அம்மு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று செல்போனில் தகவல் கேட்டதும், மனம் படபடத்தது. ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தும் பதட்டம் தணியவில்லை. துப்பட்டாவை சரிசெய்தபடி ஸீட்டில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் வந்தேன். கண்ணாடியில் தெரிந்த என் முகத்தில் கடந்த காலம் பார்க்க முடிந்தது.

அம்மு என்றால் அமுதா. மதுரையில் பெண்கள் கல்லூரியில் நானும் அவளும் மூன்று ஆண்டுகள் அருகருகே அமர்ந்து பி.காம். படித்தோம். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். விருதுநகர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவள் என்றாலும் நல்ல வசதி. படிக்க வந்ததே, திருமணத்தைத் தள்ளிப் போடத்தான் என்பதால் ஹாஸ்டலில் ரகளை செய்வாள்.

பள்ளியில் அவளுடன் படித்த ஜெகன் மீது காதலுடன் இருந்தாள். அவன் வசதி குறைவானவன் என்பதால் படித்துமுடித்து நல்ல வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லியிருந்தான். குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசியமாக காதலித்து, அவனுக்காகக் காத்திருந்தாள்.

கடந்த மாதம்கூட சந்தோஷமாகத்தான் பேசினாள். ஜெகன் குரூப் 4 முடித்து வேலையில் சேர்ந்துவிட்டதால், இனி தைரியமாக வீட்டில் காதலை சொல்லி, திருமணம் செய்துகொள்வேன். சம்மதிக்கவில்லை என்றால் ஜெகனுடன் ஓடிவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். அத்தனை தைரியமான பெண் எதற்கு மருந்து குடித்தாள் என்ற கேள்வி என்னை குடைந்தது. மதுரை மருத்துவமனையில்தான் அவளை சேர்த்திருப்பதாக சொல்லப்பட்டதால், உடனே மேனேஜரிடம் விடுப்பு சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் போனேன்.

என்னைப் பார்த்தவுடன் அமுதாவின் அம்மா கட்டிப்பிடித்து அழுதார். ’ஒரு நல்ல பையன் போட்டோவைக் காட்டி கல்யாணம் செஞ்சுக்கச் சொன்னோம், அதுக்குப் போய் விஷத்தைக் குடிச்சுட்டா. யாரையாவது மனசுல நினைச்சுக்கிட்டு இருக்காளான்னு தெரியலை.. நீதாம்மா கேட்டுச் சொல்லணும்…’ என்று கண்ணீர் பொங்கினார். அமுதாவின் அண்ணன் அவள் அறைக்கு வழி காட்டினார். தங்கை கல்யாணத்துக்குப் பிறகுதான் கல்யாணம் முடிப்பேன் என்று 32 வயதாகியும் காத்திருப்பவர். அதைக் கேட்டதும், அவரைப் பார்க்காமலே காதல் எனக்குள் பூத்ததை இதுவரை அம்முவிடமும், அவளது அண்ணனிடமும் சொன்னதே இல்லை.

கதவைத் திறந்துபோனேன். கலைத்துப்போட்ட சேலை போன்று தூக்கத்தில் இருந்தாள் அமுதா. எழுப்புவதா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் கண் திறந்தாள், சின்ன ஆச்சர்யத்துடன் என்னை அழைத்தாள். அருகே அமர்ந்து அவள் கைகள் மீது என் கைகளை வைத்து அழுத்தினேன்.

சட்டென்று எழுந்து அமர்ந்தவள் கண்களில் நீர் கட்டியிருந்தது. என்னைக் கட்டிக்கொண்டு விசும்பிவிசும்பி அழத் தொடங்கினாள். அதைப் பார்த்ததும் உள்ளே வந்த அவளுடைய அண்ணன் வெளியே போய்விட்டார். தன் அருகே யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்டதும் பேசத் தொடங்கினாள் அம்மு.

‘’சாகலாம்னு நினைச்சேன், முடியலைப்பா… என்னை ஏமாத்திட்டான் ஜெகன்” என்று எனக்கு மட்டும் கேட்கும்படி பேசினாள்.

‘’ஏதோ மாப்பிள்ளை பார்த்தது பிடிக்காமத்தான் விஷம் குடிச்சேன்னு அம்மா சொன்னாங்க…” தயங்கியபடி கேட்டேன்.

‘’அப்படி அவங்க நினைச்சுட்டாங்க. என்னால எதுவும் சொல்ல முடியலை” என்றவள் அழுதுமுடிக்கும் வரை காத்திருந்தேன். அதன்பிறகு நடந்தவற்றை சொல்லத் தொடங்கினாள்.

‘’வேலைக்குச் சேர்ந்ததும் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லியிருந்தான்ப்பா. வேலைக்குப் போய் ரெண்டு மாசம் சம்பளம் வாங்கிட்டான். அதான், எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்னு கேட்கப் போனேன். ஹோட்டல்ல போய் பேசினோம்.  சாப்பிட்டு முடிச்சதும், ‘வேலைக்குப் போனதும் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொன்னது உண்மைதான். ஆனா, சம்பளம்னு எனக்கு வர்றது எனக்கும் என் குடும்பத்துக்குமே போதாது…. இன்னும் நல்ல வேலைக்குப் போனாலும் கிடைக்கிற வருமானத்துல உன்னை இப்போ மாதிரி நல்லா வைச்சிக்கமுடியுமான்னு தெரியலை. நான் தேவையில்லாம உன் மனசுல ஆசையை வளர்த்துட்டேன். என்னை மன்னிச்சுடு’ன்னு சொல்லிட்டான்.

நான் அவனுக்கு எழுதின எல்லா கடிதத்தையும், பரிசு பொருளையும் என்கிட்டே திருப்பிக் குடுத்துட்டான். எனக்காக இனியும் காத்திருக்காதேன்னு சொல்லி என்னை அனுப்பிவைச்சுட்டான். என்னால அவன் சொன்னதை தாங்கவே முடியலை” என்றபடி தலை குனிந்தாள்.

அவன் என்ன சொன்னான் என்பதை மீண்டும் ஒரு முறை பேசச்சொல்லிக் கேட்டேன். மனசுக்குள் அசை போட்டேன்.

‘’இப்ப நீ இருக்கிற மாதிரி வசதியா, சந்தோஷமா உன்னை வாழவைக்க முடியும்கிற நம்பிக்கையை அவன் இழந்துட்டான் அம்மு. சம்பளப் பணத்தை கையில வாங்குன பிறகுதான் உண்மையான பொருளாதாரம் அவனுக்குப் புரிஞ்சிருக்கு…”

‘’நீயும் முட்டாள் மாதிரி பேசாத. நான் அப்படியே கட்டுன புடவையோட வர்றேன். தினமும் கஞ்சி குடிக்கிறேன்னு சொல்லிட்டேன்’’ என்றாள்.

‘’நீ அவனுக்காக கஷ்டப்படுவது உனக்குப் பிடிச்சிருக்கலாம், ஆனா.. நீ கஷ்டப்படுறது அவனுக்குப் பிடிக்கலை. நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறான். ஜெகன் ரொம்ப நல்லவன். நீ அவன் சொல்ற மாதிரி வேற கல்யாணம் பண்ணிக்கோ…’’

சட்டென்று கோபமானாள் அம்மு. ‘’நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா. நான் அவனை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியும். அவனை எப்படி மறக்க முடியும்?”

‘’பூவை ரசிக்கிறதுதாம்ப்பா காதல், அதை பறிச்சு தலையில வைச்சுக்கிறது கிடையாது… அவன் உன்னை வேண்டாம்னு சொன்னதுக்கு அர்த்தம் அவனுக்கு உன் மேல அவ்வளவு காதல்ன்னுதான் அர்த்தம். அதேபோல நீ வேற கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நீ அவனை உண்மையா காதலிக்கிறதுக்கும் அர்த்தம்…’’

‘’அதெப்படி ஒருத்தனை மனசுல நினைச்சுக்கிட்டு, இன்னொருத்தன்கூட படுக்கச் சொல்றியா?”

‘’அபத்தமா பேசாதா… ஒரு நேரத்துல ஒருத்தரைத்தான் காதலிக்க முடியும்னு அர்த்தம் கிடையாது. உனக்கு உன் அம்மாவைப் பிடிக்கும் அதேபோல அப்பாவைப் பிடிக்கும், அண்ணாவைப் பிடிக்கும். அப்படித்தான் ஒரு காதலன் இருந்தான், இருக்கிறான், இருப்பான்னு மனசுக்குள்ளே வைச்சுக்கோ. வரப்போற கணவனுக்கு நல்ல மனைவியா இரு… அவனையும் காதல் செய். ஆனா, இனிமே ஜெகனை நினைக்காதே..’’

‘’பணம்தான் பிரச்னைன்னா என்கிட்டே நிறைய இருக்கே…’’

‘’உன்கிட்டே பணம் இருந்தாலும் அது அவன் சம்பாதிச்சது இல்லை, நீயும் சம்பாதிச்சது இல்லை. அதுதான் பிரச்னை. நல்லா யோசி. உனக்கு எல்லாமே புரியும். ஆனா, எப்பவும் இப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனமான முடிவு மட்டும் எடுக்காதே…’’ என்றபடி எழுந்தாள்.

அம்முவிடம் சின்னதாக வெளிச்சம் எட்டிப் பார்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *