நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் அத்தனை சங்கங்களும், சுயநலமாக மாறிப்போகும் உண்மையைச் சொன்னதும் அதிர்ந்து நின்றான் பாலுச்சாமி.

’’சங்கம் என்பது போலி என்பதை ஏன் யாரும் சொல்லித் தருவதில்லை..? மனிதன் யாரிடமும் எதுவும் கற்றுக்கொள்ளவே முடியாதா..?’’ வருத்தத்தில் ஆழ்ந்தான் பாலுச்சாமி.

’’கற்றுத் தருவதற்கு எத்தனையோ குருக்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் பாலுச்சாமி. ஆனால் மனிதன்தான் கற்றுக் கொள்வதில்லை.  தன்னை வெட்டுபவர்களுக்குக் கூட உபகாரமாக தங்கத்தையும் தண்ணீரையும் தரும் பூமியிடமிருந்து பொறுமையையும் மன்னிப்பையும் கற்றுக் கொள்ளலாம். நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லோரையும் சமநிலையில் பார்க்கும் மனப்பான்மையை மழையிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

எதையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வாழும் பற்றற்ற தன்மையை மரங்களிடமிருந்து அறியலாம். சேகரித்து வைப்பதால் துன்பம்தான் உண்டாகும் என்பதை தேனீக்களிடம் இருந்தும், நாவை அடக்காவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதை தூண்டில் மீன்களிடம் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். கவலை இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழும் கலையை குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.’’

பாலுச்சாமியும் வைத்தியநாதனும் வாய்மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

’’மனிதர்கள் தானாகவே கற்றுக் கொள்ள வேண்டும், இதுவரை இல்லை என்றாலும் இனியாவது அறிந்து கொள். நீ என்ன செய்யப் போகிறாய் என்று தெளிவாக முடிவெடு. போலீஸ்காரர்கள் உன்னை கடமைக்காகத் தேடுவார்கள். ஆனால் உன்னால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள், பழி வாங்க ஆத்திரத்துடன் தேடிக் கொண்டு இருப்பார்கள். அவர்களையும் கொலைகாரர்களாக மாற்றிவிடாதே…’’ என்றேன்.

’’நான் போலீஸ்ல போய் சரண் அடைஞ்சாலும், ஜாமீன்ல வரும்போது அல்லது விடுதலையாகும்போது, என்னய அவங்க என்னை கொல்றதுக்கு வாய்ப்பு இருக்கே சாமி…’’ என்றான் பாலுச்சாமி.

’’மரணம் எங்கே, எப்போது, எப்படி வரும் என்பதை எவரும் அறிய முடியாது. இதோ இப்போதுகூட சில பாறைகள் உருண்டு விழுந்து நாம் மரணமடையலாம்.  உன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று மன்னிப்புக் கேள். அவர்கள் உன்னை மீண்டும் அவமானப் படுத்தினாலும், கொலை செய்ய முயன்றாலும் எதிர்ப்பைக் காட்டாதே. எதிர்க்காத எவருக்கும் தீங்கு நடக்காது… கிளம்பு..” என்றதும் தயங்கினான்.

‘’மரணம் எப்போதாவது மட்டுமே வரவேண்டும் பாலுச்சாமி, ஒவ்வொரு நொடியும் மரணம் வந்துவிடும் என்ற அச்சத்துடன் வாழக்கூடாது. உன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேள், அவர்கள் உன்னை அடித்துக்கொன்றாலும், போலீசில் ஒப்படைத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்..’’

பாலுச்சாமி பெருமூச்சு விட்டபடி எழுந்தான். ‘‘சாமி… ஏதோ ஒரு பயம் நெஞ்சுக்குள்ளே உருத்திக்கிட்டே இருந்திச்சு, இப்போ கொஞ்சம் பரவாயில்லை… ஒரேயடியா சாகுற தைரியம் வந்திடுச்சு’’ என்றபடி காலைத் தொட குனிந்தான்.

அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினேன். ‘‘பாலுச்சாமி… உலகம் கொடூரமாக உன்னை தண்டிக்கலாம்… கடைசிவரை நம்பிக்கையைத் தளரவிடாதே… ஏதாவது ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். உனக்கு படிப்பு நன்றாக வரும் என்றால் அதில் ஆழமாக இறங்கு… அன்புமயமாக மாறு. திரும்பிப் பார்க்காமல் நட!’’ என்று தலையைத் தடவிக் கொடுத்ததும், வேகவேகமாக மலையில் இருந்து கீழே இறங்கி காணாமல் போய்விட்டான்.

நடந்ததை எல்லாம் ஏதோ கனவு போன்று பார்த்துக் கொண்டு இருந்தான் வைத்தியநாதன்.

’’சாமி… அவன் போலீஸ் ஸ்டேஷன் போகாமல் தப்பித்துப் போய்விட்டால் என்ன செய்யமுடியும்?’’ என்று சந்தேகம் கேட்டான்.

’’அவன் கதை உனக்கெதுக்கு வைத்தியநாதா… என்ன வாங்கிவந்தாய்?’’ என்று கேட்டதும், சட்டையைத் தூக்கி மடியில் கட்டியிருந்த இரண்டு இட்லி பொட்டலங்களை எடுத்துக் கொடுத்தான்.

‘’ஏன்… இப்படி மறைத்து எடுத்துவந்தாய்?’’

’’இல்லேன்னா… வர்றவழியில குரங்குக புடுங்கிடும் சாமி…’’

’’குரங்குகளுக்காக வாங்கியதை, அதற்கே கொடுப்பதில் உனக்கென்ன வருத்தம்?’’

’’அங்கே இருக்கிறது வேற குரங்குக…’’ என்று சொல்லவந்தவன் அப்படியே நிறுத்தி, ‘‘மன்னிச்சுடுங்க சாமி…’’ என்று பொட்டலங்களைப் பிரித்து வைத்தான். உடனே அக்கம் பக்கம் இருந்த குரங்குகள் ஆளுக்கொன்றாய் எடுத்துப்போக, நானும் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன். அதைப் பார்த்து முகம் சுளித்தான் வைத்தியநாதன்.

’’சாமி… குற்றாலத்துல சித்தர்கள்தான் மரமா இருக்கிறதா சொல்றாங்களே உண்மையா? ராத்திரி நேரங்களில் மரங்கள் எல்லாம் நடக்குமாம், பேசுமாம், சித்ரா பௌர்ணமிக்கு எல்லா சித்தர்களும் அருவிக்கரையில் கூடி பூஜை செய்வார்களாம்?’’ என்று ஆர்வமாகச் சொன்னான்.

’’ஏன் அத்துடன் நிறுத்திக் கொண்டாய்… சித்தர்கள்தான் குரங்கு உருவத்திலும் திரிகிறார்கள் தெரியுமா?’’ என்றேன்.

உடனே ஆத்திரமானான் வைத்தியநாதன்.  ‘’சாமி… சித்தர்கள் எல்லாமே தெய்வத்துக்குச் சமமானவங்க, அவங்களைப் போய்…’’ என்று இழுத்தான்.

’’என்னப்பா… ஓருயிராக இருக்கும் மரத்தை சித்தர்கள் என்றால் சந்தோஷப்படும் நீ, ஐந்தறிவு படைத்த குரங்காக இருக்கிறார்கள் சொன்னால் கோபப் படுகிறாய். இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களும் ஒன்றுதான், எந்த உயிரையும் விட எதுவும் தாழ்ந்தவை அல்ல, உயர்ந்தவையும் அல்ல. கிளம்பலாம் வா…’’ என்றபடி நடக்கத் தொடங்கினேன்.

பின்னாலே வந்த வைத்தியநாதன், ‘’சாமி… நான் பூசாரியாக ஆசைப்படுறது தப்பா?’’ என்று கேட்டான்.

’’மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தை, அந்த வீட்டிலேயே வசிப்பேன் என்று ஆசைப்பட்டால் என்ன சொல்வாய்?’’

நான் அவனை ஆதரிக்கவில்லை என்று தெரிந்ததும் அமைதியாக நடந்துவந்தான்.

’’ஒரு பூசாரியின் வேலை என்ன தெரியுமா?’’

’’கடவுளுக்கு சேவை செய்வது…’’ என்று ஆர்வமாகச் சொன்னான்.

’’தப்பு வைத்தியநாதா… மனிதர்களை கடவுளுக்கு அருகே அழைத்துச் செல்வதுதான் ஒரு பூசாரியின் வேலை. மாணவனுக்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ஆசிரியரைப் போன்று கடவுளைக் காட்ட வேண்டும். ஆனால் உன்னுடைய விருப்பமோ வேறு மாதிரி இருக்கிறது. எப்போதும் கடவுளுடன் இருக்க ஆசைப்படுபவன் பூசாரியாகக் கூடாது, துறவியாகத்தான் மாறவேண்டும். தாய், தந்தை, கோயில், கடவுள் என எந்த பற்றும் இல்லாத துறவியாக மாற வேண்டும். அனைத்தையும் விட்டுவிடத் தயாராக இருக்கிறாயா?’’ என்றேன்.

’’அதெல்லாம் வேண்டாம் சாமி… உங்களைப் போல குரங்குக்கு வைச்ச சாப்பாட்டையெல்லாம் என்னால சாப்பிட முடியாது. அம்மா அப்பா கூடவே இருந்துக்கிட்டு பூசாரியா இருந்துக்கிறேன். உங்களால அப்பாவை சமாளிக்க முடியாட்டாலும் பரவாயில்லை, நானே சரிக்கட்டிக்கிறேன்…’’ என்றான்.

இவனை அறிவுபூர்வமாகப் பேசி சரிக்கட்ட முடியாது என்று புரிந்ததால், உணர்வு பூர்வமான ஆயுதத்தைக் கையில் எடுத்தேன்.

’’இதனை சொல்லக்கூடாதுதான். சொல்வதால் உன் மனம் வேதனைப்படும். ஆனாலும் சொல்கிறேன். உன் அப்பாவுக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்பது தெரியுமா?’’ என்று சொல்லிவிட்டு நான் நடக்க, அசையாமல் அப்படியே சிலை போல் நின்றான் வைத்தியநாதன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *