ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் வந்து ஞானகுருவிடம் ஆசி பெற்றனர். ‘’நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். யாராவது ஒருவருடைய சம்பளத்தை மிச்சப்படுத்தலாம் என்று நினைத்தாலும் முடிவதே இல்லை, ஏதேனும் செலவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கவேண்டிய சூழல்கூட ஏற்படுகிறது. நாங்கள் எப்படித்தான் பணத்தை மிச்சப்படுத்துவது?” என்று கணவன் கேட்க, மனைவியும் தலையாட்டினாள்.
‘’ஒரே ஒரு நாள் சம்பாதித்து 30 நாட்கள் செலவழிக்கிறீர்கள், அதை முதலில் குறையுங்கள். 15 நாட்கள் செலவழித்தால் போதும்’’ என்றார் ஞானகுரு.
‘’புரியலையே சாமி’’ மனைவி வாய்விட்டுக் கேட்டாள்.
‘’எல்லா செலவுகளுமே அவசியமாகவும், தேவையாகவும்தான் இருக்கும். அதனால், எதையுமே தவிர்க்க இயலாததாகத் தெரியும். ஆகவே, செலவு செய்யும் தினங்களைக் குறைத்தால் நிச்சயம் பணம் சேமிக்க முடியும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
அதாவது ஒரு நாள் செலவழித்தால், அடுத்த நாள் எந்த காரணத்துக்காகவும் பணம் செலவு செய்யப்போவதில்லை என்று உறுதியுடன் இருக்கவேண்டும்.காய் வாங்குவதாக இருந்தாலும் சரி, அவசர ஆஸ்பத்திரி செலவானாலும் சரி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே செலவு செய்யும் பழக்கத்தை கடுமையாக கடைபிடித்துப் பாருங்கள்’’
‘’அதெப்படி ஆஸ்பத்திரி செலவை தள்ளிப்போட முடியும்?””
‘’கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் எல்லா மருத்துவமனைகளும் மூடித்தான் கிடந்தன. செத்தா போய்விட்டாய்..?’’
‘’உண்மைதான். ஆனால், அடுத்த நாளுக்கும் சேர்த்து வாங்கி வைத்து, அது கெட்டுப்போகும் சூழல் ஏற்படலாமே..?’’
‘’ஆரம்ப சில நாட்களுக்கு குழப்பம் வரலாம், ஒருசில பொருட்கள் கெட்டும் போகலாம். ஆனால், இதனை தொடர்ந்து பழக்கத்தில் கொண்டுவரும்போது, நிச்சயம் தேவையில்லாத பல செலவுகளை குறைக்க முடியும். குறிப்பாக கடைகளில் போய் தேநீர், சிகரெட், வடை சாப்பிடுவது, காய் வாங்கும்போது கண்ணைக் கவரும் வகையில் தொங்கும் சிப்ஸ் பாக்கெட்களை அள்ளி வருவது போன்றவை நிச்சயம் குறையும். அதனால், பணம் சேமிப்பாகத் தொடங்கும். இந்த15 நாட்கள் என்பது ஆரம்ப காலத்துக்கு மட்டும்தான். அதன்பிறகு செலவு தினங்களை 10 நாட்களாக குறைத்துக்கொள். நீயே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகளை இந்த 10 நாட்கள் சேமிப்பு கொடுத்துவிடும். முயற்சி செய்து பார்’’ என்று முடித்தார் ஞானகுரு.
ஒரு புதிய வழி கிடைத்த சந்தோஷத்தில் கிளம்பினார்கள் தம்பதியர்.