மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்துசேர்ந்தார் ஞானகுரு. அவரே மழையைக் கொண்டுவந்தது போன்ற சந்தோஷத்தில் திளைத்தார். பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த ஞானகுரு, கொஞ்சநேரத்தில் வேறு ஒரு ஆடையுடன் தலையைத் துவட்டியபடி வெளியே வந்தார். இன்னமும் அவர் முகத்தில் மழையின் மகிழ்ச்சி இருந்தது.

‘’சாமி… நீங்க மழையில நனைஞ்சிட்டு ஜாலியா வர்றீங்க.. ஆனா, எங்களுக்கு மழையில நனைஞ்சா காய்ச்சல் வருது இல்லைன்னா அச்சூ அச்சூன்னு ஜலதோஷம் வருது… ஏன்?’’ என்று கேட்டார் மகேந்திரன்.

‘’எந்த மழையும் நோயைக் கொண்டுவருவதில்லை. மழை நீரில் நோய்க் கிருமிகள் இருக்கிறது என்றால் மழை பெய்த அடுத்த தினம், அதில் நனைந்த அத்தனை விலங்குகளும், பறவைகளும் ஏன் பயிர்களும் காய்ச்சலில் கிடக்க வேண்டுமே…’’ என்று சிரித்தார். அந்த பதில் மட்டுமே போதாது என்று நின்றார் மகேந்திரன்.

‘’மழை நீரைவிட தூய்மையானது உலகில் வேறு எதுவுமில்லை. அதில் இருக்கும் பிராண சக்தி உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உன்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்,.

மழை நீரில் இருக்கும் அதிகமான பிராண சக்தியை உறிஞ்சும் உடல் செல்கள், உடலுக்குள் தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத்தான் தும்மலாக, சளியாக, காய்ச்சலாக வெளிப்படுத்துகிறது இதை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. மழை உன் உடலுக்கு நன்மையே செய்கிறது. அதனால் மழையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, மழையைக் கண்டு அச்சப்படாதே…

மழை நீர் நிலத்தில் விழும் முதல் சில நிமிடங்களில் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் வெளியேறலாம். மேலும் காற்றில் மிதந்திருக்கும் தூசுகளும் கலந்து வரலாம். அதனால், மழை பெய்யத் தொடங்கும் நேரத்தில் அல்லது வெறுமனே சாரலாக இருக்கும்போது நனைய நினைக்காதே. சில நிமிடங்களில் அது பலத்த மழையாக மாறும் வரை காத்திரு. அதன்பிறகு உடல் குளுமையடையும் வரையிலும் தைரியமாகக் குளிக்கலாம்.

உன் குழந்தையை சின்ன வயதில் இருந்தே மழையில் நனைவதற்கு அனுமதி கொடு. ஆனால், ஈரம் படிந்த ஆடையுடன், தலைமுடியுடன் நீண்ட நேரம் இருக்கத் தேவையில்லை. ஏற்கெனவே உடலில் ஏதேனும் அலர்ஜி, நோய் பாதிப்பு இருக்கும்போது, மழையை வேடிக்கை பார். அதுவே மருந்தாக இருக்கும்’’ என்று முடித்தார்.

இனி, மழை எப்போது வரும் என்று எட்டிப் பார்த்தார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *