மனசுக்குள் மலையளவு பாரம் இருப்பது போன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார் நடுத்தர வயது மனிதன் ஒருவர். அவருடைய தோளைத் தொட்டதும் ஞானகுருவின் முகத்தைப் பார்த்தார். பேச இயலாமல் அவர் தவிப்பதை புரிந்துகொண்டதும், அவரது இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளால் பிடித்துக்கொண்டு பேசத் தூண்டினார்.

‘’சாமி…. எனக்கு லேட் மேரேஜ். ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்க இன்னமும் மிடில் ஸ்கூலே தாண்டலை. என்னோட மனைவியை கிராமத்தில் இருந்து கட்டிக்கிட்டு வந்தேன். படிப்பும் அவளுக்குக் கிடையாது. இப்போ, எனக்கு கேன்சர் இரண்டாவது நிலையில் இருக்குதுன்னு டாக்டர் சொலியிருக்கார். என்னை நம்பி வந்திருக்கும் மனைவி, குழந்தைகளை நான் என்ன செய்யமுடியும்… கடவுள் என்னை ஏன் கைவிட்டார்?’’ பேசி முடிக்கும் முன்னரே கண்களில் நீர் வழிந்திருந்தது.

’’இதுவரை வாழ்க்கையில் நடந்தது எல்லாமே நீ நினைத்ததுதானா..?’’

‘’இல்லை குருவே…. எனக்கு அரசு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கருதினேன். ஆனால், ஒரு பைசாகூட செலவில்லாமல் வேலை கிடைத்துவிட்டது. அதேபோன்று திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இனி, அவ்வளவுதான் என்று நினைத்திருந்த நேரத்தில் அதிர்ஷ்ட புதையல் போன்று அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். இனி, எல்லாமே சந்தோஷம்தான் என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென கேன்சர்…. நான் என்ன செய்வது..?’’

‘’நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். உனக்கு கேன்சர் இருப்பதாகச் சொல்வது வெறுமனே மருத்துவத் தகவல் மட்டும்தான். புற்றுக் கிருமிகள் உன் உடலில் மட்டுமல்ல, எல்லா மனிதனின் உடலுக்குள்ளும்தான் ஒளிந்திருக்கிறது. ஆனால், அது உயிரை எடுக்குமா இல்லையா என்பது மருத்துவர் கையில் கிடையாது, காலத்தின் கையில்தான் இருக்கிறது.

அதனால், மரணத்தைப் பற்றிய கவலையைத் தள்ளிப்போடு. ஏதேனும் பாவம் செய்த காரணத்தால்தான் இப்படி ஒரு தண்டனையா என்று கலங்கி நிற்காதே.  காலம் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது. எது கிடைத்தாலும் அதற்கு நன்றி சொல். இந்த நோயை நீ வெல்லவும் வாய்ப்புள்ளது.

நீ கவலைப்படுவதால் மட்டும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால், நம்பிக்கை வைத்தால் உன் உடலே மருந்தாக மாறி, நோயை விரட்டிவிடும். ஆகவே, இந்த நோயும் விலகிவிடும் என்பதை மந்திர ஜெபமாக சொல். அடுத்து நடப்பதை காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடு, மருத்துவர்கள் அவர்கள் கடமையைச் செய்யட்டும், நீ உன்னுடைய நம்பிக்கையை ஒரு போதும் கைவிடாதே’’ என்று சொன்னதும் முகத்தில் தெளிச்சி வந்தது.

‘’நான் மரணத்தில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளதா..?’’

‘’மரணத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. இன்று நீ நாளை நான் என்பதுதான் மரண தத்துவம். ஆனால், நீ உன் மரண நாளை தள்ளிப்போட வாய்ப்பு உண்டு”” என்று சொல்லி முடித்தார்.

நம்பிக்கையுடன் அவர் சென்றதும், மகேந்திரன் ஞானகுருவின் அருகே வந்தார்.

‘’புற்று நோயில் மரணம் அடைய இருப்பவருக்கு இப்படி ஆறுதல் சொல்லி ஏமாற்றுவது தவறு இல்லையா..?’’

‘’ஆறுதலைவிட அற்புதமான மருந்து இந்த உலகில் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை மகேந்திரா’’ என்றபடி கண்களை மூடினார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published.