ஞானகுருவை தரிசிக்க வந்த கூட்டம் வெளியேறும் வரை அந்த இளம்பெண் காத்திருந்தாள். அருகில் யாரும் இல்லை என்பது உறுதியானதும் ஞானகுருவிடம் வந்து சேர்ந்தாள். எப்படி கேள்வியைத் தொடங்குவது என்று தடுமாறினாள்.

‘’நீ தவறு செய்ய ஆசைப்படுகிறாய். ஆனால், கொஞ்சம் அச்சப்படுகிறாய்… அப்படித்தானே?’’ ஞானகுரு கேட்டதும், ஒருநொடி தயங்கியவள் மளமளவென பேசத் தொடங்கினாள்.

‘’என் அலுவலகத்தில் என்னை ஒருவர் காதலிக்கிறார்கள். எனக்காக உயிரையே கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார். ஆனால், என் மனம் என்னவோ, என்னுடைய மேலாளர் மீதுதான் ஆர்வமாக இருக்கிறது. அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது, பிள்ளைகள் இருக்கிறார்கள், வயதும் அதிகம் என்று எல்லாமே எனக்குத் தெரிகிறது. எல்லாம் தெரிந்தும், எந்த நேரமும் நான் வரம்பு மீறிவிடுவோனோ என்பது போல் எனக்கு அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும், காட்டும் அக்கறையிலும் ஆர்வமும் காதலும் வருகிறது…’’ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள். அவளுடைய உச்சந்தலையில் கைவைத்து கீழே அமரவைத்தார் ஞானகுரு.

‘’பெண்ணே, நீ கணவனை தேடுவதற்குப் பதிலாக உன்னுடைய தந்தையை வேறு ஒருவரிடம் தேடிக்கொண்டிருக்கிறாய்…’’

‘’என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லையே…’’

‘’உன் தந்தை உன் மீது காட்டிய பாசம், உன் மீது வைத்திருக்கும் அக்கறை,  வயதுக்கான புத்திசாலித்தனம், பொறுமை, பணம் போன்ற எல்லாமே அவரிடம் இருக்கிறதா..?” ஒருகணம் யோசித்தவள் தலையை ஆமோதிப்பதாக ஆட்டினாள்.

’’காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இதனால்தான். உன் அப்பாவைப் போன்ற குணாதிசயங்களுடன் ஒருவரைக் கண்டதும், அவரை உன்னுடைய கணவனாக்க நினைக்கிறாய். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் பற்றியும், அவனுடைய குழந்தைகள் பற்றியும் உனக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவன், ‘என் மனைவிக்கும் எனக்கும் பொருத்தம் சரியில்லை என்று சொல்லியிருப்பான்’ அப்படித்தானே…”

‘’ஆம், பொருந்தா திருமணம் என்கிறார். இது எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ அவளுடைய உடல் பதறியது.

’’இந்த உலகில் திருமணம் முடித்த அத்தனை ஆண்களும் இளம் பெண்களை மயக்குவதற்கு இப்படித்தான் வேடம்தான் போடுவார்கள்.  யாரோ முகம் தெரியாத ஒருவனை நம்புவதைவிட, இவரைப் போன்ற ஒருவருடன் சில காலம் வாழ்ந்தாலும் போதும் எனும் அளவுக்கு சர்க்கரையாகப் பேசுவார்கள். ஒரு தேன் கூட்டை கலைத்து, அந்த தேனை ருசிக்க நினைக்காதே. அந்த தேனி மீண்டும் வேறு ஒரு இடத்துக்குப் போய்விடும்…’’

‘’ஆனால், என் மனம் தடுமாறுகிறதே..?”

‘’உன்னுடைய தாய்க்கு, இளம் பெண் ஒருத்தி இப்படியொரு துரோகம் செய்தால், அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள உன்னால் முடியுமா..? இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் உன்னைப் போன்ற இளம் பெண்ணுக்கு அந்த அதிகாரி வலை வீச மாட்டான் என்பதில் என்ன நிச்சயம்..? இதுபோன்ற அசுரர்களிடம் இருந்து விலகிச்செல். வேலையைவிட வாழ்க்கை முக்கியம். அதனால் சட்டென வேலையை விட்டுவிடு. அவன் முகத்தில் விழிக்காதே. கொஞ்ச நாள் துன்பமாகத் தெரிந்தாலும் பொறுத்துக்கொள். அவன் பேசினாலும் நீ பேசாதே. வேறு ஒரு குடும்பத்தை உடைத்து உனக்கு ஒரு வீடு கட்ட நினைக்காதே. நீ விழுந்திருப்பது காதலில் அல்ல. பாதுகாப்பு என்ற புதைகுழியில். வேறு ஒருவர் உனக்கு பாதுகாப்பு தருவார் என்று நினைக்காதே.. உனக்கு நீதான் பாதுகாப்பு’’ என்றார் ஞானகுரு.

சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தாள் இளம்பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *