கையில் கத்தியுடன் பாலுச்சாமி நிற்கும்போது, ‘அவன் போலீஸ்காரன், அவனைக் குத்திக் கொன்றுவிடு’ என்று வைத்தியநாதனை பார்த்துச் சொன்னதும்… நடுக்கத்துடன் அப்படியே நின்றுவிட்டான்.
நான் விளையாட்டாகச் சொல்கிறேன் என்பதை சட்டென புரிந்து கொண்ட பாலுச்சாமி, ’’சாமி… ஏன் பொய் சொல்றீங்க… பாவம் பச்சப் பையனா மாதிரி இருக்கான், நான் யோசிக்காம எதையாவது செஞ்சுடப்போறேன். அவன் உங்க சிஷ்யனா?’’ என்று கேட்டான்.
முகம் வெளுத்துப்போயிருந்த வைத்தியநாதனை அழைத்து என் அருகே அழைத்து அமர வைத்ததும், ‘‘பயப்படாத தம்பி… நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்…””’ என்று சமாதானப்படுத்திய பாலுச்சாமி கத்தியை இடுப்புக்குள் செருகிக் கொண்டான்.
’’ஆமாம் வைத்தியநாதா… இவன் மிகவும் நல்லவன், இரண்டு நபர்களை மட்டும்தான் கொலை செய்திருக்கிறான்…”” என்று நான் சொன்னதும் இன்னமும் மிரண்டான்.
’’கலிகாலத்துல இப்படித்தான் சின்ன வயசுலேயே கொலைவெறியோட திரிவாங்கன்னு கதாகலேட்சபத்துல கேட்டிருக்கேன்…’’ என்று முனகினான் வைத்தியநாதன்.
’’அப்படின்னா கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகங்களில் தேனும், பாலும் ஓடி, மக்கள் துன்பமின்றி வாழ்ந்தார்களா?’’ என்று வைத்தியநாதனைப் பார்த்து கேட்டேன்.
’’ஆமா சாமி… அந்த யுகங்களில் எல்லாம் தர்மம் மட்டுமே இருந்ததாம், அதனால் மக்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். கலிகாலம் பிறந்தபின்பே அதர்மம் தலை தூக்கிவிட்டது…’’ என்றான்.
’’வைத்தியநாதா… கிருத, திரேத, துவாபர யுகங்கள் எல்லாமே கற்பனை யுகங்கள்தான். மனிதர்கள் உருவான காலத்திலிருந்து துன்பத்தில்தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய நிலையை விட, முந்தைய காலத்தில் மனிதர்கள் வாழ்வு மிகவும் மோசமாகத்தான் இருந்தது. நரமாமிசம், வலியவனுக்கு மட்டுமே வாழ்வு, அடிமைத்தனம், வர்ணபேத கொடூரங்கள், பெண்ணடிமை போன்றவை சமீப யுகங்களில்தான் குறைந்திருக்கிறது…’’
’’என்ன சாமி… இப்படிச் சொல்றீங்க, பெரியவங்க சும்மாவா சொல்லி வைச்சிருப்பாங்க! அவங்க சொன்னதை சந்தேகப்பட்டா நரகம்தான்…’’ என்றான் ஆதங்கத்துடன்.
’’பெரியவங்க சொன்னதெல்லாம் வேதவாக்கு என்று கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் உன்னைப் போன்ற மனிதர்கள் இருப்பதால்தான், ஆன்மிக விற்பனை படுஜோராக நடக்கிறது…’’ என்றேன்.
வைத்தியநாதனுடன் ஆன்மிக உரையாடல் நடத்தியதில் அலுத்துப்போன பாலுச்சாமி, ‘‘சாமி… முதல்ல என்னைக் கவனிங்க…’’ என்றான்.
ஏழ்மை, பசி என்றால் என்னவென்று அறியாமல் இறைவனை தேடும் அப்பாவி ஒருவன். வறுமை மற்றும் சாதிக் கொடுமையால் துரத்தப்பட்டு, மரணத்தின் தூண்டிலில் சிக்கித் தவிக்கும் இன்னொருவன் என இருவரையும் ஒரு சேர பார்க்க விசித்திரமாக இருந்தது.
’’இந்த நேரம் நீ விரும்புவது என்ன?’’ என்று பாலுச்சாமியிடம் கேட்டேன்.
’’சாமி… கூட்டமா ஆட்கள் என் கூட இருந்த தைரியத்துல தப்பு பண்ணிட்டேன். ஆனா, என்னால நிம்மதியா தூங்க முடியலை. காலத்தைக் கொஞ்சம் திருப்பிப் போட்டு அந்த கொலையைத் தவிர்க்க ஆசைப்படுறேன். அது முடியாதுன்னு தெரியும், அதனால எதிர்காலம் இருட்டாத் தெரியுது. எப்படியாவது நான் செஞ்ச தப்புக்கு விடுதலை கிடைச்சுட்டா சந்தோஷமா இருக்கும்…’’ என்றான்.
’’இரண்டு குடும்பத்தின் சிரிப்பை முழுமையாகப் புடுங்கி எறிந்துவிட்டு, நீ சந்தோஷத்திற்கு ஆசைப்படுவது நியாயம்தானா பாலுச்சாமி?’’ குரல் உயர்த்திக் கேட்டேன்.
சட்டென உறைந்தவன், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான்.
’’திட்டம் போட்டு செய்யலையே சாமி… ஆனாலும் தப்பிச்சு ஓடிவந்து, இப்போ மலையில அனாதையா திரியும் போதுதான், ஒரு மிருகம் போல நடந்துக்கிட்டதை நினைச்சு வருத்தப்படுறேன்…” என்றான்.
’’மிருகங்களை அவமானப்படுத்தாதே பாலுச்சாமி. பசித்தால் மட்டுமே அவை பிற உயிர்களைக் கொல்லும். அவமானத்திற்காகவோ, கும்பல் துணைக்கு இருக்கும் தைரியத்தாலோ பிற உயிர்களைக் கொல்லாது. உன்னால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரையும் நீ வன்முறை பாதைக்குத் திருப்பி விட்டாய்…’’
’’என்ன சொல்றீங்க சாமி, அவங்க என்ன செஞ்சாலும் பொறுத்துப் போகணுமா? அவமானத்துடன் வாழணுமா?’’
’’அப்படியென்றால் நீ இருவரை வெட்டிப் போட்டதும் இந்த உலகம் மாறிவிட்டதா? இனி யாரும், யாரையும் அவமானப் படுத்தவே மாட்டார்களா? உன் ஆசைப்படி ஐ.ஏ.எஸ். முடித்து ஜெயித்துக் காட்டியிருக்க வேண்டும். கல்லூரி முடிக்கும் வரை நீ உன்னை நம்பியிருந்ததால், அவமானங்களை காக்கை எச்சம் போன்று துடைத்து எறிந்திருக்க வேண்டும். ஆனால் சங்கமும் தோழமை வட்டாரமும் கை கொடுத்ததும் தோற்று விட்டாய். நீ செய்த காரியத்தால் லாபமடைந்தது, உன்னுடைய சங்கம் மட்டுமே’’
’’அப்படின்னா சங்கம் தப்புன்னு சொல்றீங்களா?’’
’’அப்பனே… எல்லா சங்கங்களும் நல்ல நோக்கத்திற்காகவே ஆரம்பமாகின்றது, ஆனால் எந்த சங்கமும் அதன் நோக்கத்தில்இதுவரை வெற்றி பெற்றதில்லை, இனியும் வெற்றி பெற முடியாது…சங்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால், உன்னைப் போல் நிறைய பேர் தப்பு செய்ய வேண்டும், அவர்களைத் தேட வேண்டும். அதற்காகவே உனக்கு ஆதரவு காட்டுகிறார்கள். உனக்குக் கிடைக்கும் ஆதரவு பலருக்கும் தவறு செய்வதற்கு நம்பிக்கை கொடுக்கும். அது தவறு என்று தெரிந்தும் செய்வதுதான் சங்கம்… சங்கம் இருக்கும் தைரியத்தால்தான் பலர் தப்பு செய்கிறார்கள். பலரும் தப்பு செய்வதால்தான் சங்கம் இன்னமும் இருக்கிறது” என் பேச்சை நம்பவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் கேட்டு அதிர்ந்து நின்றான்.