வியாபாரி ஒருவர் ஞானகுருவை சந்தித்துப் பேசினார். ‘‘நான் 30 ஆண்டு காலமாக வியாபாரம் செய்துவருகிறேன். இன்னமும் எனக்கு வியாபாரத்தின் நேக்கு புரிபடவே இல்லை. இந்த ஆண்டு விலையேற்றம் இருக்கும் என்று நினைத்து, சில பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறேன். பெரும்பாலும் ஏமாந்துதான் போகிறேன். இத்தனை ஆண்டுகள் அனுபவம் போதாதா..? ஏன் அப்படி நடக்கிறது?’’ என்று கேட்டார்.


‘‘நாம் நமக்கு சாதகமாகவே முன்முடிவுகளை எடுக்கிறோம், அதனால்தான் தோல்வி கிடைக்கிறது‘‘ என்றார் ஞானகுரு.


‘‘புரியலையே குருஜி…‘‘


‘‘நீ, உனக்குத் தெரிந்த தகவல்களை மட்டுமே கொண்டு, ஒரு முடிவு எடுப்பதுதான் முன் முடிவு. இதனை விளக்குவதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.  ஒரு ஹோட்டலில் நான்கு மருத்துவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, ஒருவர் காலைத் தாங்கித்தாங்கி நடந்துவந்து பொருட்களை சப்ளை செய்துவிட்டுப் போனார்.


அவர் நடந்துசெல்வதைப் பார்த்த ஒரு மருத்துவர், ‘அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம்  இருக்கிறது‘ என்றார்.


அடுத்த மருத்துவரோ, ‘அதற்கு வாய்ப்பு இல்லை, அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ்’ என்றார்.


அந்த சர்வர் நடந்துசெல்வதைப் பார்த்த மூன்றாவது மருத்துவர்-, ‘அவருக்கு காலில் பிரச்னை எதுவும் இல்லை, கணுக்காலில் சாதாரண சுளுக்கு’ என்றார்.


நான்காவது மருத்துவர், ‘அந்த “மனிதருக்கு பிறவியிலேயே காலில் போலியோ பிரச்னை. அதனால்தான் கால்களைத் தாங்கித்தாங்கி நடக்கிறார்’ என்று சொன்னார். நான்கு பேரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று நினைத்தார்கள். அதனால், அடுத்து அந்த சர்வர் வரும்போது கேட்கலாம் என்று முடிவு செய்து காத்திருந்தனர்.
ஆனால், கொஞ்சநேரம் கழித்து வந்த அந்த சர்வர் மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் நடந்துவந்தார். நால்வருக்கும் ஆச்சர்யம். அதனால், அவரிடமே விஷயம் கேட்டார்கள்.


அந்த சர்வர், ‘ஒண்ணுமில்லே, என்னோட செருப்பு அறுந்துபோச்சு. அதான் தாங்கித்தாங்கி நடந்தேன். இப்போ செருப்புல பின் வைச்சு மாட்டிட்டேன். அதனால ஈசியா நடக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.


இப்படித்தான் அவரவருக்குத் தெரிந்த ஒன்றை நினைத்துக்கொண்டு, இப்படித்தான் இருக்கும், நடக்கும் என்று முன்முடிவு செய்கிறார்கள். இனியாவது உன்னுடைய அனுபவத்தை மட்டும் வைத்து காலத்தை எடை போடாதே. சகல விவசாயிகளிடமும், வியாபாரிகளுடமும் பேசு. சுற்றுச்சூழல், காலம்,தேவை போன்றவற்றை கவனி. அதிக லாபத்துக்கு ஆசைப்படாதே. நிறைய  வியாபாரம் நடக்கவேண்டும் என்று விரும்பு. சேமிப்புக்கும், பதுக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டு செயல்படு. லாபம் மட்டுமின்றி நஷ்டத்துக்கும் தயாராக இரு. வியாபார சூட்சுமம் புரிந்துவிடும்’’ என்றார் ஞானகுரு.


வியாபாரிக்கு நிஜமான  விழிப்பு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *