அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ராகவ் என்ற ராகவேந்திரன், பஸ் ஸ்டாப்பில் காமாட்சி அத்தைக்காக காத்திருந்தான். வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதை நினைக்கவே வெறுப்பு வந்தது.

வீட்டு வாசலில் தலையைப் பார்த்ததும் அம்மாவின் திட்டும் புலம்பலும் ஆரம்பமாகிவிடும். மனைவி, குழந்தைகள் பற்றி பக்கம்பக்கமாக புகார் வாசிப்பார். அதன்பிறகு தன்னுடைய உடல் எப்படியெல்லாம் படுத்துகிறது என்று பட்டியல் போட்டு விரைவில் செத்துவிடுவேன் என்று முடிப்பார்.

அப்பா உயிருடன் இருந்தவரை இத்தனை பிரச்னை இல்லை. சின்னச்சின்ன பிரச்னை, சண்டை வரும் என்றாலும் அம்மாவை சமாளிக்க அப்பா இருந்தார். அப்பா செத்துப்போன இரண்டே மாதத்தில் அம்மா மாறிவிட்டார். சட்டென்று வயதான எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. தினமும் ஒரு உடல் பிரச்னை சொல்கிறார். டாக்டர் சொல்வதை கேட்பதும் இல்லை, கடைப்பிடிப்பதும் இல்லை. என்ன பேசினாலும் முடிக்கும்போது செத்துவிடுவேன் என்றுதான் முடிக்கிறார்.

அம்மாவின் பிரச்னையை ஒரு மனநல மருத்துவரிடம் பேசினான். எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்று சொன்னார். முட்டையில் இருந்து குஞ்சுகள் பறந்து போனதும், தாய் பறவை சில நாட்கள் அங்கலாய்த்துக் கிடக்குமாம். அதுபோன்று அப்பா போன வெறுமையினால் புலம்புகிறார். ஆதரவாக இருப்பதுதான் மருந்து என்றார். ஆனால் நாளுக்கு நாள் பிரச்னை அதிகமாகிறது. அதனால்தான் கடைசி நம்பிக்கையாக காமாட்சி அத்தையை அணுகினான்.

காமாட்சி அத்தை சொந்தம் கிடையாது. அம்மாவின் நெருங்கிய தோழி. அம்மாவிடம் உரிமையுடன் பேசக்கூடியவர். அவர் பெங்களூருல் இருந்து வந்த தகவல் அறிந்து தன் பிரச்னையை போனில் கொட்டித் தீர்த்தான். இங்குதான் வருவதாகச் சொல்லியிருந்தார். நேரம் கடந்துவிட்டதோ என்று வாட்சைப் பார்த்து தலை நிமிர, தூரத்தில் காமாட்சி அத்தை ஆட்டோவில் இருந்து இறங்கினார்.  ராகவிற்கு சட்டென்று நம்பிக்கை வந்தது.

காமாட்சியத்தையைப் பார்த்ததும் அம்மா பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள். பிறகு இருவரும் இயல்புக்குத் திரும்பி . பழங்கதைகள் பேசினார்கள். அம்மாவின் முகத்தில் அபூர்வமாக சிரிப்பு பூத்தது.  கொஞ்சநேரம் காலார நடந்துட்டு வரலாம் என்று எழுந்த காமாட்சி அத்தை, ‘’நாங்க ரெண்டு பேரும் ஹோட்டல்ல சாப்பிடப்போறோம்’’ என்றபடி அம்மாவை வம்படியாக இழுத்துப்போனாள். அம்மாவும் அமைதியாக பின்னே போனதுதான் ஆச்சர்யம்.

ஹோட்டலில் ஆள் இல்லாத மூலையில் அமர்ந்ததும், ‘’உனக்கு என்ன பிரச்னை செல்வி?’’ என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள் காமாட்சி.

‘’சாப்பிட்டா செரிக்க மாட்டேங்குது, கால் வலி, முதுகுவலி… இன்னைக்கு வயித்தை சுண்டி இழுக்குது. வயசாயிடுச்சே… இன்னும் குத்துக்கல்லாட்டம் இருக்கமுடியுமா?’’

’’வயசானா நோய் வருமா செல்வி, வயசுக்கும் நோய்க்கும் சம்பந்தம் இருக்குதா..?’’

’’பின்னே… வயசானதும் நம்ம உடல்ல எல்லா உறுப்பும் கெட்டுப்போயிடும், இல்லைன்னா நல்லாயிருந்த என் புருஷன் எப்படி திடீர்னு சாவார்…?’’

’’வயசான மீன், கிழட்டுக் காக்கா, முதிய எலின்னு ஏதாச்சும் பார்த்திருக்கியா செல்வி..’’ – அமைதியாக கேட்டாள்.

’’நீ என்ன சொல்லவர்றே காமாட்சி… நான் சும்மா சொல்றேன்னு நினைக்கிறியா..?’’

’’அப்படியில்லே செல்வி. நம்ம மனசு ஒரு மந்திரக்கண்ணாடி போல. நீ வலிக்கும்னு நினைச்சா நிஜமாவே வலிக்கும், தாங்கக்கூடிய வலின்னு நினைச்சா,  உன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதிகம்னு நினைச்சா தாங்கவே முடியாது. வயசுக்கும் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை செல்வி. நீ உன்னை நோயாளியா நினைக்கிற… எல்லா நேரமும் உன் உடல் உறுப்புகளை மட்டும் கவனிக்கிற… சாவப் பயப்படுற. உன் பயத்தை உன் குடும்பம் மேலே திணிக்கிற… அவங்க ஆறுதலா பேசலைன்னா கோபப்படுறே…’’

’’என்ன… ராகவ் ஏதாச்சும் சொன்னானா?’’

’’ஆமா செல்வி. உன்னை சமாளிக்கத் தெரியாம தடுமாறுறான். நீ முதுமையை பார்த்து பயந்திருக்க. தினம் ஏதோ பிரச்னை இருக்கிறதா நினைக்கிற… அதைப் பார்த்து உன் மகனும் அவன் பிள்ளைகளும் பயப்படுறாங்க செல்வி….’’

‘’ஆனா, எனக்கு நிஜமாவே என்னென்னமோ செய்யுது…’’

‘’செய்யட்டும் செல்வி. உனக்கு மட்டும்தான் பிரச்னையா, உன் பையன்கிட்டே கேளு, அவன் உடம்புல பத்து பிரச்னை சொல்வான். உனக்கும் குடும்பத்துக்கும் சமைச்சுப்போட்டு, சம்பாதிச்சுட்டும் வர்றாளே உன் மருமக… அவகிட்டே கேளு, ஆயிரம் பிரச்னை சொல்லுவா. நான் முதுகுத்தண்டுல ஆபரேஷன் செஞ்சிட்டு வலியோடதான் வாழுறேன்.. எல்லோருக்கும் ஏதாச்சும் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதுக்காக நீ பிரச்னையை மட்டும் பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி.…”

அமைதியாக யோசித்தாள் செல்வி. காமாட்சி சொல்வது சரி என்றே தோன்றியது. தன்னை பிள்ளையும் மருமகளும் கவனிக்கவேண்டும் என்பதற்காக அதிகம் அலட்டுவதை உணர்ந்தாள். அதனால்தான் உயிருக்கு நிகரான மகனையும் அவன் குடும்பத்தையும் திட்ட முடிந்ததோ என்று வருந்தினாள்.

’’இனிமே நான் எல்லாத்தையும் தாங்கிக்கிடுறேன் காமாட்சி’’

’’வேண்டாம் செல்வி. நீ எதையும் தாங்கவேண்டாம். ஏதாவது பிரச்னை வந்தா டாக்டர்கிட்டே சொல்லு. அதுதான் நீ பேசவேண்டிய இடம். இதையெல்லாம் உன் பையன்கிட்டேயும், பேரன், பேத்திகிட்டேயும் சொல்லாதே……’’

’’ம்… என் வலியை நான்தான் அனுபவிக்கணும். ஆனா, எனக்கு ஒரு கேள்வி இருக்கு. இனிமே நான் எதுக்கு வாழணும்?’’

’’இந்த கேள்வி எல்லோர் மனசிலேயும் ஏதாவது ஒரு நேரம் வரும் செல்வி. ஆனா,  நாம வாழணும். இந்த உடம்பு கடவுள் நமக்குக் குடுத்திருக்கும் வரம். இந்த வரத்தை முழுசா அனுபவிக்கணும். நீ வாழப் பயந்து செத்துட்டா, நாளைக்கு உன் பையனும் அப்படித்தான் செய்வான்… நீ தன்னம்பிக்கை மனுஷியா இரு…. வயசானாலும் சந்தோஷமா இருக்கமுடியும்ப்பா…’’ என்றபடி கைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள். செல்வியின் முகத்தில் புதுத்தெம்பு வந்தது. முதுகில் ஏறியிருந்த முதுமை சுமை காணாமல் போனது..

மலர்ந்த முகத்துடன் வீடு திரும்பினாள் செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *