டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கியதும், ஹேண்ட் பேக் பத்திரமாக இருக்கிறதா என்று கோமதி அனிச்சையாக தொட்டுப் பார்த்துக்கொண்டாள். உள்ளே ஏழாயிரத்து சொச்சம் ரூபாய் சம்பளப் பணம் இருக்கிறது. இந்த மாதச் செலவுகளை முழுமையாக இதற்குள் சமாளிக்க வேண்டும் என்பதை நினைத்ததும் கோமதிக்கு நெஞ்சை அடைத்தது.
போன மாத பாக்கியும் சேர்த்து வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டை மாற்றவேண்டிய நிலை ஏற்படலாம். ரெண்டு மாத வாடகை, கரண்ட் பில், முறவாசலுக்கே ஐயாயிரம் ரூபாய் காலி. அம்மாவுக்கு மருந்து, தம்பி ஸ்கூல் செலவு, அண்ணாச்சி கடை பாக்கி, பால், பஸ் டிக்கெட், போன் ரீ சார்ஜ், புதுச்செருப்பு என்று வரிசை கட்டி நிற்கும் செலவுகள் மலைப்பைக் கொடுக்க, வீட்டுக்குச் செல்லும் வேகம் குறைந்தது.
சட்டென்று பஸ் அல்லது காரில் விழுந்து செத்துவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று தோன்றியது. அப்பா மீது திடீரென கோமதிக்கு கோபம் வந்தது.
அப்பாவை கோமதிக்கு ரொம்பவும் பிடிக்கும். கையைப் பிடித்தபடி பள்ளிக்கு கூட்டிப் போவார். அம்மாவுடன் சண்டை போடுவார் என்றாலும் ஒரு நாளும் கோமதியை அடித்ததில்லை. ஹோட்டலில் நெய் ரோஸ்ட் வாங்கிக் கொடுத்து தின்ன முடியாமல் திணறியதைப் பார்த்து சிரித்திருக்கிறார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஒரு மாலை நேரத்தில் குடும்பத்தின் தலையெழுத்து ஒட்டுமொத்தமாக மாறியிருந்தது. அப்போது கோமதி பத்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள்.
தனியார் நிறுவனத்தில் கேஷியர் வேலை செய்த அப்பா, கம்பெனி பணத்துடன், அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக தகவல் சொன்னார்கள். திருட்டு, பணம், போலீஸ், கேஸ் என்றதும் சொந்தபந்தங்கள் உஷாராக விலகிக்கொண்டன. அவமானப்பட்டு பள்ளிக்குப் போவதை கோமதி நிறுத்தினாள்.
அதுவரை வெளியுலகம் தெரியாத அம்மா, ஹோட்டல் வேலைக்குப் போனாள். பாத்திரம் கழுவ, காய் நறுக்கப் போனாலும் ஆண்களின் தொந்தரவு பிடிக்காமல், தெரு முனையில் இட்லி விற்பனை செய்தாள். வியாபாரம் கொஞ்சமாக சுதாரித்த நேரத்தில், பாத்ரூமில் வழுக்கிவிழுந்து முதுகை உடைத்துக்கொண்டாள். அதனால் வீட்டுப் பொறுப்பு கோமதிக்கு வந்துவிட்டது..
ஒரு தனியார் கிளினிக்கில் அட்டெண்டர் வேலை பார்க்கிறாள். ஆஸ்பத்திரியை திறந்து சுத்தப்படுத்துவது, டோக்கன் கொடுப்பது, மாத்திரை, மருந்து கொடுப்பது கோமதியின் பொறுப்பு. கிளினிக் பூட்டப்படும் மதியம் ரெண்டு மணி நேரம், அருகே உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்கிறாள். ஐந்நூறு ரூபாய் சம்பளம் என்றாலும் ஜாக்கெட் தைக்கப் பழகிவிட்டாள்.
கோமதி வேலைக்குப் போகத் தொடங்கிய ரெண்டு வருடங்களில் நிலைமை மேலும் மோசமானதே, தவிர, சீரடையவில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும் தம்பி தலையெடுத்துவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று அம்மாவும் கோமதியும் காத்திருக்கிறார்கள்.
ரோட்டு பிரியாணிக் கடை வாசனையில் தம்பி ஞாபகம் வந்தது. பிரியாணி கேட்டு அடம் பிடித்து அடி வாங்குகிறான். சட்டென்று அரை பிளேட் பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு, வேகமாக நடை போட்டாள்.
வீட்டு வாசலில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்த தம்பி, அக்கா கையில் பிரியாணி பொட்டலத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதித்தான். அந்த சந்தோஷத்தைப் பார்த்ததும் கோமதிக்கு ஏனோ அழுகை வந்தது. தம்பி கையில் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.. காலடி சத்தத்தில் கண் திறந்தாள் அம்மா.
‘’வந்துட்டியா தாயி… சம்பளம் கொடுத்துட்டாங்களா?’’ ஈனஸ்வரத்தில் அம்மா கேள்வி கேட்டாள். சம்பளப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதற்காக கட்டிலில் அமர்ந்தாள்.
‘’ம்… செலவை நினைச்சா பயமா இருக்கும்மா..’’ கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது. மகளின் நிலையைக் கண்டதும் அம்மா வாய்விட்டு அரற்றினாள்.
‘’நான் செத்துட்டாக்கூட நீங்க நல்லா இருக்கலாம், சுமையா படுத்துக்கிட்டு உன்னை துன்பப்படுத்துறேன்… காலேஜ் படிக்கவேண்டிய வயசுல என் பொண்ணுக்கு ஏன் இந்தத் தலையெழுத்து. கடவுளே… உனக்கு கண் இல்லையா…’’ என்று கதறிய அம்மாவின் வாயைப் பொத்தினாள் கோமதி.
‘’நீ செத்துட்டா எனக்கும் தம்பிக்கும் யாரும்மா ஆதரவு, இனிமே அப்படிப் பேசாத..’’ என்ற நேரம் வாசலில் நிழலாடியது. வீட்டுக்காரம்மா வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் கோமதியின் நெஞ்சில் பயம் அப்பிக்கொண்டது.
‘’ம்… சம்பளம் வாங்கிட்ட போல..’’ உரிமையுடன் உள்ளே நுழைந்தாள்.
‘’அது… உங்களுக்கு எப்படிக்கா தெரியும்?’’ தட்டுத்தடுமாறி கேட்டாள்.
‘’அதான் பிரியாணி வாசம் ஊரைத் தூக்குதே…. என்ன பேயறைஞ்ச மாதிரி இருக்கே. சம்பளம் வந்ததும் புடுங்க வந்துட்டேன்னு நினைக்கிற.. சரியா?’’ என்றபடி சிரித்தாள்.
‘’வாங்கம்மா.. உட்காருங்க’’ என்று அம்மா சொல்வதற்குள் உரிமையுடன் கட்டிலில் அமர்ந்தாள்.
‘’அப்படியில்லேக்கா…. உங்களுக்குக் குடுக்க வேண்டியதுதானே…’’ என்றபடி பைக்குள் கைவிட்டு துழாவ, சட்டென்று அந்தக் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
‘’இருக்கட்டும். காலையில குடு. ஆனா, நீ இப்படியே இருந்தா உங்க பிரச்னை சரியாயிடும்னு நினைக்கிறியா…?’’ திடீரென வீட்டுக்காரம்மா வார்த்தைகளில் அன்பு வடிந்தாலும், வீட்டை காலி செய்யவைக்கும் புதிய யுக்தியோ என்று யோசித்தாள்.
‘’இனிமே லேட் பண்ணாம வாடகை குடுத்துடுறேங்க்கா…’’ எட்டிப் பார்க்கும் நீர்த்துளியை அடக்கிக்கொண்டு கோமதி பதில் சொன்னாள். அம்மா எதையோ பேச முயற்சிக்க, அவளை அமைதிப்படுத்திவிட்டு வீட்டுக்காரம்மா பேசினாள்.
‘’அடியே அசடு. திருப்பித்திருப்பி வாடகையிலே நிற்கிற. எனக்கு நீயும் ஒரு பொண்ணு மாதிரிதான். உங்க கஷ்டத்தை நிரந்தரமா தீர்க்க என்ன முயற்சி எடுத்தேன்னு கேட்கிறேன்?’’
‘’அதான், என்னால முடிஞ்சவரைக்கும் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேனே….’’
‘’அதுதான் பத்த மாட்டேங்குதே. .சம்பளம் பத்தலைன்னு தெரிஞ்சபிறகும் அதே வேலைக்குப் போனா என்ன அர்த்தம்? வேற வழி தேடுனியா இல்லைன்னா கடவுள் குடுப்பாருன்னு காத்திருக்கியா?’’
‘’அன்னைக்குப் பிரச்னையே மூச்சு முட்டுதுக்கா. வேற வழி எப்படி தேடுறது, தேடுனாலும் கிடைச்சிடுமா?’’
‘’தேடுறவங்களுக்குத்தான் பாதை தென்படும்னு சொல்லுவாங்க, கேள்விப்பட்டிருக்கியா?’’
‘’என்ன சொல்றீங்கன்னு புரியலையேம்மா…’’ வேதனையை மீறி அம்மா கேட்டாள்.
‘’கஷ்டம், கஷ்டம்னு புலம்பிக்கிட்டே இருந்தா எதுவும் குறையாது. இனிமே சந்தோஷமா வாழ்வோம்னு நம்புனா வழி கிடைக்கும். எனக்கு நீ தைச்சுக் குடுத்த ஜாக்கெட் நல்லா இருக்கு, அதையே தொழிலா செய்யேன்…’’
‘’என்னக்கா கிண்டல் பண்றீங்க, மிஷின், செலவுன்னு எவ்வளவு ஆகும்?’’
‘’மிஷின் வாங்க காசு இல்லைன்னு புலம்பாதே, எல்லாம் இன்ஸ்டால்மென்ட்ல கிடைக்குது. கிழிஞ்ச துணி அடிச்சுக் குடுத்தாலே ஐம்பது ரூபா கிடைக்கும். அதோட ரெண்டு மூணு ஜாக்கெட் தைச்சா தினமும் 500 ரூபா சம்பாதிக்கலாம்… வீட்ல உட்கார்ந்து அம்மாவை பார்த்துக்கலாம், தம்பிக்கும் பாடம் சொல்லிக் குடுக்கலாம்…’’
மனதுக்குள் மாமழை பெய்வதை உணர்ந்தாள் கோமதி. நிஜமாகவே இப்படி ஒரு வழி இருப்பது உண்மைதான். தன் விடியலுக்கு புதி வழி தென்பட்டதை உணர்ந்தாள் கோமதி.
‘’தையல் மிஷின் வாங்கு, தெரு முழுசும் தைக்கிறேன்னு சொல்லி வை. நாலு மாசத்துல உங்க குடும்ப கஷ்டம் மொத்தமும் தீர்ந்துடும், அம்மா உடம்பும் சரியாயிடும்…’’ அருள் வாக்கு போன்று அழுத்தமாகச் சொன்னாள்.
‘’வீட்டுக்காரம்மாக்கு பால் சுடவைச்சுக் குடும்மா… உடம்பும் மனசும் நிறைஞ்சிடுச்சு…’’ அம்மா ஆனந்தமாக எழுந்து அமர்ந்தாள். சந்தோஷமாக துள்ளிக் குதித்து எழுந்த கோமதி, குட்டியூண்டு கிச்சனுக்குள் நுழைந்து அடுப்பை பற்ற வைத்தாள்.
‘’காபியா.. டீயா?’’ என்றபடி வெளியே வர, வீட்டுக்காரம்மாவைக் காணவில்லை.
‘’எங்கம்மா… போயிட்டாங்களா?’’
‘’சொல்லிக்காம வந்தாங்க, சொல்லாம போயிட்டாங்க. நமக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க. டீயை அவங்க வீட்ல போய் குடுத்துட்டு வந்துடும்மா… கடவுள் மாதிரி வழி காட்டியிருக்காங்க…’’ நிம்மதியுடன் உட்கார்ந்தபடி கடவுளைக் கும்பிட்ட அம்மாவைப் பார்த்த கோமதிக்கும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது.