முகத்தில் சோகம், மனதில் பாரத்துடன் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவன் இப்போதுதான் திரும்பியிருக்கிறான். உங்களிடம் பேச விரும்புகிறான் என்று அறிமுகப்படுத்தி விலகினார் மகேந்திரன்.
பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினான் அந்த இளைஞன். ‘‘எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் என் பெற்றோர் என்னை சந்தோஷமாகத்தான் அனுப்பிவைத்தார்கள். நான் விரும்பிய பெண்ணும் அன்புடன் வழியனுப்பினாள்.  இரண்டு ஆண்டு காலம் வரமுடியாத அளவுக்கு வேலை என்று தெரிந்துதான் போனேன். இப்போது நிறைய பணத்துடன் திரும்பிவிட்டேன். ஆனால், என்னுடைய தந்தை உயிருடன் இல்லை. அவர் இறப்புக்குக்கூட வர முடியவில்லை. அம்மா கிட்டத்தட்ட நடைப்பிணமாக இருக்கிறார். என் காதலியும் கைவிட்டுப் போய்விட்டார். நடந்த எல்லா சம்பவங்களுக்கும் என்னுடைய பணம் சம்பாதிக்கும் ஆசைதான் காரணம் என்ற குற்றவுணர்வு என்னை கொல்கிறது. சில மருத்துவர்களைப் பார்த்தேன். தூக்கத்திற்கு மருந்து கொடுக்கிறார்கள். அதில் இருந்து எழுந்ததும் மீண்டும் என் குற்றவுணர்வு விழித்துக்கொள்கிறது‘‘ என்று படபடவென சொல்லி முடித்தான்.


‘‘உனக்கு துரோகம் செய்த ஒருவர், தன்னுடைய குற்றத்தை உணர்ந்து திரும்பிவந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டால் என்ன செய்வாய்?’‘


‘‘நிச்சயம் மன்னிப்பேன்…‘‘ வேகமாக சொன்னான்.


‘‘மற்றவர்களை மன்னிக்கும் உன்னால், உன்னையே மன்னித்துக்கொள்ள முடியாதா..?‘‘
புரியாமல் விழித்தான் இளைஞன்.


‘‘நீ செய்தது தவறோ இல்லையோ உனக்கு குற்றவுணர்வு உருவாகிவிட்டது. இந்த குற்றவுணர்வு உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். இதில் இருந்து வெளியே வர வேண்டுமென்றால், நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, உன்னை நீ முழுமையாக மன்னித்துவிடுவது. கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரும் இதைத்தான் செய்வார்.
அதனால், நடந்துவிட்ட தவறுக்காக புலம்பிக்கொண்டே இராதே. இனிஅப்படியொரு தவறு நிகழாது என்ற உறுதியையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்.
இதுவரை உன் தந்தைக்கு கொடுக்கமுடியாத பாசத்தை தாயிடம் காட்டு. அதுதான் இறந்துபோன தந்தைக்கு நீ செய்யும் நன்றிக்கடன். காதல் விலகிப்போனதைக் கண்டு கவலைப்படாதே. இன்னும் ஆயிரம் காதல் உனக்கு திரும்பவரும்.
நீ தொடர்ந்து குற்ற உணர்வுடன் இருந்தால், நீ செய்யும் அத்தனை காரியமும் தோல்வி அடைந்துவிடும். அதனால் நீயே கொஞ்சநேரம் கடவுளாக இருந்து உன்னை மன்னித்துக்கொள். உன் தந்தை இருந்தாலும் அதையே செய்திருப்பார்.
உனக்கு இப்படியொரு சூழலைக் கொடுத்த இந்த பிரபஞ்சத்தையும் மன்னித்துவிடு. இன்று முதல் புதிய வாழ்க்கையைத் தொடங்கு…’’ என்று சிரித்தார்.


இளைஞன் முகத்திலும் புன்னகை எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *