தலை நரைத்துப்போன முதியவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘வெள்ளை நரை என்பது, காலம் உங்கள் தலையில் அணிவிக்கும் மணி மகுடம். நிறைய பேர் இந்த மகுடம் கிடைக்காமலே இந்த பூமியில் இருந்து விடைபெற்று போய்விடுகிறார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி’ என்று சொன்ன பிறகும், முதியவர் முகத்தில் குழப்பம் தென்பட்டது. ஞானகுரு கண்களால் அனுமதி கொடுத்ததும் கேள்வியைக் கேட்டார்.

‘’எனக்கு இப்போது மூட்டு வலியும் நீரிழிவு நோயும் இருக்கிறது. அவ்வப்போது மூச்சு முட்டுகிறது. எவ்வளவு பணம் இருந்தால், என் முதுமையை நான் நல்லபடியாக கழிக்க முடியும்?’’

ஞானகுரு புன்னகையுடன் பேசத் தொடங்கினார். ‘’நீ கோடி கோடியாக பணம் சேர்த்து வைக்கலாம். உன்னிடம் இருக்கும் பணத்துக்கு ஏற்ப உனக்கு நல்ல அறையும், நல்ல வேலைக்காரர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முதுமையில் உன்னால் நடக்க முடியாமல் ஓர் அறைக்குள் முடங்கிப்போயிருப்பாய். இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் சிரமப்படுவாய். அதைக் காணும் குடும்பத்தினர் உன் அருகே வருவதற்கு சங்கோஜப்படுவார்கள். பிள்ளைக்கு உன் மீது பாசமும் அன்பும் இருந்தாலும், ஒரு பார்வையாளராகத்தான் உன்னை கடந்து போவார்கள். அவரவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் உன்னிடம் ஒரு புன்னகை சிந்துவதற்குத்தான் நேரம் இருக்கும். உனக்கு ஏதாவது ஒன்று என்றால், உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள், உயிரைக் காப்பாற்றிவிடுவார்கள். ஆனால், இதைத்தான் எதிர்பார்க்கிறாயா..?’’

‘’வேறு எப்படி முதுமையில் இருக்க முடியும்?”

‘’பணத்துக்குப் பதிலாக உன்னுடைய ஆரோக்கியத்தை சேமித்து வை. உன் கால்கள், கைகள், கண்கள், காதுகள், மூக்கு, வாய், ஆசனவாய் போன்ற அனைத்தும் உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அளவுக்கு ஆரோக்கியத்துக்கு ஆசைப்படு. பணம் சேர்க்கவும், சேமிக்கவும் செலவழிக்கும் நேரத்தை இனி, உன் உடல் ஆரோக்கியத்துக்காகவும் செலவழி…’’

‘’அதனால் என்னாகும்..?’’

‘’ஆரோக்கியமான தாயையும் தந்தையும் தனி அறையில் யாரும் அடைத்துவைப்பதில்லை. நீ சமையல் அறை வரையிலும் புழங்க முடியும். பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லவும், பாதுகாப்புக்காக உடன் சென்றுவரவும் முடியும். உன்னால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து உதவவும் முடியும். உன் ஆரோக்கியம் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்பதால், ஆலோசனை கேட்பார்கள். குடும்பத்தினர் உன்னை மதிக்கவில்லை என்றாலும் என்னைப் போன்று தேசாந்திரியாக மரணம் வரையிலும் திரியலாம். அதனால் வயிற்றுக்கு மட்டும் பணத்தைத் தேடு. வாழ்க்கைக்கு ஆரோக்கியம் தேடு’’

முதியவர் திகைத்து நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *