என் குற்றாலக் குறவஞ்சி பாடலைக் கேட்டு, குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம் அருகே வந்தது. ஏதோ ஒரு கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த கூட்டத்தில் நாலைந்து மாணவிகளும் இருந்தார்கள்.

’’எங்களுக்கு இந்த பாட்டு பாடத்தில வந்திருக்கு…’’ என்று ஒரு மாணவி சந்தோஷப் பட்டாள்.

’’அந்த பாடல் படிப்பதற்காக இல்லை, சுகமாக அனுபவிப்பதற்கு. முடிந்தால் மேலே போய் தேனருவியை தரிசித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்…’’ என்றேன்.

புகைத்துக் கொண்டிருந்த ஒரு பையனிடம் இருந்து, சிகரெட் கேட்டு வாங்கினேன். சாமியார் என நினைத்து நின்ற சில இளைஞர்கள், பிச்சைக்காரனைப் பார்ப்பது போன்று முகம் சுளித்து, நடை போடத் தொடங்கினார்கள். நாலைந்து பேர் மட்டும்  ஆசிரியருடன் நின்றார்கள். அவர்களை அருகில் அமரச் சொல்லி, சந்தோஷமாக சிகரெட் பிடித்தேன்.

’’நீங்க சாமியார்தான…’’ என்று ஒருவன் கேள்வி எழுப்ப, உடனே வைத்தியநாதன், ‘‘இவரை சாதாரணமா நினைச்சுடாதீங்க, ஞானகுரு..’’ என்று சொல்லி முடிக்கும் முன் நான் பேசினேன்.

’’நான் ஞானியல்ல… இன்பத்தைத் தேடுபவன். ஏனென்றால் ஆனந்தம்தான் இறைவன் வாழும் இல்லம். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்…’’ என்று சிரித்தேன். நான் சொன்ன பதில் அவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், என்னை சாமியார் என்று நம்பப் போதுமானதாக இருந்தது, கேள்விகளை வீசத் தொடங்கினார்கள்.

’’நான் இந்த வருஷம் பாஸாவேனா?’’ என்று ஒரு மாணவன் அபத்தமாக கேட்டான்.

’’ஃபெயில் ஆகலேன்னா பாஸாயிடுவே…’’ என்று சொல்ல, மாணவிகள் சிரித்தார்கள்.

’’பெரியவங்ககிட்ட விளையாட்டா கேட்காதீங்க…’’ என்று மாணவர்களைத் தடுத்து நிறுத்திய ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

’’சாமி… பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வனபிரஸ்தம், சந்நியாசம் போன்றவை மூலம் மோட்சம் அடையலாம்னு படிச்சிருக்கேன். இதுல எது உத்தமம்?’’

’’எதுவும் சரிப்படாது, ஏனென்றால் இவையெல்லாம் வழிகளேயல்ல.  பிரம்மச்சர்யம் மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்றால், பருவம் எய்தும் முன்னர் மரணமடையும் அத்தனை உயிர்களும் சொர்க்கத்திற்குப் போயிருக்க வேண்டும். கிருஹஸ்தர்கள் மோட்சம் அடைவார்கள் என்றால், இந்த உலகில் உள்ள குடும்பஸ்தர்கள் எல்லோருமே மோட்சத்துக்குத் தகுதியானவர்கள்தான்.. காட்டிற்குச் சென்று வனபிரஸ்தம் செய்தால் மோட்சம் பெறலாம் என்றால், அத்தனை மிருகங்களும், பறவைகளும் அதனை அடைந்திருக்க வேண்டும். சந்நியாசம் மூலம் அதனை பெற முடியும் என்றால் ஏழைகளும், பிச்சைக்காரர்களும் நேரடியாக சொர்க்கத்துக்குத்தான் போவார்கள்…’’ என்றேன்.

’’அப்படின்னா மோட்சத்துக்கு எப்படி சாமி போறது?’’

’’ஏன்… திரும்பி உங்க ஊருக்குப் போக ஆசையில்லையா?’’ என்று கேட்டதும் இளசுகள் வாய்விட்டுச் சிரித்தார்கள். ஆசிரியர் அமைதியாக இருந்தார்.

’’அடுத்த உலகத்தைத் தேடி, இருக்கும் உலகத்தை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.’ என்றேன். 

’’சாமி… கடவுளைப் பார்க்க முடியுமா?’’ என்று ஒரு மாணவன் மிகச் சாதாரணமாக கேள்வியை வீசினான்.

