அபிராமியின் வருகைக்காக டென்ஷனாகக் காத்திருந்தாள் ஸ்டெல்லா. எந்த நேரமும் புன்னகையும் தன்னம்பிக்கையுமாக நடைபோடும் அபிராமி, இன்று சோகமான முகத்துடன் அலுவலகம் வருவாள் என்று நினைக்கையிலே, நெஞ்சின் ஓரத்தில் வலித்தது.

இந்த அலுவலகத்தில் வந்து, கிட்டத்தட்ட ஆறு மாதமாகத்தான் அபிராமியைத் தெரியும். ஆனால், ஏதோ ஏழு ஜென்மத்துப் பந்தம் போன்று அப்படியொரு ஒட்டுதல் உருவாகிவிட்டது. என்ன விஷயம் பேசினாலும் முடிக்கும்போது, அபிராமியின் இதழில் ஓர் அழகான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த புன்னகைக்காக எத்தனை ஆண்கள் அலைகிறார்கள் என்பது அபிராமிக்கும் தெரியும். ஆனால், அவர்களை மிக அழகாக கத்தரித்துவிடுவதில் அவள் சாமர்த்தியசாலி.

எனக்காக ஊரில் என் மாமன் காத்திருக்கிறார். ஆறு வயதில் இருந்து அவரைத்தான் காதலித்து வருகிறேன். அதனால், வேறு யாரையும் என்னால் காதல் கண்ணோட்டத்துடன் பார்க்கமுடியாது என்று நறுக்கு தெரித்தால் போன்று பேசி, நட்பு ரீதியாகவே விலக்கிவிடுவாள். அதன்பிறகு யாருக்கும் அபிராமியை தொந்தரவு செய்யும் மனம் வராது.

இதெல்லாம் ஆரம்பகாலத்தில் ஸ்டெல்லாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனைக்கும் அபிராமியைவிட ஸ்டெல்லாதான் அழகு. இதை அபிராமியும் பல தடவை ஒப்புக்கொண்டிருக்கிறாள். ஆனால், ஸ்டெல்லாவிடம் இல்லாத ஒன்று அபிராமியிடம் இருந்தது. அதுதான் நிமிடத்திற்கொரு முறை மலரும் புன்னகை.

தினமும் இரண்டு முறையாவது மேல் அதிகாரியிடம் திட்டு வாங்குவாள் ஸ்டெல்லா. அந்த நேரமெல்லாம் முகம் சுருங்கி அமர்ந்திருப்பாள். அதேபோன்று அபிராமியும் திட்டு வாங்குவதுண்டு. ஆனால், மேல் அதிகாரி அறையில் இருந்து திட்டு வாங்கிக்கொண்டு வரும்போதும் சிரித்த முகத்துடன் வர அபிராமியால் மட்டுமே முடியும்.

அவள், இன்று அழுத முகத்துடன் வருவாள் என்ற எண்ணமே ஸ்டெல்லாவுக்கு வருத்தம் கொடுத்தது.. கடந்த வாரம் திடீரென ஊருக்குக் கிளம்பினாள் அபிராமி. அவள் ஆசை ஆசையாக காதலித்துவந்த மாமனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடக்க இருப்பதாக தகவல் வந்ததாலே, அவசரமாக கிளம்பினாள். என்ன நடந்ததோ என்று நகத்தைக் கடித்துக் காத்திருந்தாள் ஸ்டெல்லா.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அபிராமி போன் செய்தாள். நான் ஊருக்குப் போனது வேஸ்ட், எந்த பிரயோஜனமும் இல்லை. என் மாமனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டது. நேரில் விரிவாகப் பேசலாம் என்று போனை கட் செய்துவிட்டாள்.

இன்று அலுவலகம் வரும் அபிராமிக்கு எப்படியெல்லாம் ஆறுதல் சொல்லவேண்டும் என்று நிறையவே யோசித்து வந்திருந்தாள் ஸ்டெல்லா. அந்த யோசனையில் இருக்கும்போதே, பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தாள் அபிராமி. இன்றும் முகத்தில் அதே புன்னகையைப் பார்த்ததும்  ஸ்டெல்லாவுக்கு குழப்பம் வந்துவிட்டது.

’’அடியே… உன் மாமனுக்கு வேற பொண்ணோட நிச்சயம் ஆயிடுச்சின்னு பொய்தானே சொன்னே…?’’ கொஞ்சம் உஷ்ணமாகவே கேட்டாள்.

’’ஏய், அதுல எதுக்குப் பொய் சொல்லணும்… நான் இன்னைக்கும் லேட். மேனேஜர் அதுக்குள்ள ரெண்டு தடவை போன் செஞ்சு  நாலைஞ்சு பெண்டிங் ஃபைலை முடிச்சுத் தரணும்னு சொல்லிட்டார். ஸோ… லஞ்ச்ல பேசலாம் ப்ளீஸ்…”” என்றபடி வேலையில் மூழ்கினாள் அபிராமி.

லஞ்ச் நேரத்திலும் அபிராமியை வம்படியாக இழுத்துத்தான் வரவேண்டி இருந்தது.

’’அதான்… என் மாமனுக்கு வேற பொண்ணோட நிச்சயம் ஆயிடுச்சுன்னு சொன்னேனே, வேற என்னப்பா கேட்கணும்…”

’’பொய் சொல்லாதே. அப்படி உன் மாமனுக்கு வேற யாராவது பெண்ணுடன் நிச்சயம் நடந்திருந்தா, நீ இப்ப சோகமா இருப்பே. யாராவது இந்த விஷயத்தை சாதாரணமா சிரிச்சுக்கிட்டு சொல்வாங்களா..?’’ என்று வெளிப்படையாகவே கேட்டாள் அபிராமி.

’’ஓ… இதுதான் உன் சந்தேகமா?’’ என்று டிபன் பாக்ஸை தள்ளிவைத்துவிட்டு, ஸ்டெல்லாவின் தலையில் செல்லமாகக் கொட்டினாள் அபிராமி.

’’நான் சந்தோஷமா இருக்கிறது என் முடிவு. நான் இத்தனை நாளும் என் மாமனாலதான் சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சியா…?””

’’இல்லையா..?””

’’என்னோட சந்தோஷத்தை வேற ஒருத்தர் கையில குடுக்க மாட்டேம்பா. இன்னொருத்தரால எனக்கு சந்தோஷம் தர முடியாது, அதே மாதிரி துக்கமும் தரமுடியாது. ஓ…  நான் சோகமா வருவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தியா?’’

’’ம்..’’ உதட்டைப் பிதுக்கினாள் ஸ்டெல்லா.

’’நீ உதட்டைப் பிதுக்கும்போது ரொம்ப அழகா இருக்கே…’’ என்றதும் ஸ்டெல்லாவுக்கு அந்த நேரத்திலும் பெருமையாக இருந்தது.

’’அப்படின்னா, உன் மாமன் வேற ஒரு பொண்ணை நிச்சயம் செஞ்சதுல உனக்கு வருத்தம் இல்லையா…?’’

’’அதெப்படி இல்லாம இருக்கும். அதனாலதான் என்ன பிரச்னைன்னு போய்ப்பார்த்தேன். பொண்ணுவீடு ஊருல பெரிய தலைக்கட்டு, எக்கச்சக்க சொத்து. வீட்ல எல்லோருக்கும் சபலம் தட்டியிருக்கு. அவங்க  எல்லோரும் சேர்ந்து என் மாமன் மனசை மாத்துறாங்களோன்னு நினைச்சுத்தான் போனேன். மாமனைப் பார்த்துப் பேசினேன். வீட்ல எல்லோரும் சொல்றாங்க, அதனால நானும் சரின்னு சொல்லிட்டேன்னு சமாளிச்சார். அப்பத்தான் அவருக்கும் அப்படியொரு ஆசை இருக்குன்னு தெரிஞ்சது.  முத ஆளா வாழ்த்து சொல்லிட்டு வந்திட்டேன். என் அம்மா, அப்பாவை சமாளிக்கத்தான் ரெண்டு நாளாயிடுச்சு…’’

’’இதை ரொம்ப சாதாரணமா சொல்றே… உன்னை ஏமாத்தியிருக்கார்…’’

’’அப்படி சொல்லக்கூடாது. நான் ஏமாந்திருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். அவருக்கு என்னைவிட அந்த சொத்து பிடிச்சிருக்கு. அதனால என்னாச்சு? எனக்கும் ஒருத்தன் வராமலா போயிடுவான்…’’ என்றபடி அழகாக புன்னகைத்தாள்.

’’இந்த நிலையிலும் உன்னால எப்படி சிரிக்க முடியுது?””

’’ஸ்டெல்லா… நான் சொல்றது இன்னும் உனக்குப் புரியலை. நான் எப்பவும் மகிழ்ச்சியை விரும்புறவ. என் மகிழ்ச்சியை யாரும் பறிச்சிக்க முடியாது. அடுத்தவங்க கையில என் மகிழ்ச்சி இல்லை.  என் வாழ்க்கையைப் பறிக்கலாம், என் சொத்தைப் பறிக்கலாம், என் வேலையைப் பறிக்கலாம், அழகைப் பறிக்கலாம். ஆனா, இதனால என் மகிழ்ச்சி பறிபோகாது. என்னால எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடியும். சாக்கடைக்குள்ளேயும் பூ முளைக்கிற மாதிரி என்னாலே எப்போதும் மலர்ச்சியா இருக்க முடியும்…’’

’’கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே. உனக்கு வேண்டப்பட்டவங்க யாராவது செத்தாலும்…”” நிறுத்தினாள். ’

’’உங்க அம்மா செத்தாலும் சிரிப்பியான்னு கேளேன். சாவு எனக்கும் வருத்தம் குடுக்கும். ஆனா, அந்த வருத்தம் எத்தனை நேரம் இருக்குமோ, அதுவரைக்கும்தான் நான் உண்மையிலே வருத்தமா இருக்க முடியும். அதுக்குப்பிறகு அதைக் கடந்துவந்திருவேன்…. அவ்வளவுதான்…’’

சட்டென்று எழுந்து அபிராமியை கட்டிக்கொள்ளத் தோன்றியது. அந்த எண்ணத்தை மறைத்து  சின்னதாக அவள் கைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

’’இது என்னோட ஞானகுருவுக்கு காணிக்கை”  என்றதும் எப்போதும்போல் அபிராமி அழகாக சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *