பூக் கடையில் மஞ்சள் நிற ரோஜாப்பூவைப் பார்த்ததும் மஞ்சுளாவின் ஞாபகம் வர, சட்டென ஸ்கூட்டியை நிறுத்தினாள் பார்கவி. பேரமே பேசாமல் இரண்டு மஞ்சள் ரோஸ் வாங்கி, அது கசங்கிவிடாமல் கேரிபேக்கில் பத்திரப்படுத்தினாள்.
தோழி மஞ்சுளாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிவிட்டது. மாமனார், மாமியாருடன் பக்கத்து ஏரியாவில்தான் குடியிருக்கிறாள். ஏழெட்டு முறை அவள் கூப்பிட்டும், போவதற்கு வாய்ப்பில்லை. இப்போதே போய்விடலாம் என்று முடிவு செய்தாள்.
உடனே மருத்துவமனைக்கு போன் செய்து, அரை மணி நேரம் தாமதமாக வர நேரிடும் என்று தகவலை சொன்னாள். காலையில் வேறு சில டாக்டர்களும் இருப்பார்கள் என்பதால், தேட மாட்டார்கள். மஞ்சுளா சொல்லியிருந்த முகவரியை மனதுக்குள் கொண்டுவந்து, வண்டியைத் திருப்பினாள். பள்ளி காலத்து பழக்கம். கல்லூரியில் மஞ்சுளா பி.காம். படித்து வங்கி வேலைக்குப் போய்விட்டாள். பார்கவி மருத்துவம் முடித்து இப்போதுதான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்.
சிந்தனையுடன் வண்டியோட்டினாலும், எளிதாக வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாள். பெரிய வீடாக இருந்தது. காலிங் பெல் அடித்தாள். சற்று நேரத்தில் ஒரு வயதான பெண் வந்து கதவைத் திறந்தாள். மஞ்சுளாவின் மாமியார் அது. திருமணத்தில் மேக்கப் போட்டு இளமையாகத் தெரிந்தாள்.
புன்னகை சிந்தியபடி, ’’ஆண்ட்டி நான் பார்கவி. உங்க மருமகப் பொண்ணு மஞ்சுவோட ஃப்ரெண்ட். அவ இருக்காளா?’’ என்று கேட்டாள்.
‘’யாரு… டாக்டரா இருக்கேன்னு சொன்னாளே… ”” என்று கேட்பதற்குள் ஓடோடி வந்தாள் மஞ்சுளா.
‘’அத்தை என் ஃப்ரெண்ட். வா.. உள்ளே வா”” என்று கையைப் பிடித்துக் கொண்டாள். ‘’அத்தை எங்க ரூமுக்குப் போறோம்…” என்றபடி மாடிக்கு இழுத்துப் போய் சோபாவில் உட்கார வைத்தாள்.
‘’அப்பாடி கிழத்துக்கிட்டே இருந்து தப்பிச்சாச்சு”” என்று சிரித்தாள்.
‘’ஏய்.. மாமியாருக்கு மரியாதை கிடையாதா… ரொம்பவும் கொடுமையா?””
‘’ம்.. என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு என் வீட்டுக்காரர்கிட்டே சொன்னாங்களாம். என் வீட்டுக்காரர்தான் பிடிவாதமா என்னைக் கட்டிக்கிட்டாராம். அதை அடிக்கடி சொல்லிக் காட்டுறாங்க. ஆனா, அவர் என் மேல பிரியமா இருக்கார், அது போதும்…”” என்று சிரித்தவள், ‘’இன்னைக்குத்தான் வழி தெரிஞ்சதா…?” என்று கேட்டாள்.
’’திடீர்னு ஞாபகம் வந்திச்சு, ஓடி வந்துட்டேன். சந்தோஷமா இருக்கியா, கல்யாணம்னா பயந்தே?’’
‘’நிஜம்தான். ஆளைப் பார்த்து முரடுன்னு நினைச்சேன். ஆனா, ஸ்ஸோ ஸ்வீட். இந்தக் கிழமும் இல்லைன்னா இன்னும் ஹேப்பியா இருப்பேன்…””
’’கொடுமைப்படுத்துறாங்களான்னு கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே..””
‘’எப்பப் பார்த்தாலும் அட்வைஸ். காலையில சீக்கிரமா குளிக்கணுமாம், குளிக்கும் போதே துணி துவைக்கணுமாம். சாப்பிட்ட தட்டை நாமே கழுவி வைக்கணுமாம். பிறகு எதுக்கு வேலைக்காரங்க வைச்சிருக்கோம்..? வாரத்துல ஒரு நாள் சொந்தக்காரங்க வீட்டுக்கும், ஒரு நாள் கோயில் இல்லைன்னா சினிமாவுக்குப் போகணுமாம், மத்த நாள் வீட்ல இருக்கணுமாம்… அவங்களுக்குத்தான் என்னை பிடிக்கலையே, அதான் எங்க அம்மாவும் உஷாரா இருக்கச் சொல்லியிருக்காங்க. நான் விலகியே இருக்கேன். ஏதாவது வம்பு பண்ணினா சண்டை போட ரெடியா இருக்கேன், இன்னும் வாயைக் குடுத்து மாட்டலை…” என்று சொல்லி முடிக்கும்போது, கதவை மெல்லமாகத் தட்டிவிட்டு மாமியார் உள்ளே வந்தாள். ‘’இந்தாம்மா.. கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடு. முதல் தடவை வந்திருக்கே” பதார்த்தங்கள் வைத்தாள். ‘’காபியா… டீயா.. என்ன வேணும்”” என்று கேட்டாள்.
‘’நீங்க எதுக்கு ஆண்ட்டி சிரமம் எடுத்துக்கிறீங்க. வெறுமனே தண்ணி போதும்…””
‘’அப்படி சொல்லக்கூடாது, ஸ்ட்ராங்கா காஃபி போடுறேன். குடிச்சிட்டுப் போ” என்றபடி கீழே இறங்கினாள். அவள் வெளியேறும் வரை மஞ்சுளா அமைதியாக இருந்தாள்…
‘’அந்தக் கிழத்தைப் பத்தி ஏதாவது பேசுறோமான்னு கேட்க வந்திருக்கு… உடம்பெல்லாம் விஷம்” என்றாள்.
மஞ்சுளா தேவையில்லாமல் மாமியார் மீது கோபம் கொள்வதாக நினைத்தாள் பார்கவி. அதனால் தோழியின் கையைப் பிடித்துக்கொண்டு நிதானமாகப் பேசினாள்.
‘’எதுக்கு தேவையில்லாம அவங்களைத் திட்டணும்…’’
‘’அவங்க எதுக்கு தேவையில்லாம என் ரூமுக்கு வரணும்’’
‘’வீட்டுக்கு வந்தவங்களை நீ கவனிச்சிருந்தா அவங்க மேலே வந்திருக்க மாட்டாங்க… அவங்களை ஏன் வெறுக்கிறே?’’
‘’ம்… நான் வேண்டாம்னு சொல்லியும் என் மகனுக்குப் பிடிச்சதால கட்டி வைச்சிட்டேன்ன்னு சொன்னாங்க..””
‘’ஏன் நீ வேண்டாம்னு நினைச்சாங்களாம்?’’
‘’கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்குப் போவேன்னு சொன்னேன். அவங்களுக்கு வீட்டோட இருக்கிற மருமக வேணுமாம்…”
மாமியாரின் ஆசையை குறை சொல்ல முடியாது என்பதால் அமைதியாக இருந்தாள் பார்கவி.
‘’என்னாச்சு பார்கவி?’’
‘’வீட்டோட மருமக இருந்தா மகனுக்கும் தனக்கும் வசதின்னு நினைக்கிறது தப்பாத் தெரியலை. அதே நேரம், தனக்குப் பிடிக்கலைன்னாலும் மகனுக்காக மனசை மாத்திக்கிற அம்மா ரொம்ப உசத்தி மஞ்சு. அவங்களுக்கு உன்னைப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, நீ ஏன் அவங்க மேல அன்பு செலுத்தக்கூடாது…?’’
‘’அதெப்படி முடியும்? பிடிக்காதவங்க மேல அன்பு செலுத்த முடியுமா?’’
‘’முடியும் மஞ்சு. நாய், பூனை, கிளி மட்டும் வளர்க்கிறாங்கன்னு நினைக்காதே, பாம்பு, பல்லி, தேளையும் செல்லமா வளர்க்கிறவங்க உண்டு. அதனால அவங்க உன்னை வெறுத்தாலும் நீ அவங்களை நேசி. உன் அன்பைப் புரிஞ்சுக்குவாங்க…””
‘’ஆனா, எங்க அம்மாதான், உஷாரா விலகியே இருன்னு சொன்னாங்க..”
‘’உங்க அம்மா அந்தக் காலத்து ஆளு மஞ்சு, மகன் மேல அன்பு வைச்சிருக்காங்கன்னா, அந்த அன்பை உன் மேலேயும் திருப்ப முடியும். நீ அவங்களை விரும்புனாத்தான், உன் புருஷனுக்கும் உன்னை ரொம்பவும் பிடிக்கத் தொடங்கும்…” என்றாள்.
சிந்தனையில் ஆழ்ந்தாள் மஞ்சு. ‘’எங்க அம்மா ரொம்பவும் நல்லவங்க… பேசிப்பழகுன்னு வீட்டுக்காரரும் சொல்றாரு, நான்தான் விலகியே இருக்கேன்…””
‘’வேண்டாம் மஞ்சு. நல்ல அம்மாவா இருக்கிறவங்க நிச்சயம் நல்ல மாமியாராவும் இருப்பாங்க… நீ அவங்களை சரியா மதிக்கலைன்னாலும் இன்னமும் உன் மேல அன்பு வைச்சிருக்காங்கன்னா, அவங்களை நீ பாராட்டணும்…”” என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் மஞ்சுளா. அப்போது மாடிப்படியேறி மாமியார் வரும் சத்தம் கேட்டது. கையில் காபி டம்ளருடன் உள்ளே வந்தாள். சட்டென அதை எதிர்கொண்டு வாங்கினாள் மஞ்சுளா.
‘’நீங்க குரல் குடுத்திருந்தா நானே வந்திருப்பேனே… அதுவும் நல்லதுதான். டீ பார்கவி, எங்க அத்தைக்கு கால்ல ஏதோ பிடிப்புன்னு சொன்னாங்க.. கொஞ்சம் என்னன்னு பாரேன்…”” என்று கையைப் பிடித்து இழுத்து தோழிக்கு அருகே அமர வைத்தாள்.
‘’அட, அது சின்ன விஷயம்மா, தானே சரியாப்போயிடும். சின்ன விஷயத்தை பெரிசாக்காதே. ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறீங்க… பேசுங்க”” என்றபடி புன்னகையுடன் மாமியார் வெளியேறினாள். சட்டென்று கண் கலங்கி நின்றாள் மஞ்சுளா.
‘’ரொம்ப தேங்க்ஸ் பார்கவி, அவங்களை இத்தனை நாளும் என் எதிரி மாதிரியே பார்த்துக்கிட்டு இருந்தேன். இனி எங்க அம்மாவா பார்க்கிறேன்’’ என்றவள் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்தாள் பார்கவி.