’’இந்த உலகில் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதன் இல்லை, ஒரு விலங்கைப் போன்று இன்னொரு விலங்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு மரத்தில் இருக்கும் லட்சக்கணக்கான இலைகளில் கூட, ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை. இதற்கெல்லாம் காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே போ… இறுதியில் கடவுளை நீ பக்கத்தில் பார்க்கலாம்…’’

’’சாமி… இந்த மலையிலே வெள்ளை மரம்னு ஒண்ணு இருக்காமே, அதோட பட்டையை அரைச்சுக் குளிச்சா வெள்ளையா மாறலாம்னு சொல்றாங்க… உங்களுக்குத் தெரியுமா?’’ ஒரு மாணவி ஆர்வமாகக் கேட்டாள்.

’’ஒரு மரம் மட்டுமல்ல, எல்லா மரங்களும் அழகு மரம்தான், ஏனென்றால் அவை பியூட்டி பார்லருக்குப் போவதில்லை..’’ என்றதும் அந்த மாணவியின் முகம் சுருங்கியது.

’’மனிதர்கள் சிரிக்கும் போது, முகத்தில் தோன்றும் பொலிவுக்கு ஈடாக இதுவரை எந்த அழகுப் பொருட்களும் கண்டுபிடிக்கப் பட்டதில்லை, நீ எப்போதும் சிரிப்பையே பூசிக்கொள்… அழகாகி விடுவாய்…’’

’’சாமி… படிப்பு நல்லா வரணும்னா எந்த சாமியை கும்பிடணும்?’’ என்று ஒரு மாணவன் கேட்டான்.

’’ஏதாவது ஒரு கழுதையை வணங்கு…’’

’’என்ன சாமி இப்படிச் சொல்றீங்க, கழுதைப் படத்தை கும்பிட்டா லாபம்தான வரும்னு சொல்வாங்க…?’’ என்றான் அவன். என்னுடைய கேலியை புரிந்துகொள்ளாமல் பதில் சொன்னதைப் பார்த்து புன்னகைத்தேன். என் சிரிப்பைப் பார்த்ததும் ஒரு மாணவி உஷாரானாள்.

’’யேய்… கழுதைதான் பேப்பர் தின்னும். அதுக்காகச் சொல்றாருப்பா!’’ என்றவள் சீரியஸாகவே ‘‘சாமி, நிஜமாவே படிப்பு நல்லா வர என்ன செய்யணும்?’’ என்று கேட்டாள்.

’’உங்களை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிய பின் ஒரு பாம்பை உள்ளே விட்டால் என்ன செய்வீர்கள்?’’

’’அதுகிட்ட கொத்துப்படாம தப்பிக்கணுமே, அதையே பார்த்துக்கிட்டு இருப்போம்…’’ என்றாள்.

’’அப்படித்தான். பாம்பின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கவனிப்பது போன்று பாடத்தைக் கவனி. முழு கவனத்தையும் பாடத்தில் மட்டும் செலுத்துங்கள். பாடம் கேட்கும்போதே மனதில் பதிந்து விடும்…’’ என்றேன்.

’’சாமி எங்களுக்கு ஏதாவது மாயவித்தை செஞ்சு காட்டுங்களேன்?’’ என்று கேட்டான் ஒருவன்.

’’ஒவ்வொரு அமாவாசையிலும், சுடுகாட்டில் தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை தேடியெடுத்து, அதற்கு ரத்த பலி கொடுக்க வேண்டும். பின்னர் அந்த ரத்தம் உறைந்து போவதற்குள் அதில் மஞ்சள், அரிசி, தேங்காய் கலந்து, அர்த்தஜாமத்தில் காளி பூஜை செய்து… அதை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் மாய வித்தைகள் கைக்குள் ஓடிவரும். ஆனால், அந்த சக்திகள் ஓர் அமாவாசை வரைக்கும் மட்டுமே தாக்குப் பிடிக்கும். நான் நீண்டநாளாக அமாவாசை பூஜை நடத்தவில்லை… உங்களில் யாராவது தலைப்பிள்ளை இருக்கிறீர்களா..? வசிய மை தடவினால் போதும், எங்கிருந்தாலும் அமாவாசையன்று இங்கே வந்து விடுவீர்கள்? நீ தலைச்சனா…’’ என்று ஒரு மாணவனை ஏறெடுத்துப் பார்த்தேன்.

திகிலோடு பார்த்தது மாணவ பட்டாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *