ஒரு மாத சம்பளத்துக்காரன் ஞானகுருவை தரிசிக்க வந்தான். அவன் மனதில் ஏதோ ஒரு கேள்வி இருப்பதை அறிந்ததும் புருவம் உயர்த்தி கேட்கத் தூண்டினார். ‘’தேவை இருக்கிறதோ, இல்லையோ ஒருசில பொருட்களை வாங்கிவிடுகிறேன். அதன்பிறகு அந்த பொருளை பயன்படுத்துவதே இல்லை. இந்த பழக்கத்தில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை…’’ என்று வருந்தினான்.

‘’உன்னுடைய பணத்தை ஒருபோதும் பண மதிப்பாக மட்டுமே பார்க்காதே, அதை உன் வேலை நேரமாகப் பார்…’’ என்றார் ஞானகுரு. புரியவில்லை என்பது போல் அமைதியாக நின்றான்.

‘’உன்னுடைய பர்ஸில் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது?’’

பர்ஸை எடுத்து எண்ணிப் பார்த்தவன், ‘என்னிடம் இப்போது 1,250 ரூபாய் இருக்கிறது’’ என்றான்.

‘’உன்னுடைய மாத சம்பளம் எவ்வளவு..?’’

‘’கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய்…’’

‘’ஓகே… அப்படியென்றால் உன்னிடம் இப்போது இருப்பது கிட்டத்தட்ட 7.5 மணி நேரம்…’

‘’அப்படின்னா..’

‘’அதாவது, நீ 7.5 மணி நேரம் உழைத்தால்தான் இந்த பணம் கிடைக்கும். நீ ஒரு பொருளை வாங்குவதற்கு இந்த பணத்தை செலவிடுகிறாய் என்றால், உன்னுடைய 7.5 மணி நேர உழைப்புக்கு அந்த பொருள் சமம்தானா, தகுதிதானா என்பதை மட்டும் யோசித்துப் பார்… நீ ஒரு பீட்ஸா வாங்கி சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, ஒரு புதிய சட்டை போடுவதாக இருந்தாலும் சரி… ஒவ்வொரு செலவையும் உன்னுடைய வேலை நேரத்தைக் கொண்டு மட்டுமே கணக்கிடு. அப்போதுதான், அந்த பொருள் வாங்கத்தான் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது உனக்குப் புரியவரும்..’’

‘’அதெப்படி..?’’

‘’ஒரு சட்டை வாங்கச் செல்கிறாய்.. 500 ரூபாயிலும் இருக்கிறது, இரண்டாயிரம் ரூபாயிலும் கிடைக்கிறது. நீ எத்தனை மணி நேரம் உழைப்பைக் கொடுத்து அந்த சட்டையை வாங்குவாய் என்று கணக்குப் போடு. அரை நாள் சம்பாத்தியத்தில் வாங்க முடியும் எனும்போது, எதற்காக இரண்டு நாள் சம்பளத்தை வீணாக செலவிட வேண்டும்..?’’

இளைஞனுக்கு சட்டென பிரகாசமானான். ‘’பணத்தைவிட உழைக்கும் நேரத்துக்குத்தான் மதிப்பு தரவேண்டும், உழைப்பினால் செலவை அளக்க வேண்டும் என்பது தெரிந்துவிட்டது’’ சந்தோஷமாகக் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published.