’’பெரும்பாலான நாட்கள் கனவு வருகிறது. நான் நினைத்தது, நினைக்காதது, யோசிக்கவே முடியாதது என்று எத்தனையோ விதமான கனவுகள் வருகின்றன. கனவு கண்டு விழித்து எழும்போது உடல் அத்தனை அயர்ச்சியாக இருக்கிறது. கனவை நிறுத்த எந்த மருந்தும் இல்லை என்று மருத்துவர் கையை விரித்துவிட்டார். உங்களுக்காவது கனவை நிறுத்தும் வழி தெரியுமா?’’ மகேந்திரன் ஆர்வமுடன் கேட்டார்.

‘’தெரியும். அதனை பின்னர் சொல்கிறேன். கனவு பற்றிய அச்சம்தான் உன்னை தினமும் கனவு காணத் தூண்டுகிறது. ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கே அதிக கனவுகள் வருகின்றன. அதிக எடையுள்ளவர்கள், நோயாளிகள், குடிகாரர்கள், முதியவர்கள், குழந்தைகள், அதிகம் தூங்குபவர்களுக்கு கனவு வருவது சகஜம்தான். தூக்கம் உன் கண்களைத் தழுவும் வரையிலும் உனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு செயலை செய்துகொண்டிரு. அதன்பிறகு தூங்கச்செல்… நிம்மதியான உறக்கம் நிச்சயம். அதையும் மீறி கனவு கண்டால், அதனை கண்டுகொள்ளாதே. என்ன கனவு வந்தது என்று யோசிக்கவும், அதற்கான பலன் அறியவும் முயற்சிக்காதே…’’ என்றார் ஞானகுரு.

இந்த பதில் மகேந்திரனுக்கு அத்தனை திருப்தி தரவில்லை. ‘’கிருஷ்ணர், இயேசு போன்றவர்கள் பிறந்த நேரத்தில் கனவு வந்திருக்கிறது. அப்படியென்றால், கனவு என்பது அடுத்து வருவதை முன்கூட்டிச் சொல்வதுதானே..?’’

‘’இது நல்ல கேள்வி. இதிகாசங்களைப் படித்துவிட்டு, அதன் உண்மைத்தன்மையை ஆராயாதே. எல்லா கதைகளும் கனவுகளும் சுவாரஸ்யம் கொடுப்பவை மட்டுமே. பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கிப் போனது, நரி அதனை ஏமாற்றி வடையைப் பிடுங்கியது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு கதை. அதனை நீ இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறாய் என்பதற்காக அது உண்மையாகிவிடுமா?

நீயே நினைத்தாலும் நீ மூச்சுவிடுவதை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. அப்படித்தான், கனவுகளையும் மனிதனால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அது பற்றி சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்க முடியும்,

உன் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் ஆசைகளும், அன்றாட வாழ்வில் நடக்கும் செயல்களும் ஏதோ ஒரு இடத்தில் உரசிக் கொள்ள நேர்ந்தால் உண்மை போலவே தோற்றமளிக்கும் கனவுகள் தோன்றலாம். உண்மை தெரியுமா? யாரோ துரத்துவதாகவும், மிகவும் தாமதமாகச் செல்வதாகவும், எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும், பாலியல்களும், பறப்பது போலவும், பாம்புகளும், தோல்வியடைவது போலவும் கனவுகள்தான் மனிதர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால் மனம் என்பது ஒரு குப்பைத்தொட்டி. அதில் நீ வேண்டாம் என்று தூக்கிப்போட்டவையே மீண்டும் கனவாக வருகின்றன. குப்பையை மீண்டும் பயன்படுத்த நினைக்காதே…’’’ என்று முடித்தார்’

‘’குருஜி, கனவை நிறுத்த வழி..?’’

‘’நீ தினமும் கனவு காணவேண்டும் என்று ஆசைப்படு. இன்று ஒரு நடிகையுடன் சல்லாபம் களிக்க வேண்டும் அல்லது உன் எதிரியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என ஏதேனும் ஆசையை மனதில் நினைத்துக்கொண்டே படு…’’

‘’அப்படிப் படுத்தால்..?’’

‘’கனவுகள் காணாமல் போய்விடும்…’’ ஞானகுருவின் சிரிப்புக்குப் பின்னே பல அர்த்தங்கள் பொதிந்துகிடந்தன.

Leave a Reply

Your email address will not be published.