உழைத்து ஓடாய்த் தேய்ந்திருந்த ஒரு தம்பதி ஞானகுருவைத் தேடி வந்தனர். ‘’இத்தனை காலம் உழைச்சு பணம் சம்பாதிக்க எத்தனையோ சிரமப்பட்டோம். சாப்பிடத்தான் முடிஞ்சதே தவிர, பத்து ரூபாய்கூட சேர்க்க முடிலை. கடவுளைக் கூட பார்த்துடலாம் போல இருக்கு, பணத்தை நாங்க பார்க்கவே முடியாதா?’’ கவலையுடன் கேட்டனர்.
‘’கடவுளும் பணமும் வெற்றிடத்தில் இருந்து உருவானவை. அவற்றை நீ தேடினால் கண்டடைவது கடினம். வெற்றிடத்தில் இருந்து அதனை உருவாக்கும் திறமை வேண்டும்’’ என்றார் ஞானகுரு.
‘’புரியலையே சாமி… அதென்ன வெற்றிடத்தில் இருந்து உருவானது..?’’
‘’இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்தார் என்றால், அவர் வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருந்து இதனை படைத்தாரா? அப்படியென்றால் அவர் இருந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? அந்த கடவுளை உருவாக்கியது யார்? கடவுளை ஒருவர் உருவாக்கினார் என்றால் அவர் கடவுள் இல்லையா? என்று விடை தெரியாத கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். அதனால், கடவுள் வெற்றிடத்தில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும், தோன்றியிருக்க முடியும்…’’
‘’இன்னும் புரியலையே சாமி’’
‘’மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது போன்று வெற்றிடத்தில் இருந்து கடவுள் உருவாகியிருந்தால்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியும். அந்த வெற்றிடம்தான் கடவுள். அப்படியொரு வெற்றிடத்தை கண்டறிந்தால்தான் கடவுளை உன்னால் காண முடியும்…’’
‘’இன்னும் புரியலை. கடவுள் எனக்கு வேண்டாம். நீங்கள் பணமும் வெற்றிடத்தில் இருந்து உருவானது என்று சொல்கிறீர்களே, அதையாவது புரிய வையுங்கள்..’’
‘’இதோ என் கையில் ஒரு செப்புக்காசு இருக்கிறது. இதனை கீழே போட்டால் எடுப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். இதனையே, ‘இந்த செப்புக்காசு கடவுளின் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த காசு வீட்டில் இருந்தால் கண் திருஷ்டி படாது, காத்து, கருப்பு வீட்டுக்குள் வராது. செல்வம் கொட்டும்’ என்று சொன்னால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து இந்த செப்புக்காசை வாங்குவதற்கு ஆட்கள் இருப்பார்கள். இப்போது சொல், இந்த காசுக்கான மதிப்பு எங்கிருந்து வந்தது..?’’
‘’உண்மையில் மதிப்பு இல்லை, ஆனால் பணம் வருகிறது…’’
‘’சரியாகச் சொன்னீர்கள். வெற்றிடத்தில் இருந்துதான் இந்த பணம் உருவாகிறது. இப்படித்தான் அரசர்கள் பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் உருவாக்கினார்கள். அதற்கு ஈடாக அவர்களிடம் எதுவும் கிடையாது. இப்போது உன் கையில் இருக்கும் பணத்துக்கு ஈடாக தங்கம் ரிசர்வ் வங்கியில் இருப்பதாக அரசுகள் சொல்கின்றன. ஆனால், அப்படி எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை. அதனால்தான் கடவுளை போலவே பணமும் வெற்றிடத்தில் இருந்து உருவாவதாகச் சொல்கிறேன்.
அப்படி வெற்றிடத்தில் இருந்து பணத்தை உருவாக்கத் தெரிந்தவனே பணக்காரனாக மாறுகிறான். வெறுமனே உழைப்பின் மூலம் பணத்தை சேர்த்துவிட முடியும் என்று கடினமாக உழைப்பவன், உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’’ என்றார் ஞானகுரு.