’’எங்க குடும்பத்தை ஆசிர்வதிங்க சாமி..’’ என்று காலில் விழுந்த அருணாவின் தலையைத் தொட்டு நான் ஆசிர்வதித்ததும், லேசாக முகம் சுளித்து எழுந்தாள். முதுகு வலியாகத்தான் இருக்கும் என்று கணித்தேன்.

உடனே, ‘‘உன் மகள், கணவர் நலத்திற்காக பேசிய நீ, உன்னுடைய முதுகு வலியைப் பற்றி ஏன் கேட்கவில்லை?’’ என்றதும் குடும்பத்தினர் ஆச்சர்யப்பட்டார்கள்.

’’ரொம்ப நாளாவே அவங்களுக்கு முதுகுவலி இருக்குது, டாக்டர்கிட்ட காட்டியும் சரியாக மாட்டேங்குது, நீங்க சொல்லாமலே கண்டுபிடிச்சிட்டீங்களே சாமி…’’ என்று மருமகள் ஆச்சரியப் பட்டாள்.

’’ஆமா சாமி, முதுகுவலி மட்டுமில்ல, அவ்வப்போ வயிறு வலியும் வந்திடுது. என் கண்முன்னாலேயே என் பொண்ணு நல்லா இருக்கிறதை பார்த்துட்டா போதும், சந்தோஷமா செத்துப்போவேன்’’  என்றாள்.

’’வலியில் துடிப்பவர்களுக்கு எந்த மந்திரமும், ஆசிர்வாதமும் உபயோகப்படாது. அவர்களுக்குத் தேவை நம்பிக்கை மட்டும்தான்’’

’’நம்பிக்கை என்றால்…’’

’’இந்த நோய் விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வரவேண்டும். நோயுடன் இருப்பது குறித்து கவலையோ, வெட்கமோ தேவையில்லை. உடலின் ஒரு பகுதியாக நோயையும் எடுத்துக்கொண்டு, அதனையும் சேர்தே பராமரியுங்கள். இன்னும் செய்து முடிக்க பணிகள் ஏராளமாக காத்திருக்கிறது என்று நோயாளிகள் மனதார நம்ப வேண்டும். உங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத நபர் என்ற நினைப்புடன் நோயை எதிர்கொண்டால், நோய் விரைவில் தீர்ந்துவிடும்…’’ என்றதும் அருணாதேவி முகத்தில் சந்தோஷ ரேகை பரவியது.

’’தினமும் மந்திரம் போன்று, ‘என் நோய் தீர்ந்துவிடும், நான் இந்த வீட்டுக்கு முக்கியமான நபர், நான் மிக நம்பிகையுடன் இருக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரு.. உன் கண் முன்னாலே நோய் தீர்ந்துவிடும்’’ என்று சொல்லி எழ முயற்சித்தேன்.

அப்போது எபநேசரின் மகன், அவரது நண்பரை அறிமுகம் செய்துவைத்தார்.

’’சாமி, இவன் என்னோட நண்பன் ராகவன். என்னோட சேர்ந்து பிசினஸ் பண்றார். ரொம்பவும் நல்லவர் ஆனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இவரை கொஞ்சம் திருத்துங்களேன்…’’ என்றார்.

’’கடவுளைக் கும்பிட உங்களுக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ, அத்தனை உரிமை அவர்களுக்கு மறுக்கவும் இருக்கிறது. இந்த உலகில் முழுமையான ஆத்திகர், முழுமையான நாத்திகர் என்று எவருமே கிடையாது. கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பவர்களும் ஏதாவது ஏமாற்றம், தோல்வி கிடைக்கும்போது, ‘உண்மையில் கடவுள் இருக்கிறாரா?’ என்று மனதின் ஓரத்தில் விசனப்படுவதுண்டு. அப்படியேதான் நாத்திகர்களும் சோதனை ஏற்படும்போது, கடவுள் லீலையோ என்று பயப்படுவதுண்டு. இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை, எவரையும் திருத்தவேண்டிய அவசியமும் இல்லை’’  என்றேன்.

நாத்திகன் என்றதும் நான் ஆவேசமாக வாக்குவாதம் செய்வேன் என்று எதிர்பார்த்த ராகவன் ஏமாற்றமடைந்தான்.

ஆனாலும் ‘‘கடவுள் இல்லை என்பதுதானே அறிவியல்!’’ எனக் கேட்டான்.

’’அதுதான் உனக்கு சந்தோஷம் என்றால் அப்படியே வைத்துக் கொள். இந்த பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்று அந்தக் காலத்து விஞ்ஞானிகள் சொன்னார்கள். அதன்பிறகு பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றார்கள். உடனே நம்புகிறோம். இந்த அறிவியல் கண்டுபிடிப்பையும் முழு உண்மையென்று சொல்ல முடியாது. ஒரு வேளை இந்த பிரபஞ்சம் முழுவதுமே, வேறு ஏதாவது ஒரு பிரபஞ்சத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பதாக இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கலாம். அறிவியல் நிலையானது அல்ல, நாளுக்கு நாள் மாற்றம் அடையக் கூடியது. ஆனால் கடவுள் விஷயம் அப்படியல்ல’’  என்றேன்.

’’அதெப்படி சாமி… கடவுள் பூமியை படைச்சதா சொல்றீங்க. ஏதாவது ஒன்று இருந்தால்தானே அதில் இருந்து இன்னொன்று படைக்க முடியும். இந்த பூமியை இறைவன் படைச்சாருன்னா, ஏற்கெனவே இந்த பூமியும் கிரகங்களும் வேறு ஏதாவது ஒரு வகையில் இருந்திருக்க வேண்டுமே…’’ என்று கேட்டான்.

’’ஒரு தவளையின் மூளைக்கு கிணறுதான் சமுத்திரம். அதைவிட பெரியதாக கற்பனை செய்ய அதற்குத் தெரியாது, முடியாது. அப்படித்தான் மனிதர்களின் மூளைகளுக்கு கட்டுப்படாததும், எட்ட முடியாததும் எத்தனையோ இருக்கிறது. உன் வீட்டில் நீண்ட காலம் வசிக்கும் பல்லியால் உன் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடியுமா? அதுபோல இந்த பிரபஞ்சத்தையும் கடவுளையும் முழுமையாக அறிந்துகொள்ளும் அளவுக்கு மனித மூளை இன்னமும் விசாலமடையவில்லை. அதனால் உன்னுடைய மூளைக்கு எது சரியெனப் படுகிறதோ அந்த பாதையில் தொடர்ந்து செல்’’ என்று பேச்சை முடித்துக் கொண்டேன்.

எபநேசரின் மகன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து என் கையில் திணித்தபடி ஒரு கேள்வி கேட்டான்.

’’சாமி… நானும் காதல் திருமணம்தான். ஆனா… எங்களுக்குள்ள இப்போ அடிக்கடி சண்டை வருது. ஆனா நான் அவளை நேசிக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறா…’’ என்றான். அவன் சொல்வது உண்மை என்பதுபோலவே அவனது மனைவியும் அருகே வந்து நின்றாள்.

’’இந்த உலகிலேயே ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றால், காதலர்கள்தான். ஏனென்றால் காதலி வைத்திருந்த காய்ந்து போன பூ, ஒரு காதலனுக்கு ஆயிரமாயிரம் சந்தோஷம் தரும். காதலன் தனக்காக முன்கூட்டியே காத்திருப்பதைப் பார்த்தாலே காதலிக்கு ஆனந்தக் கண்ணீர் முட்டிக் கொள்ளும். இத்தனை எளிதான சந்தோஷம் காதலில் மட்டுமே சாத்தியம். காதலில் இருந்து திருமணத்திற்குப் போனபின்னரும் அதே அளவு மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறீர்கள், அது கிடைக்காத போது ஏமாற்றமும் துன்பம் வருகிறது.

திருமணம் முடித்ததும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதால் அடக்குவதும், அதிகாரம் செலுத்துவதும் நிகழ்கிறது. பிரிந்து விடக்கூடாதே என்ற பயம், நமக்கு மட்டுமே சொந்தம் என்ற உரிமையால், ஒருவரை ஒருவர் கட்டுப் படுத்த நினைக்கிறார்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற சிந்தனையில் இருவரும் பயத்தை விடுங்கள், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுங்கள், சுதந்திரம் கொடுங்கள். யாரையும் யாரும் கட்டுப்படுத்தாமல் சந்தோஷமாக இருங்கள்…’’ என்று நான் சொன்னபோது, மரத்தின் பின்பக்கம் இருந்து யாரோ கூர்ந்து பார்ப்பது போன்று தோன்றவே திரும்பிப் பார்த்தேன்.

என்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் நொண்டிச் சாமியார். எபநேசர் குடும்பத்தினர் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தை புடுங்கிக் கொண்டு அவரை நோக்கி நடந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *