வயசில் என்னதான் இருக்கிறது..?

’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். 50 வயதைத் தொட்டவுடன், நான் சின்னப் பிள்ளையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஆசைப்படுகிறேன். ஏன் இப்படி என் மனது மாறிவிட்டது…’’ என்று கேட்டார் மகேந்திரன்.

புன்னகையுடன் பேசத்தொடங்கினார் ஞானகுரு. ’’கையில் இருக்கும் ஒன்றின் மதிப்பு எந்த மனிதனுக்கும் தெரிவதில்லை. எட்டாத உயரத்தில் இருப்பதற்கு  ஆசைப்பட்டு, கையில் இருப்பதையும் அனுபவிக்கத் தவறுகின்றனர். வயதும் அப்படித்தான். இக்கணத்தில் வாழு என்று எத்தனையோ ஞானியரும், ஆய்வாளர்களும் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால், எதிர்காலத்துக்கு ஏங்குவது அல்லது பழைய கால அனுபவங்களுக்கு ஆசைப்பட்டு நிகழ்காலத்தை துன்பத்தில் ஆழ்த்திக்கொள்வதுதான் மனிதனுக்குப் பிடித்திருக்கிறது’’

‘’ஏன் அப்படி..?’’

‘’மனிதன் பொதுவாகவே எதிர்மறை சிந்தனையாளன். எல்லாம் நல்லதாகவே நடந்தாலும், ‘ஏன் இப்படி நல்லதாகவே நடக்கிறது… கடைசியில் பெரிய சிக்கல் வருமோ’ என்று அச்சப்படுவான். இந்த எதிர்கால அச்சத்தையும், ஆர்வத்தையும் களைவதுதான் மனிதனின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்…’’

‘’ஆனால், ஐம்பது வயதுக்குப் பிறகு அச்சம் வரத்தானே செய்கிறது..?’’

‘’ஐம்பது என்பது ஒரு எண்ணிக்கைதான். இன்னும் நீ எத்தனை ஆண்டு வாழப்போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. உன் உடல் இனி கொஞ்சம் கொஞ்சமாக பலமிழந்து போகலாம், தளர்ந்து போகலாம். ஆனால், உன் மூளை ஒருபோதும் சோர்வடையாது. அது, பலத்தை இழப்பதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் 50 வயதுக்குப் பிறகுதான் மூளை அதிகம் யோசிக்கிறது.  பலருக்கும் வாழ்க்கையின் சூத்திரங்கள் இந்த வயசுக்குப் பின்னரே பிடிபடுகின்றன.   

50 வயதுக்குப் பிறகும் புதிதாக எதையேனும் கற்றுக்கொள்ள ஆசைப்படு. அதனால், என்ன ஆகும் என்ற கேள்வி அர்த்தமற்றது. புத்தம் புதிய நபர்களுடன் பழகு. முதியவர்களைக் கண்டால், அவர்களுக்கு ஊக்கம் கொடு. அவர்களுடன் சேர்ந்து அரட்டைக் கச்சேரி அடிப்பது சோர்வடையச் செய்துவிடும்.

குறிப்பாக 50 வயதுக்குப் பிறகு கச்சிதமான ஆடை அணிவதில் பலரும் அக்கறை செலுத்துவதில்லை. மனசுக்குப் பிடித்த அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்து. நரை, வழுக்கை போன்றவற்றை இயற்கையாக ஏற்றுக்கொள்.

முடிந்தால் நிறைய பயணம் செய்து, மூளைக்குத் தீனி போடும் வகையில் புதிய விஷயங்களைத் தேடு எப்போதும் சிரித்துக்கொண்டிரு. சோதனைகளை, நோய்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள். தினமும் ஒரு மணி நேரமாவது நடப்பதற்கு முயற்சி செய். உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேவையானதை செய்துகொடு. பணமாக இல்லையென்றாலும், அவர்களுடைய குறைகளை, சோதனைகளை காது கொடுத்துக் கேள். அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை மட்டும் வளர்த்துக்கொண்டே இரு. அப்படி ஏதாவது நடந்தால் நல்லது. நடக்காவிட்டாலும் நல்லதுதான்…’’ என்று முடித்தார்.

மகேந்திரனுக்கு முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.


Contact Us skmnila1@gmail.com

© 2020 www.gyanaguru.com. All Rights Reserved.

Designed and Developed by www.infords.com
Scroll To Top