதிகாரி எபிநேசர் பட்டென்று என் காலில் விழுந்தார்.

’’உங்களை ரொம்பவும் சாதாரணமா நினைச்சுட்டேன். இப்படி அடுத்த மதத்தை மதிப்பதற்கு மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திட்டீங்கன்னா, நாட்டுல மதக்கலவரமே வராது. உங்களை சந்திச்சது சந்தோஷமா இருக்குது. ஊர்ல அளவுக்கதிகமா ராத்திரி பகலா வேலை பார்த்து ரொம்பவும் களைப்பாயிட்டேன். அதான் நாலைஞ்சு நாள் ஓய்வு எடுக்கலாம்னு, குடும்பத்தோட கிளம்பி வந்துட்டேன்’’ என்றார்.

’’மனிதர்களுக்கு ஓய்வு எடுக்கவே தெரியாதே…’’

’’ஏன்… இப்படிச் சொல்றீங்க சாமி’’

’’ஓய்வு எடுப்பதாகச் சொல்லி, நீ மலை மீது ஏறும் கடுமையான வேலை செய்து கொண்டு இருக்கிறாய். உன்னைப் போலத்தான் பலரும் நிம்மதியாக இருக்கிறேன் என்று டி.வி. பார்த்து தேவையில்லாதவற்றை தலையில் ஏற்றிக் கொள்கிறார்கள். இசை கேட்டு, புத்தகம் படித்து, தோட்டம் போடுவது என்று எதையாவது செய்வதையே ஓய்வு என்கிறார்கள். உண்மையில் மனிதர்களால் உறக்கத்தின் போது மட்டுமே ஓய்வு எடுக்க முடியும்… அதுதான் உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஓய்வு’’

ஆச்சரியத்துடன் பேசினார், ‘‘நீங்க சொல்றது சரிதான் சாமி. ஆனா எங்களை மாதிரி போலீஸ்காரங்க இப்படி ஏதாவது சாக்குச் சொல்லி தப்பிச்சு வந்தாத்தான் உண்டு. ஏன்னா வேலையில நிம்மதியே கிடையாது. மக்கள் சாதாரண டிராஃபிக் ரூல்ஸைக் கூட மதிக்க மாட்றாங்க. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஈவ்டீசிங், தீவிரவாதம் எல்லாமே நாளுக்குநாள் பெருகிக்கிட்டே போகுது…’’ என்று கவலைப்பட்டார்.

’’அவசரத்தில், ஆவேசத்தில், அத்தியாவசியமாக தவறு செய்பவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் தவறு என்று தெரிந்தும், தைரியமாகச் செய்பவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். இவர்களை உருவாக்குவதில் காவல்துறைக்குத்தான் அதிக பங்கு என்பதால், விளைவுகளையும் நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்’’

’’புரியலையே சாமி…’’

’’தீவிரவாதிகளை கண்காணிக்கச் செல்லும் போலீஸ், கிராமப்புறப் பெண்களின் சேலைகளை உருவி பலாத்காரம் புரிகிறது. கள்ளச்சாராயம், விபச்சாரம், கஞ்சா விற்பனைக்கு ரகசிய ஆதரவு கொடுத்து வளர்ப்பதும் காவல்துறைதான். சாலையோரம் கடை வைத்து உழைத்துப் பிழைப்பவர்களிடம் மாமூல் வாங்குவதில் தொடங்கி, கட்டப் பஞ்சாயத்து செய்வது வரை போலீஸ்காரர்கள் செய்யும் தவறுகளைவிட பொதுஜனங்கள் குறைவாகவே செய்கிறார்கள்…’’

’’இதெல்லாம் இல்லைன்னு சொல்லலை சாமி… யாரோ எங்கோ செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த போலீஸையும் குறை சொல்லலாமா?’’

’’எந்தக் குற்றமும் செய்யாதவன் மட்டுமே அடுத்தவன் மீது கல் எறியவேண்டும் என்பதைத்தானே உங்கள் மதம் போதனை செய்கிறது. சட்டத்தைத் தெரிந்தே மீறுபவர்கள் இரண்டே ரகத்தினர்கள்தான். ஒன்று காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொன்று அதிகாரம் மற்றும் பணம் வைத்திருப்பவர்கள். இந்த இரண்டு மக்களையும் சட்டத்தால் எதுவும் செய்ய முடிவதில்லை. காவல்துறையினர்கள் எல்லோரும் சட்டத்தை மதிக்கத் தொடங்கினால், மக்கள் அதைவிட நூறு மடங்கு மதிப்பார்கள்…’’

’’அப்படின்னா போலீஸ்தான் எல்லாத் தப்புக்கும் காரணமா?’’

’’இல்லை,  காவல்துறை என்ற அமைப்பைத்தான் தவறு என்கிறேன். உடுப்பை அணிந்ததும் ஒவ்வொரு காவலரும் குறுநில மன்னர் போன்று தன்னை நினைத்துக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகிறார்கள். எங்கெல்லாம் செல்லுபடியாகிறதோ, அங்கெல்லாம் சர்வாதிகாரம் புரிகிறார்கள். இதெல்லாம் போதாதென்று குற்றவாளிகளை உருவாக்குவதற்குத்தான் நீங்களே தனியாக ஒரு தொழிற்சாலையும் நடத்துகிறீர்கள்…’’

’’காவலர்கள் நடத்துகிறார்களா?’’

’’ஆம்… சிறைச்சாலையைத்தான் சொல்கிறேன். மிகச் சாதாரண தவறு செய்து பயந்தபடி சிறைக்குச் செல்லும் ஒருவன், அங்கே கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தவனுக்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பணம் கொடுத்தால் சிறைச்சாலையின் ஒவ்வொரு கதவினையும் காவலர்கள் திறந்து விடுவார்கள் என்பதை அறிந்ததும் பெரிய அளவில் திருடினால் தப்பு இல்லை என முடிவு எடுக்கிறான். பஞ்சமா பாதகங்கள் செய்வதற்கும் சிறைச்சாலையில் பயிற்சியும் கிடைத்துவிடுகிறது. இப்படிப் பட்டவர்களை உற்பத்தி செய்துவிட்டு நாட்டில் தவறுகள் பெருகிவிட்டது என்று புலம்புவது நியாயமா? முதலில் காவல்துறையை சுத்தம் செய்யுங்கள், பின்னர் மக்களுக்கும் விழிப்பு வரும்…’’

’’எங்க துறையிலும் நல்லவங்களும் கொஞ்சபேர் இருக்காங்க சாமி..’’

’’சிறையிலும் சில நல்லவர்கள் இருப்பது போன்றுதானே…’’ என்று சிகரெட்டை அணைத்ததும், நான் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்ததை எபநேசர் புரிந்து கொண்டார்.

’’சாமி.. என்னோட மனைவி அருணா உங்ககிட்ட பேசணுமாம்…’’ என்றார்.

’’யாருடைய நலனுக்காக நீ கேட்கப் போகிறாய்?’’ என்று ஒரு இயல்பான குடும்பத் தலைவி போல இருந்த அருணாவைப் பார்த்தேன்.

’’ஏன் சாமி..?’’ என்றபடி விழித்தாள்.

’’நாத்திகர்களாக இருக்கும் சிலர் கோவிலுக்குப் போகாமல், ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வார்கள். அதேநேரம் சுதந்திரம் தருகிறேன் என்ற போர்வையில் மனைவியை மட்டும் மறக்காமல் கோவிலுக்கு அனுப்பி, அத்தனை பூஜைகளையும் சரிவர செய்ய அனுமதி கொடுப்பார்கள். அதற்கு உண்மையான காரணம் ஒரு வேளை கடவுள் இருந்துவிட்டால், அவளது தாலியை காப்பாற்றட்டுமே என்று நப்பாசைதான்.

பெண்களும் அப்படித்தான், அவர்களுக்குத் தேவையானதை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நன்றாக இருந்தால், தானும் நலமாக இருக்கலாம் என நினைத்து, எப்போதும் பிறருக்காகவே கவலைப்படுவார்கள். இப்போது உன்னுடைய கவலைக்கு யார் காரணம்?’’

’’என்னோட மகள் நாலைஞ்சு வருஷம் கழிச்சு இப்பத்தான் முழுகாமயிருக்கா. இப்போ அவளுக்கு அஞ்சு மாசம். அதான் குற்றாலத்துக்கு அழைச்சுட்டு வரலே. சென்னையில பெரிய டாக்டரிடம்தான் காட்டுறோம். ஆனாலும் பிரசவத்தை நினைச்சு ரொம்பவும் பயப்படுறா, அவளை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலை…’’ என்றாள்.

’’அதுசரி, இந்த உலகத்தில் எந்தப் பெண்ணுமே இதுவரை குழந்தையே பெற்றதில்லை. அப்படியொரு  சாதனையை உன் மகள்தானே முதன்முதலில் செய்யப் போகிறாள். அதனால் பயம் வரத்தானே செய்யும்?’’ என்று புன்னகைத்தேன். என்னோடு சேர்ந்து குடும்பத்தில் மற்றவர்களும் சிரிக்க, அருணா மட்டும் பொசுக்கென கண்ணீர் வடித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *