ஓய்வு பெறப்போகும் வயதில் ஒருவர் ஞானகுருவை சந்திக்க வந்தார். ‘’எனக்கு இன்னும் ஆறு மாதங்களில் வேலையில் இருந்து ஓய்வு கிடைக்கப்போகிறது. என் பிள்ளைகள் செட்டில் ஆகிவிட்டார்கள். போதுமான அளவுக்குப் பணம் சேமித்து வைத்திருக்கிறேன். எனக்கு பென்ஷனும் வரும். ஆனால், நான் என்ன செய்வது என்பதுதான் இப்போது பிரச்னையாக இருக்கிறது. வேலையில் இருந்து விடுதலை கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தேன், ஆனால் எப்படி சந்தோஷமாக இருப்பது என்று புரியவில்லை. எதுவும் சந்தோஷம் தரவில்லை. அதனால், மீண்டும் ஏதேனும் வேலைக்குப் போகலாமா?’’ என்று கேட்டார்.

‘’நீ விரைவில் ஏதேனும் வேலையில் சேராவிட்டால், மரணத்துக்குத் தயாராகிவிடுவாய்’’ என்றார் ஞானகுரு.

‘’சுவாமி…புரியவில்லையே’’ என்று கேட்டார்.

‘’மனிதர்கள் வாழ்வதற்கு பணம் தேவை. ஆனால், அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். நீயும் அவர்களில் ஒருவன். அதாவது நாளை உனக்கு பணம் தேவைப்படும் என்பது மட்டும்தான் உன் சிந்தனையாக இருக்கிறது. இன்றைய தினம் வாழ்வதற்கும், செலவழிக்கவும் நீ தயாராக இல்லை’’ என்றார்.

‘’நீங்கள் சொல்வது உண்மைதான். இப்போதே என் பணத்தை செலவழித்துவிட்டால், என் எதிர்காலம் பற்றி அச்சமாக இருக்கிறது. அதனால், மீண்டும் வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

அவரை பார்த்து பரிதாபமாக சிரித்தார் ஞானகுரு. ‘’உனக்கு நாளை என்ற ஒன்று வரப்போவதே இல்லை. ஏனென்றால், நீ வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்து நாளைக்காகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறாய். அதனால் உன் சந்தோஷத்தையும் இளமையையும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தாய். இப்போது அது உன்னுடைய சிந்தனையுடன் ஊறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இன்னமும் நீண்ட காலம் நீ வாழப்போவதாக நினைக்கிறாய். உன் உடல் பலவீனமாகும் நேரத்தில் பணம் உதவி புரியும் என்று நினைக்கிறாய்.

பணத்தால் உன்னுடைய பலவீனத்தை சரிக்கட்ட முடியாது என்ற உண்மை உனக்குப் புரியவில்லை. நீ படுக்கையில் விழுந்தாலும்கூட, எதிர்காலத்திற்குத்தான் கனவு காண்பாய். அதனால் முதலில் நாளை என்ற கனவில் இருந்து வெளியே வா… நாளை என்பது வருகிறதோ இல்லையோ, இன்றைய தினம் சந்தோஷமாக வாழு. அதுதான் உனக்குத் தேவையான வாழ்க்கை…’’

‘’எனக்கு எது சந்தோஷம் தரும் என்பதே மறந்தேவிட்டது…’’

‘’மிகச்சரியாகச் சொன்னாய். உன் சந்தோஷத்தையும் எதிர்காலம் அபகரித்துக்கொண்டது. இனியாவது அந்த மர்ம தேசத்தில் இருந்து வெளியே வா. இப்போது பணம் பிரச்னை இல்லை என்பதைப் புரிந்துகொள். எந்த நேரமும் மரணம் வரலாம் என்பதை புரிந்துகொள்… அதனால் உன் உயிர் வாழ்தலை அர்த்தமாக்கு…’’

‘’நான் உயிரோடு இருந்து யாருக்கு என்ன பயன்..?’’

‘’யாருக்கும் பயனற்றவன் ஆகிவிட்டேன் என்ற எண்ணம்தான் உன்னுடைய மிகப்பெரிய எதிரி. இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கிறது. மண் புழுவில் இருந்து இமயமலை வரையிலும் ஏதோ ஒரு காரியத்துக்காக படைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள். உன்னுடைய வாழ்க்கை நீள்வதிலும் ஏதோ அர்த்தம் உள்ளது. அதனால் இனி ஒரு நிமிடமும் வீணாக்காதே. முதலில் உன்னுடைய சந்தோஷம் எது என்பதைக் கண்டுபிடி. அதன்பிறகு இன்றைய தினத்தில் வாழு. நாளை என்பதை மறந்துவிடு’’ என்றார் ஞானகுரு.

நம்பிக்கையுடன் எழுந்தார்.

Leave a Reply

Your email address will not be published.