சுலோச்சனா வாசலில் வந்து நின்றதும், வீட்டுக்கே பிரகாசம் வந்துவிட்டது போல் உணர்ந்தாள் மலர். ஓடோடிச் சென்று கையைப் பிடித்து வீட்டுக்குள் கூட்டிவந்தாள் கல்லூரியில் பார்த்ததைவிட, ஒரு வயது குறைந்து பளபளப்பாக இருந்தாள்.
‘’காலேஜ் முடிச்சு அஞ்சு வருஷமாச்சு, உனக்கு மட்டும் வயசு குறைஞ்சிக்கிட்டே போகுதாடி… அழகு அள்ளுது… ஆமா, உன் ஹஸ்பெண்ட் எங்கே, அவருக்கும் சேர்த்து சாப்பாடு ரெடி செஞ்சிட்டேனே” படபடவென கேட்டாள் மலர்.
‘’கொஞ்சம் வேலை இருக்குதாம், அதை முடிச்சுட்டு சரியா சாப்பாட்டுக்கு வந்திடுவார். நீயும் அப்படியே நாட்டுக்கட்டை மாதிரிதான் இருக்கே, என்னைப் பார்த்து பொறாமைப்படுறே…””
’’நான் நாட்டுக்கட்டையா… கடுப்பை கிளப்பாதே, காலேஜ்ல மாதிரி கிள்ளி வைச்சிடுவேன்”” என்று கையை தொடை அருகே கொண்டுசெல்ல, பொய்யாக அலறினாள் சுலோ. அவள் கையை தன் உள்ளங்கையில் வைத்தபடி சோபாவில் அமர்ந்தாள்.
‘’மும்பையில நல்லா வாழ்ந்தாலும் சென்னைக்கு வந்தாத்தான் நிம்மதியா இருக்கு. பிள்ளை பிறக்குற வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு இருந்த, அப்புறம் என்னாச்சு? ஃபேஸ்புக் வர்றதில்லை, செல்போன் மாறிடுச்சு…”” என்ற சுலோவின் கேள்விக்கு மலர் பதில் சொல்லும் முன்பு அறைக்குள் அழுகை சத்தம்.
‘’ஓ.. உன் ஜூனியர் முழிச்சாச்சா… அவனைத்தான் முக்கியமா பார்க்க வந்தேன்…”” என்ற சுலோச்சனா, பையில் இருந்து ஒரு பெரிய பேட்டரி கார் பொம்மையை எடுத்தாள்.
படுக்கை அறையில், இரண்டு வயது சித்தார்த் மலங்கமலங்க விழித்தபடி அழுதான். அவனை அப்படியே அள்ளி தன் மடியில் போட்டுக்கொண்ட சுலோசனா, அவன் கையில் கார் பொம்மையைத் திணித்தாள். அவனோ, அதைப் பிடிக்காமல் எங்கேயோ வெறித்தபடி அழுதான்.
‘’இன்னமும் தூக்க கலக்கத்தில் இருக்கான் சுலோ. நாம கையில என்ன குடுத்தாலும் வாங்க மாட்டான்,,,”” அமைதியாகப் பேசினாள் மலர்.
‘ஹாய் சித்தார்த்… இந்தா சாக்லேட்”” என்று ஹேண்ட்பேக்கில் எடுத்து நீட்ட, அதையும் வாங்கவில்லை. கீழே வைக்கும்படி மலர் சைகை காட்ட, அப்படியே செய்தாள் சுலோசனா. இப்போது அதை தாவி எடுத்தான் சித்தார்த்.
’’நல்லா பேசுறானா..?””
‘’ம்… மூடுவந்தா தொணதொணன்னு பேசுவான்.. ஆனா, நாம கேட்டா பதில் சொல்ல மாட்டான்… திருடன்”” என்ற மலர் சித்தார்த்தை கீழே இறக்கிவிட்டாள்.
‘’ஹாய் சித்தார்த் ஆண்ட்டி பாரு…”” என்று தன்னைப் பார்க்கவைக்க சுலோச்சனா எவ்வளவோ முயற்சி செய்தும், முகத்தை வெவ்வேறு பக்கம் திரும்பி ஏதேதோ பேசினான். சுலோச்சனாவுக்கு அவனிடம் பளீச்சென வித்தியாசம் தெரிந்தது. ஏனென்றால் மும்பையில் இப்படி ஒரு பையனைப் பார்த்திருக்கிறாள். ஆட்டிஸம் குறைபாடு என்று சொன்னார்கள்.
‘’டாக்டரை பார்த்தியா மலர்?””
‘’எதுக்கு?””
‘’எதுக்கா… சித்தார்த் கண்ணைப் பார்த்து பேசமாட்டேங்கிறான், உடனே பாரு ஆட்டிஸமா இருந்திடப் போகுது…””
சட்டென கோபமானாள் மலர். ‘’ஆட்டிஸம்னா… என் பையனுக்குப் பைத்தியம்னு சொல்றியா? நான் அஞ்சு வயசுலதான் பேசுனேனாம், நானும் இப்படித்தான் யாரையும் பாத்து பேச மாட்டேனாம்…”” வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது. கல்லூரி காலம் முதலே மலர் இப்படித்தான். சட்டென கோபப்படுவாள், சட்டென பனியாக மாறுவாள். அதனால் பேச்சை மாற்றினாள் சுலோச்சனா.
‘’ஓ… அப்படின்னா சரிதான். ஆமா, உன் ஹஸ்பெண்ட் இன்னைக்கு லீவுன்னு சொன்னே…?””
‘’ம்… அவரும் இப்போ வந்திடுவார்…”” என்றவள் ஒரு கணம் அமைதியாகி, ‘’எதுக்காக சித்தார்த்தைப் பார்த்து ஆட்டிஸம்னு சொன்னே…”” என்று அமைதியாகக் கேட்டாள்.
‘’ஸாரி மலர்… ஏதோ பேச்சுவாக்குல கேட்டுட்டேன்.. ஸாரி”” என்று அவள் கன்னத்தைத் தொட, அவள் கன்னங்களில் நீர் வழிந்தது. கொஞ்சநேரம் அமைதியாக இருந்தாள்
‘’எனக்கும் ஏதோ தப்பா தெரியுதுடி சுலோ…”” என்றபடி சரசரவென அழத் தொடங்கிய மலரை, ஆதரவுடன் தன் தோளில் அணைத்துக்கொண்டாள் சுலோ. அதைப் பார்த்து சித்தார்த் அருகே வர, அவனையும் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
’’எங்க ஃபேமிலி டாக்டர்கிட்டே காட்டினேன். தானா சரியாப்போயிடும்னு சொன்னார். என் வீட்டுக்காரரும் அப்படித்தான் சொல்றார். ஆனா, எனக்குத்தான் பயமா இருக்கு. ஏன்னா அவன்கூட நான்தான் முழு நேரமும் இருக்கேன். அவர் கொஞ்ச நேரம் தூக்கி வைச்சு விளையாண்டுட்டு, பத்து நிமிஷத்துல திருப்பிக் குடுத்துடுவார், அதனால அவருக்கு பெருசா வித்தியாசம் தெரியலை. என் முகத்தைப் பார்த்து அம்மான்னு கூப்பிட மாட்டேங்கிறான். இன்னைக்கு உன்கிட்டேதான் மனசு விட்டு பேசி அழுதிருக்கேன். என் பையனை யாரும் தப்பா பேசக் கூடாதுன்னுதான், தனிக்குடித்தனம் வந்துட்டேன். நம்ம ஃப்ரண்ட்ஸ்கிட்டேயும் பேசுறதில்லை. கிட்டத்தட்ட இருட்டுக்குள்ளே நிக்கிறேன்…”” என்றபடி கண்களைத் துடைத்தாள்.
‘’சரி இப்போ என்ன செய்யப்போற?””
‘’தானா சரியாயிடும்னு நம்பிக்கையோட காத்திருக்கேன் சுலோ. அவனை பார்த்து யாரும் தப்பா பேசிடக்கூடாதுன்னுதான் பயந்து போயிருக்கேன், வேற என்ன பண்றது..?”” என்றாள். அதற்குள் சித்தார்த் கார் பொம்மையுடன் விளையாடத் தொடங்கினான்.
‘’நீ இருட்டுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டே இருந்தா வழி கிடைக்காது மலர், விளக்கு ஏத்தினாத்தான் வெளிச்சம் கிடைக்கும்…””
‘’என்னடி சொல்றே… எனக்கு எதுவும் புரியலை…’’
‘’இதைப் பத்தி நிறைய பேருகிட்டே பேசு, இப்பவே ஸ்பெஷல் டாக்டர்களைத் தேடு. இந்த வயசுல என்ன செய்யலாம்னு கேளு… நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். எல்லோர்கிட்டேயும் பையனை பழகவிடு. அதைவிட்டு இப்படி தனியே உட்கார்ந்து இருக்கிறது தப்பு மலர்…”” என்றபடி கையைப் பிடித்தாள்.
‘’எங்க ஃபேமிலி டாக்டர், இப்போ எதுவும் செய்யமுடியாதுன்னு சொன்னாரே…”’
‘’இப்போ மருத்துவம் வளர்ந்திடுச்சு மலர். சித்தார்த்துக்கு பிரச்னையா இல்லையான்னு இப்பவே உறுதி செஞ்சிடலாம். அப்படி இருந்தா என்ன செய்றதுன்னும் நீ கத்துக்கணும். உன்னை மாதிரி அவனையும் இருட்டுக்குள்ள உட்கார வைச்சிடாத. வெளியே வா மலர், உனக்காகவும், சித்தார்த்துக்காகவும் வாசல் திறந்துதான் இருக்கு…”’
‘’தேங்க்ஸ்பா… சித்தார்த்தை மத்தவங்க தப்பா பார்க்கக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சேன். உண்மையில சித்தார்த்துக்கு என்ன வேணும்னு கவனிக்க மறந்துட்டேன். இனிமே இருட்டுக்குள்ள இருக்க மாட்டேன் சுலோ… ரொம்ப தேங்க்ஸ்..” என்றபடி அழுத்தமாக கட்டிப்பிடித்தாள். அந்த கூட்டணியில் சித்தார்த்தும் சேர்ந்துகொண்டான்.