கண்ணாடியில் முகம் பார்த்தபோது முகத்தில் சுருக்கம் தென்பட்டது. இந்த வாரம் பியூட்டி  பார்லர் போகவேண்டும் என்ற எண்ணத்துடன்  பொட்டு வைத்துக்கொண்டு, ஹேண்ட்பேக்குடன் ஸ்கூட்டிக்கு அருகே சென்றபோது செல்போன் அடித்தது. என் தோழி கிருஷ்ணவேணியின் கணவர் ராகவன் பேசினார்.

’’திடீர்னு கிருஷ்ணவேணி மயங்கி விழுந்துட்டா… டாக்டர்கிட்டே போயிட்டு வந்தோம். இப்போ பைத்தியம் பிடிச்சவ மாதிரி கத்துறா … இல்லைன்னா பேசவே செய்யாம கம்முன்னு இருக்கா…  நீங்க கொஞ்சநேரம் வந்துட்டுப் போகமுடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டார். அலுவலக வேலையை கொஞ்சநேரம் தள்ளிப்போட முடியும் என்பதால் சம்மதித்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தேன். நான் கிருஷ்ணவேனிக்கு தோழி என்பதுடன் உறவும்கூட. அதனால்தான் என்னை அழைத்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் அவள் வீடு நோக்கி சென்றேன்.

கிருஷ்ணவேணிக்கு ஒரே மகன். அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டு விரும்பிய பெண்ணை திருமணம் செய்துவைத்தாள். பேரன் பிறந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டாள். மகனும் மருமகளும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தான் பார்த்துவந்த அரசுப் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றுக்கொண்டு பேரனை கவனித்து வருகிறாள்.  அவளது கணவர் ஏற்கெனவே ஓய்வு பெற்றவர் என்பதால் இருவருக்கும் பேரனை வளர்ப்பதுதான் ஒரே வேலை.

எப்போது போனில் பேசினாலும், பேரன் புகழ் பாடுவதுதான் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் பார்த்தபோது நன்றாகத்தான் இருந்தாள், திடீரென என்ன பிரச்னையோ என்றபடி  அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். அவள் கணவர் மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததும்  ஒரு பை எடுத்துக்கொண்டு  வீட்டைவிட்டு வெளியேறினார். பேரன் பள்ளிக்குப் போயிருப்பான் என்ற எண்ணத்துடன் கிருஷ்ணவேணியைத் தேடினேன்.

உள்ளறையில் படுத்திருந்த கிருஷ்ணவேணி எழுந்துவர முற்பட, அவளை தடுத்து நிறுத்தி மீண்டும் படுக்க வைத்தேன். என்னைப் பார்த்ததும் அவள் கண்களில் இருந்து அவளையறியாமல் கண்ணீர் கொட்டியது. ஆறுதலாக அவள் கைகளைத் தடவிக்கொடுத்தேன்.

’’என்னடீ… மயக்கமாயிட்டியாம்… பேச மாட்டேங்கிறியாம்..?’’

’’நான் என் பையனை சரியா வளர்க்கலைடி…’’ என்றபடி மீண்டும் அழத் தொடங்கி விசும்பலில் முடித்தாள். சாதாரண குடும்ப பிரச்னை என்று தெரியவந்ததும் நிம்மதியாக இருந்தது.

’’என்னாச்சு… பொண்டாட்டிக்காக உன்னை திட்டிட்டானா?’’

’’அப்படி இருந்தாலும் பரவாயில்லை, ரெண்டு பேரும் வெளிநாட்ல போய் செட்டில் ஆகப் போறாங்களாம்..”’ என்றபடி தலையைக் குனிந்து அழுதாள்.

அவள் சொன்ன தகவல்  எனக்கும் சங்கடமாக இருந்தது. ஏனென்றால் இதுவரை மகனே உலகம் என்று வாழ்ந்துவந்தாள். இப்போது பேரனைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் வேண்டாம் என்று வாழ்கிறாள். இந்த நிலையில் மகன் குடும்பத்துடன்  வெளிநாடு சென்றால் என்னாகும் என்ற அச்சம்தான் அவளை பாடாய் படுத்துவதை உணர முடிந்தது.

’’ஏனாம்… புரமோஷன் வந்திருக்கா..?’’

’’ம்… இந்தியாவுல ரொம்பவும் டஸ்ட் இருக்குதாம் பிள்ளைக்கு நல்ல ஸ்கூல் இல்லையாம். அதனால போறாங்களாம். எல்லாம் மருமக ஏற்பாடுதான். அவ கம்பெனியில அமெரிக்காவுக்கு அனுப்புறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அங்கேபோய் வேலை தேடிக்கிறேன்னு சொல்றான்… எல்லாம் அவ சொல்லிக்குடுத்து மயக்கிட்டா. தனியா ராஜ்ஜியம் செய்ய ஆசைப்படுறா..’’

‘’சரி, நீயும் உன் மகன்கூடவே போய் இருந்துக்கோ…” என்றேன்.

‘’மகனுக்கு வேலை கிடைச்ச பிறகு கூப்பிடுறேன்னு சொல்றான். ஆனா, அங்கே போய் நாங்க என்ன செய்றது? எங்களை மதிக்காம போறாங்க. ரெண்டுபேருக்கும் சுயநலம் அதிகமாயிடுச்சு…. எங்க மேல அன்பே இல்லை.  நீ கொஞ்சம் என் மகன்கிட்டே பேசேன். அம்மாவால தனியா இருக்க முடியாதுன்னு சொல்றியா?’’ கேட்டு என் முகத்தைப் பார்த்தாள்.

கொஞ்சநேரம் யோசித்தேன். சிக்கலுக்கு விடை புரிந்தது.

’’ஆமா, நீ எதுக்கு ராமநாதபுரத்துல இருந்து சென்னைக்கு வந்தே…?’’

’’ம்… அவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. என் பையனுக்கு ராமநாதபுரத்தில நல்ல ஸ்கூல் இல்லைன்னு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம்…’’

‘’அன்னைக்கு உன் மாமியார், மாமனார் இல்லைன்னா உங்க அம்மா  நிலைமையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா, அன்னைக்கு உன் சுயநலத்துக்குத்தானே முடிவு எடுத்தே..”

கொஞ்சநேரம் யோசித்தாள். ‘’ம்… அன்னைக்கும் என் பையனுக்காகத்தான் வந்தேன். அப்போ என் மாமனாருக்கு இன்னொரு பையன் ராமநாதபுரத்திலே இருந்தான். அதனால்தான் நாங்க தைரியமா வந்துட்டோம்…”

’’இது சரியான பதில் இல்லைன்னு உனக்கே தெரியும். உன்னை மாதிரியே உன் பையனும்  அவன் பிள்ளையை  நல்லா வளர்க்க ஆசைப்படுறான். அதை மட்டும் ஏன் சுயநலம்னு சொல்றே…’’

’’இங்கேதான் எல்லா வசதியும் இருக்கே…’’

’’ஏன் ராமநாதபுரத்துல ஸ்கூலே இல்லையா? அங்க படிக்கிறவங்க மனுஷங்க இல்லையா…? நீ எப்படி உன் மகன் மேலே அன்பா இருக்கியோ, அப்படித்தான் உன் மகன் அவனுடைய மகன் மேல உயிரா இருக்கான். அவன் ஆசைப்படி விட்ருப்பா.. அதுக்குப் பேர் சுயநலம் இல்லே, அன்பு. நீ அன்பை கேட்டு வாங்க முடியாது. அது தானா வரணும். இப்போ உன் மகனுக்கு அவன் பிள்ளைதான் முக்கியம்னு தோணுது. எப்போ அம்மா முக்கியம்னு தோணுதோ அப்ப அவன் திரும்பிவருவான்….’’

’’அப்படி வரலைன்னா…..’’

’’நீ அவனைத் தேடிப் போ. அவன்கூட போய் தங்கு. பிடிக்கலைன்னா இங்கேயே இரு. பிள்ளை பெறாத தம்பதிங்க யாருமே இந்த உலகத்திலே இல்லையா என்ன? இவ்வளவு நாளும் பிள்ளை, பேரன்னு வாழ்ந்துட்ட. இனியாவது உனக்குன்னு வாழு… தேவையில்லாம அவங்க வாழ்க்கையில குறுக்கே நிக்காதே…’’

‘’நாளைக்கு எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அவனால வரக்கூட முடியாதே….. அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால போகவும் முடியாது….’’

’’நல்லதை மட்டும் நினை… நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்…’’ என்றபடி எழுந்தேன். இப்போது அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்திருந்தது. ஏனென்றால் நான் விபத்தில் கணவனையும் மகனையும் பறிகொடுத்துவிட்டு தனியாகத்தான் வாழ்ந்துவருகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *