மகேந்திரன் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பது அவருடைய உடல்மொழியிலே தெரிந்தது. தலை கலைந்திருந்தது, உடை அணிவதில் நேர்த்தியில்லை. ஏதோ ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதை உணர்ந்த ஞானகுரு தோளைத் தொட்டதும் மளமளவென ஒப்பித்தார்.

‘’சுவாமி, கடந்த மூன்று நாட்களாக எனக்குள் ஏதோ சரியில்லை. அதாவது சரியாக தூக்கம் வருவதில்லை. தூக்கம் வருவதற்காக, எனக்குத் தெரிந்த எத்தனையோ வழிகளை கடைப்பிடித்துப் பார்த்துவிட்டேன். படுக்கையில் படுத்தபடி கண்களை மூடி தியானம் செய்தேன், நம்பர்களை தலைகீழாக எண்ணிவிட்டேன், என் கடந்தகாலத்தை அசைபோட்டு பார்த்துவிட்டேன். ஆனால், தூக்கம் வரவேயில்லை. தூக்க மாத்திரை போடவும் பயமாக இருக்கிறது. அரைகுறையாக தூங்கி எழுந்ததில் இருந்து எந்த வேலையும் சரியாக ஓடவில்லை. எனக்கு என்னவாகிவிட்டது’’ என்று பயந்தார்.

‘’தூக்கம் இனிமையானது, புத்துணர்வு தரக்கூடியது. அதற்காக தூக்கத்துக்கு ஏங்குவது கொடுமையானது. உன் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை என்பது உன்னைவிட உன் உடம்புக்கு நன்றாகவே தெரியும். உணவு தேவை என்றால் பசிக்கும். தண்ணீர் தேவை என்றால் தவிக்கும். ஓய்வு தேவை என்றால் காய்ச்சல் வரும். அன்னியப் பொருள் உடலுக்குள் நுழைந்தால் அலர்ஜி வரும்.

அதனால், தூக்கம் தேவையில்லை என்றால் உன்னருகே அது வராது. தேவை என்றால், நீ தடுத்தாலும் வராமல் இருக்காது. நீ சீரியஸாக வேலை செய்துகொண்டு இருந்தாலும் சரி, பயணத்தில் இருந்தாலும் சரி ஓய்வு தேவை என்றால் தூக்கம் வந்துவிடும். தூங்காமல் இருப்பதற்காக வாயில் போதை பாக்கு அடக்கிக்கொண்டு லாரியை ஓட்டினாலும், அவர்களை அறியாமல் தூக்கத்தை தழுவிவிடுவார்கள். கடுமையான போக்குவரத்து சத்தம் கேட்கும்போதும் சிலர் தங்களை அறியாமல் தூங்குவதைப் பார்த்திருப்பீர்கள். எல்லாம், தூக்கம் செய்யும் மாயைதான்.  

அதனால், தூக்கத்தை நீ தேடவேண்டிய அவசியமே இல்லை. அது தேவை என்றால் உன்னைத் தேடி வந்துவிடும். மரணத்தின் மினியேச்சர் வடிவம்தான் தூக்கம். அதாவது, எப்போது வரும், எப்படி வரும், யாருக்கு வரும், எந்த நேரத்தில் போகும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்துவிடும். அதனால், தூக்கம் வரவில்லை என்றால் சந்தோஷப்படு. ஆம், உனக்கு வழக்கத்தைவிட கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொள். அந்த நேரத்தில் உனக்குப் பிடித்ததை செய். பிடித்த புத்தகத்தைப் படி, பாடல்களைக் கேள், திரைப்படம் பார். இதெல்லாம் சரிப்படாது என்றால், நாளை செய்யவேண்டிய வேலைகளை இன்றே நிதானமாக செய்.

சரியாகத் தூங்கவில்லை என்றால் ஒரு நாள் வீணாகிவிடுமே என்று கவலைப்படாதே. தூக்கம் வரவில்லை என்றால் அது நோயல்ல. அதனால் உடல் சோர்வடையாது. நீ எப்போதும்போல் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அந்த நாளைத் தொடங்கு. எல்லாம் நலமாகும்.

ஆனால் எந்த காரணம் கொண்டும் தூக்க மாத்திரைகளை நாடாதே. அது, வராத தூக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைக்கும். உன் உடல் கடிகாரத்தை எசகுபிசகாக ஓடவைத்துவிடும். அதன் பிறகு மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் மாத்திரையின் அளவைக் கூட்ட வேண்டும். அதன்பிறகு நீ மாத்திரைகளின் அடிமையாகிவிடுவாய்..

தூக்க மாத்திரை சாப்பிடுவதும் ஆபத்து இல்லாத வகையில் சிறிய அளவுக்கு விஷம் எடுத்துக்கொள்வதும் ஒன்றுதான். குண்டூசி நுனியளவு விஷம் எடுத்துக்கொண்டால் ஆபத்து இல்லைதான். ஆனால், தினம் தினம் அப்படி எடுத்துக்கொண்டால் என்னாகும் என்று யோசித்துப்பார். உன் உடலே விஷமாக மாறிவிடும். அதனால், தூக்கம் வரவில்லை என்றால் கொண்டாடு. மகிழ்வுடன் உனக்குக் கிடைத்திருக்கும் நேரத்தைப் பயன்படுத்து’’ என்று முடித்தார் ஞானகுரு.

மகேந்திரன் முகத்தில் இப்போது சிரிப்பும் சிலிர்ப்பும் வந்தது.

Leave a Reply

Your email address will not be published.