மகேந்திரன் அழைத்துவந்த நபருக்கு 50 வயது இருக்கலாம். பணக்காரத் தோரணை இருந்தாலும், அவர் முகத்தில் துளியும் சந்தோஷம் தென்படவில்லை. ஆசிர்வாதம் வாங்கியதும் பேசத் தொடங்கினார்.

‘’எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் பாகப்பிரிவினையில் சமமான பங்குதான் கிடைத்தது. என் சகோதரன் கிடைத்த பணத்தை நான்கு மடங்காகப் பெருக்கிவிட்டான். ஆனால், நான் இருப்பதை காப்பாற்றவே தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். இருவரும் அப்பாவிடம் ஒன்றாகத்தான் வணிகம் பயின்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் கூடுதலாக சில ஆண்டுகள் அனுபவம் உள்ளவன்’’ என்று நிறுத்தினார்.

‘’உன்னிடம் இல்லாத ஏதேனும் ஒரு குணம் உன் சகோதரரிடம் இருக்கிறதா..? நிதானமாக யோசித்து சொல்…’’

கொஞ்சநேரம் யோசித்தவர், ‘’எம் சகோதரர் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே ஒரு பேட்மிண்டன் பிளேயர், இப்போதும் தினமும் காலை, மாலை நேரங்களில்  விளையாடுகிறார்…’’

‘’நீ,,?’’

‘’நான் தினமும் யோகா, தியானம், பூஜை என்று காலை நேரத்தை ஒதுக்கிக்கொள்கிறேன். ஊரில் நடந்தால் நேரில் போய்விடுவேன் அல்லது தொலைக்காட்சியில் ரசிப்பேன்..’’

‘’உன் சகோதரர் வெற்றிக்காக போராடுகிறார், நீ தோல்வியை ரசிக்கிறாய்…’’ என்று ஞானகுரு சொல்ல, அர்த்தம் புரியாமல் புருவம் உயர்த்தினார்.

‘’விளையாட்டை ரசிக்கும்போது, உனக்குப் பிடித்த அணி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, எதிரே விளையாடும் அணி எப்படியும் தோற்கவேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கும். வெற்றி அடைந்தவர் மகிழ்ச்சியைப் பார்ப்பதைவிட, தோல்வி அடைந்தவர்களின் முகத்தையும், அவர்களுடைய சோகத்தையும் கண்டு ரசிக்கவே ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். . எதிரணி தோற்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அப்படி நடந்தால் அந்த தோல்வியைக் கொண்டாடுகிறார்கள். இந்த மனநிலை உன்னுடைய வணிகத்திலும் எதிரொலிக்கும்.

தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் உன்னை தைரியமாக வணிகம் செய்வதற்கு விடாது. உன் சொத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவே போராடுகிறாயே தவிர, அதை பகடைக்காயாக வைத்து வெற்றி அடைய நினைக்கவில்லை.

உன் சகோதரரைப் போன்று வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நீயும் ஒரு விளையாட்டு வீரனாக மாற வேண்டும். அப்போதுதான் உனக்கும் வெற்றி கிடைக்கும். தோல்வியும் கிடைக்கலாம். ஆனால், அது உன்னை அனுபவஸ்தனாக மாற்றி மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு செல்லும்… நீ விளையாடு அதுதான் வணிகம்’’ என்றார் ஞானகுரு.

சொத்தை பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற தன்னுடைய கோட்பாடுதான் வெற்றிக்கு இடைஞ்சல் என்பது புரிந்ததும் தைரியமாக கிளம்பினார் செல்வந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *