அமாவாசை அர்த்தஜாம பூஜை பற்றி நான் சொன்னதைக் கேட்டு கல்லூரி மாணவ பட்டாளம் அதிர்ச்சி அடைந்து நிற்க, அதுவரை வேடிக்கை பார்த்த வைத்தியநாதன் உள்ளே புகுந்தான்.
’’சாமி சும்மா கலாட்டா பண்றார். ஒரு பூவைக்கூட செடியில் இருந்து புடுங்கிறதுக்கு விரும்பமாட்டார்… பயப்படாதீங்க…’’ என்றதும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். உடனே அது விதவிதமாக கேள்வி எழுப்பினார்கள்.
’’சாமி… பூனைக்கும் பேய்க்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? எல்லா இங்கிலிஷ் படத்துலயும் அப்படித்தான் காட்டுறாங்க…” என்றான் ஒருவன்.
’’நம் மக்கள் மழை, மரம், மாடு, குரங்கு, மயில், பாம்பு, குத்துக்கல் என்று கண்ணுக்குத் தெரிந்ததை எல்லாம் கடவுளாக பார்க்கிறார்கள். ஆனால், வெளிநாட்டவர்கள் கண்களுக்கு எல்லாமே சாத்தானாகப் தெரிகிறது. அதனால் கருப்புப் பூனை, வெள்ளிக்கிழமை, பதின்மூன்றாம் எண், கல்லறைத் தோட்டம், துடைப்பம், முகம் பார்க்கும் கண்ணாடி, நிழல் என்று எல்லாமே அவர்களுக்கு சாத்தான்.
தும்மல் போட்டால் கூட ‘இறைவன் ஆசிர்வதிக்கட்டும்’ என்பார்கள். ஏனென்றால், தும்மும் போது வெளியேற முயற்சிக்கும் உயிரை, அப்படிச் சொன்னால்தான் இறைவன் நிறுத்தி வைப்பாராம். கடைசி மனிதன் இருக்கும் வரை மூடநம்பிக்கையும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் மனிதனைப் பொறுத்தவரை பிரமிக்க வைக்கும் எல்லாம் இறைவன், பயம் தருவது எல்லாம் சாத்தான். இதில் கருப்பன், வெள்ளையன் என்று வித்தியாசம் கிடையாது” என்று நான் சொல்லிக் கொண்டு இருந்தபோது, நாலைந்து போலீஸார்கள் பந்தோபஸ்துடன் ஆறேழு பேர் கொண்ட ஒரு குடும்பம் மிடுக்காக வந்தது. அதன் தலைவர் சாதாரண உடையில் இருந்தாலும் காவல்துறை உயரதிகாரி என்பது புரிந்தது.
மாணவர்கள் நடுவே என்னைப் பார்த்த ஒரு போலீஸ்காரன், என்னை பல நூற்றாண்டுகளாகத் தெரிந்தவன் போன்று கதை விட்டான்.
’’சார்…. இவர் குற்றாலத் துறவி, இவரைப் போல நிறைய பேர் காட்டுக்குள்ள திரிவாங்க..’’ என்று சுற்றுலா பயணிக்கு, கூண்டு மிருகத்தை அடையாளம் காட்டுவது போன்று என்னை கைகாட்டி விட்டு நகர்ந்தான்.
அதிகாரி தலையை மட்டும் அசைத்து என்னைத் தாண்டி நகர, அவரது மனைவி அவரை நிறுத்தி ஏதோ சொன்னார். சில நிமிடங்கள் தள்ளிநின்றபடியே வாக்குவாதம் செய்தவர்கள், அப்படியே ஒட்டுமொத்தமாக என்னிடம் திரும்பி வந்தார்கள்.
அவர்கள் என்னை நோக்கி வருவதைப் பார்த்ததும், என்னுடன் இருந்தவர்களை போலீஸார்கள் துரத்த முயல, நானும் எழுந்தேன்.
’’ஏய்… நில்லு, அய்யா ஏதோ கேட்கணுமாம்!’’ என்று என்னை ஒரு போலீஸ்காரன் தோள் தொட்டு தடுத்து நிறுத்தினான்.
உஷ்ணத்துடன் திரும்பி, ‘‘மிக நன்றாக வாலாட்டுகிறாய், இதற்குத்தான் மக்கள் பணத்தில் உனக்கு சம்பளமா… கேவலமாக இல்லை?’’ என்று கேட்டேன். என் கோபத்தை கண நேரத்தில் புரிந்துகொண்ட அதிகாரி உடனே காவலர்களை தடுத்துநிறுத்தினார்.
‘‘மன்னிச்சுக்கோங்க, அவங்க செஞ்சது தப்புத்தான்…” என்று மன்னிப்புக் கேட்கும் தொணியில் பேசினார். இந்த களேபரத்தில் மாணவர்கள் கூட்டம் நகர்ந்துவிட, வைத்தியநாதன் மட்டும் என்னுடன் நின்றான்.
‘‘வெரி ஸாரி… உங்களை தொந்தரவு செஞ்சுட்டோம்…’’ என்றபடி அருகே வந்தார்.
’’குளிப்பதற்கும் துணை தேடும் அளவுக்கு பயந்தவரா நீங்கள்?’’ என்று கேள்வியை வீசிவிட்டு மாணவனிடம் வாங்கி வைத்திருந்த சிகரெட்டை பற்றவைத்தேன். உடனே மறுபேச்சு பேசாமல் காவலர்களை ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்துவிட்டு உரையாடத் தொடங்கினார்.
’’சாமி நான் எபநேசர், சென்னையில பெரிய போலீஸ் அதிகாரியா இருக்கேன். இது என் மனைவி அருணா தேவி. இது என் பையன், மருமகப் பொண்ணு, இவன் தம்பி, அவங்க ரெண்டு பேரும் என் பையனோட ஃபிரண்ட்ஸ். நான் கிறிஸ்தவன், அருணா இந்து, ஆனாலும் எங்க காதலுக்கு மதம் குறுக்கே வரலை. ரெண்டுபேர் வீட்லயும் சிக்கல் இருந்திச்சு, ரொம்பவும் சண்டைபோட்டு காத்திருந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். நாங்க இரண்டு பேருமே அடுத்தவங்க மதத்தில தலையிடுறது இல்லை. அதனால எங்க வீட்ல இரண்டு மத பண்டிகையும் விஷேசமா நடக்குது…’’ என்று அனைவரையும் அறிமுகம் செய்தார்.
’’எனக்கும் கிறிஸ்தவத்தில் ஒரு நண்பன் இருக்கிறார்..’’ என்று புகையை வெளியே விட்டேன்.
‘‘யார் சாமி..?’’
’’அவரை உனக்கும் தெரிந்திருக்கும். ஏழைகளிடமும், குழந்தைகளிடமும் இரக்கம் காட்டுபவர். பெண்களையும், நோயாளிகளையும் கனிவோடு பார்க்கிறவர், அநியாயக்காரர்களை தைரியமாக எதிர்ப்பவர், பாவங்கள் செய்பவரை மன்னிப்பவர். அதனால் ரத்தம்கூட சிந்தியிருக்கிறார்’’
’’அப்படி ஒருத்தரா.. சென்னையிலா?’’ என்று இழுத்தார்.
’’அவர் பேர் இயேசு கிறிஸ்து..’’ என்றதும் குடும்பத்தினர்கள் ஆச்சர்யத்துடன் அருகே வந்து அமர்ந்தார்கள். எபிநேசர் படக்கென்று காலில் விழுந்தார்.