இரவு 8 மணி. இன்றும் மனோகரன் வரவில்லை. கடுமையான மனப்போராட்டத்தில் தவித்தாள் அனிதா. ஒரு சின்ன மனஸ்தாபம் இத்தனை பெரிய விரிசலை கொண்டுவருமா என்று புரியாமல் தவித்தாள்.

பெற்றோரை எதிர்த்துக்கொண்டு திருமணம் முடித்தது தவறு என்று, கடந்த ஐந்து மாதங்களில் ஒரு நாள்கூட உணர்ந்ததில்லை. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கு நடந்த பிரச்னையால் அப்படி நினைக்க வைத்துவிட்டான் மனோகரன்.

இரவு சாப்பாட்டுக்கு சப்பாத்தி தயார் செய்யச் சொன்ன மனோகரனிடம், ஹோட்டலில் இருந்து வரவழைக்கச் சொன்னாள் அனிதா. ஹோட்டல் வேண்டாம், நீ எத்தனை மோசமாக செய்தாலும் பரவாயில்லை, சப்பாத்தி செய்துவிடு என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு குளிக்கப் போனான்.

உடனே வேகமாக கிச்சனுக்குப் போய் மாவு பிசைந்து, உருளைக்கிழங்கு வேகவைத்து, வெங்காயம் நறுக்கிவைத்தாள். பாத்ரூமுக்குள் இருந்தபடி யாருக்கோ மனோகரன் சீரியஸாக போன் பேசுவது வெளியே வரை கேட்டது. அவனை சீண்டிப்பார்க்கும் ஆசையில், கிச்சனில் எதுவுமே செய்யாதவள் போன்று தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்துகொண்டாள் அனிதா.

குளித்துவிட்டு வெளியே வந்த மனோகரன் அனிதாவை கோபப் பார்வை பார்த்தான். அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல், தொலைக்காட்சியை ஆழ்ந்து பார்ப்பது போன்று பாவலா செய்தாள். வழக்கமாக மனோகரன் இரவுக்குளியல் முடித்ததும் அறைக்குள் போய் கைலி மாற்றி, பவுடர் அலங்காரம் செய்து 10 நிமிடங்கள் கழித்துத்தான் வெளியே வருவான். அதற்குள் சப்பாத்தி சுட்டு, குருமாவும் வைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டு காத்திருந்தாள். 

‘’அப்படின்னா சப்பாத்தி செய்யமாட்டியா…?’’

காது கேட்காதவள் போன்று தொலைக்காட்சியை உற்றுக் கவனித்தாள். அனிதாவுக்கு இந்த விளையாட்டு ரொம்பப் பிடித்திருந்தது. பதில் வரவில்லை என்றதும் கோபமாக அறைக்குள் நுழைந்தான் மனோகரன்.

உடனே வேகவேகமாக நான்கு சப்பாத்தி சுட்டு, குருமா வைத்து டைனிங் டேபிளில் மூடி வைத்தாள். மனோகான் வெளியே வருவதற்கு முன், மீண்டும் ஷோபாவில் உட்கார்ந்துகொண்டாள். வழக்கமாக பத்து நிமிடங்களில் வெளியே வருபவன் ஏனோ கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டான்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த மனோகர் கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது.  என்னவென்று அனிதா கேட்க வாய் திறப்பதற்குள், “”நான் இனிமே வெளியே தங்கிக்கிறேன்… நீ யாருக்காகவும் சப்பாதி சுட வேண்டாம். உன் இஷ்டப்படி இருந்துக்கோ…”” என்றபடி கிளம்பினான். மனோ, மனோ என்று கூப்பிட்டதை கொஞ்சமும் சட்டைசெய்யாமல் வெளியே போயே விட்டான்.

மனோகரனின் செயல் அனிதாவுக்கும் கோபத்தை உண்டாக்கியது. அப்படி என்ன நடந்துவிட்டது, கேவலம் சப்பாத்திக்காக என்னுடைய உறவே வேண்டாம் என்று ஒருவன் கிளம்புவானா என்று அழுகை வந்தது. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கொண்டு, இரவு திரும்பிவிடுவான் என்று காத்திருந்தாள். மனோகரன் வரவே இல்லை. இன்றோடு நான்காவது நாள்.

இதுவரை, மனோகரனின் நண்பனிடம்கூட போன் செய்து கேட்கவில்லை. மனோகரனே பேசட்டும் என்று நினைத்தாள். ஆனால், இன்று வரை எந்த தகவலும் இல்லை. இனியும் மனோகரனுக்காக காத்திருப்பது நியாயமா என்று யோசித்துப் பார்த்தாள்.

அம்மாவுக்கு ஏனோ மனோகரனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அவனை திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்தாள். அம்மாவின் எதிர்ப்புக்கு மரியாதை கொடுத்து அப்பாவும் அமைதியாக இருந்தார். அம்மாவை சமாதானப்படுத்திவிட்டால், எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார்.

‘’நான் என் விருப்பத்துக்கு மாப்பிள்ளை தேடக்கூடாதா?”” என்று அப்பாவிடம் சண்டை போட்டபோதும் அவர் கோபப்படவில்லை.

‘’உன் வாழ்க்கை, உன் விருப்பம். ஆனால் என் மனைவிக்குப் பிடிக்காத விஷயத்துக்கு நான் ஆதரவு தரமாட்டேன். அம்மாவை சமாதானப்படுத்துவது உன் வேலை..”” என்று சொன்னார். ஆனால், அசட்டுத்தனமாகப் பேசும் அம்மாவை எதற்கு கெஞ்சவேண்டும் என்று வீம்பாக இருந்துவிட்டாள் அனிதா. இதே பிரச்னை மனோகரன் வீட்டிலும் வரவே, நண்பர்கள் துணையுடன் திருமணம் முடித்துக்கொண்டார்கள்.

சிம்பிளாக திருமணம் முடித்துவிட்டு,  ஏற்கெனவே பார்த்துவைத்திருந்த அபார்ட்மெண்ட்டுக்கு குடிவந்தார்கள். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள் அனிதா. வீட்டில் இருந்தபடி குரூப் 1 பரிட்சைக்குப் படி என்று மனோகரன் சொன்னதைக் கேட்டு, வேலையைவிட்டு படித்துக்கொண்டு இருக்கிறாள்.

திருமணம் முடித்து தனிக்குடித்தனம் வந்து ஐந்து மாதங்களில் எத்தனையோ சண்டை வந்திருக்கிறது. ஆனால் எல்லாமே சில நிமிடங்களில் அல்லது ஒரு நாளில் சரியாகிவிடும். ஆனால், இப்படி பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒரேயடியாகப் போவான் என்று ஒருபோதும் அனிதா எதிர்பார்க்கவே இல்லை.

இனியும் காத்திருக்க வேண்டுமா என்று யோசித்தாள். இதுநாள் வரை அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ போன் செய்யவே இல்லை என்பது மனதில் முள்ளாக உறுத்தியது. ஆனால் தனக்கு வேறு யாரும் இல்லை என்பது தெரிந்ததும், சட்டென்று அப்பாவுக்குப் போன் செய்தாள்.

எதிர்முனையில் அப்பா எடுத்ததும் கதறிக்கதறி அழுதாள். வீட்டுக்கு வெளியே வந்து பேசுகிறேன் என்று சில நிமிடங்கள் கழித்துப் பேசினார். நடந்ததை முழுமையாகப் பேசினாள். ஒரு வார்த்தைகூட குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்.

‘’இப்போ நான் என்னப்பா செய்றது..?”

‘காத்திரும்மா..”” மென்மையாகப் பதில் சொன்னார்.

‘’என்னப்பா இப்படி சொல்றீங்க….  என்னை வேண்டாம்னு விட்டுப் போனவருக்காக காத்திருக்கவா…  ஒரு போன்கூட செய்யலப்பா… இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கவாப்பா…?””

‘’இல்லம்மா காலம் முழுசும் காத்திரு… அவன் திரும்பிவந்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கும், வரலைன்னா நல்ல அனுபவம் கிடைக்கும்… காத்திரும்மா…””

’’எனக்கு அவமானமா இருக்குப்பா…””

‘’எங்களுக்கும் அப்படி இருந்திச்சும்மா… அதையெல்லாம் கடந்துவந்துடலாம். நீ இன்னும் கொஞ்சம் காத்திருந்தா உங்க அம்மா மனசு மாறியிருக்கலாம். அதைவிடு, இனியாவது  நான் சொல்றதைக் கேளு… காத்திரு… உன்னால் முடியும் வரை காத்திரு…”” என்றபடி பதிலைக் கேட்காமல் போனை கட் செய்தார்

இப்போது அனிதாவுக்கு உலகமே இருண்டுவிட்டதாக தோன்றியது. அப்பாவால் எப்படி பொறுப்பில்லாமல் பேசமுடிகிறது என்று அதிர்ந்தாள். ஆனால், ஆண்களைப் பற்றி அப்பாவுக்கு ஏதேனும் தெரியுமோ, அதனால்தான் காத்திருக்கச் சொல்கிறாரோ என்றபடி சிந்தனையிலே தூங்கிப் போனாள்.

அடுத்த நாள். காலை 8 மணி.

அப்பாவுக்கு போன் செய்தாள் அனிதா. ‘’அப்பா.. அவர் வந்துட்டாருப்பா…. ஆபிஸ்ல அவசர டூர். நான் அவரை ஏமாத்த நினைச்சதை கண்டுபிடிச்சுட்டாருப்பா. அதனால என்னை கோபப்படுத்தத்தான் எதுவும் சொல்லாம போயிருக்கார். ஆனா, ரூம்ல கடிதம் எழுதி வைச்சிருக்காருப்பா. நான்தான் அவர் மேலே இருந்த கோபத்துல அந்த ரூமுக்கே போகலை… நீங்க சொன்ன மாதிரி கோவிச்சுட்டு வந்திருந்தா தப்பா போயிருக்கும்பா… எப்படிப்பா அவர் நல்லவர்ன்னு தெளிவா சொன்னீங்க.. எனக்கு ஏன் அந்தத் தெளிவு வரலை…. என்னை மன்னிச்சிடுங்கப்பா… உங்ககிட்டயும் அம்மா கிட்டேயும் மன்னிப்பு கேட்கணும், எனக்கும் ;தெளிவு வரணும்பா…””

‘’வரும்மா… காத்திரும்மா ”” என்றபடி போனை அணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *