நாற்பது வயதையொட்டிய தந்தையும், பத்து வயது மகனும் ஞானகுருவிடம் ஆசிர்வாதம் தேடி வந்தனர். ‘’பையன் எப்பவும் விளையாட்டுப் புத்தியாவே இருக்கான். சொன்னதை எதுவுமே கேட்பதில்லை. காலையில எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடின்னு சொன்னாலும் கேட்பதே இல்லை’’ என்று வரிசையாக குறைகளை அடுக்கினார்.
‘’தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதால்தான் நீ ஆரோக்கியமாக இருக்கிறாய் அப்படித்தானே, எவ்வளவு குடிக்கிறாய்..?’’
‘’டாக்டர் மூணு லிட்டர் குடிச்சா போதும்னு சொன்னார். ஆனா, நான் ஆறு லிட்டர் வரைக்கும் குடிச்சிடுறேன்’’
‘’சீக்கிரம் உன் சிறுநீரகம் செயலிழந்துபோகும் என்பது உனக்குத் தோன்றவில்லையா?
‘’அதெப்படி சாமி, தண்ணீர் சரியா குடிக்கலைன்னாதானே சிக்கல் வரும்…’’
’’ஒரு லாரியில் இரண்டு டன் பொருட்களை ஏற்ற முடியும் என்றால், அவ்வளவுதான் ஏற்றவேண்டும். அப்படித்தான் உன் சிறுநீரகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதை மட்டும் கொடு, போதும். உன் உடல் ஆரோக்கியம், வியர்வை, கிளைமேட், சூழ்நிலை போன்றவற்றை பொறுத்தும் நீரின் தேவை அமையும். .
ரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்கவே நீர் தேவைப்படுகின்றது. நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் தள்ளாடும். அதுவே அதிகமானால் இதயமும் சிறுநீரகமும் தடுமாறும்.
உனக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை உன் உடல் அறியும். வெயில் காலத்தில் தாகம் அதிகம் எடுக்கும்போது நிறைய நீர் அருந்து. விளையாடுவதால் அதிக வியர்வை வெளியேறினால் நீர் அருந்து. குளிர் காலத்தில் கொஞ்சமே போதுமானது. காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் நிறைய வீணாகும். இந்த நேரத்தில் பிடிக்கவில்லை என்றாலும் அதிகம் குடி.
நீ போதுமான அளவு நீர் குடிக்கிறாயா என்பதை உன் சிறுநீரே சொல்லிவிடும். ஆம், எந்த நிறமுமின்றி சிறுநீர் பிரிந்தால் நீ சரியான அளவுக்கு நீர் குடிக்கிறாய். அடர் மஞ்சளாக நீர் இருந்தால் குறைந்த அளவுக்குக் குடிக்கிறாய். வெள்ளை நிறத்தில் சிறுநீர் கழித்தால், அதிகம் நீர் குடிப்பதாக அர்த்தம்.
அதேபோல் உடல் எடை குறைவுக்கும், திடீர் மயக்கம், தலைவலிக்கும்,சிறுநீர் தொற்றுக்கும் தண்ணீர் குறைவாகக் குடிப்பது காரணமாக இருக்கலாம். இது தொடரும்போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிடும். அதனால், தாகம் எடுக்கும்போது சிறுநீரகத்தை காத்திருக்க வைக்காதே.
அதேநேரம் அதிகம் தண்ணீர் குடித்தால் உடலில் உப்பின் அளவு குறையும். கை, கால்கள் தடுமாறும். உதடு, உடல் வெளிறும். அதிக நீரால் இதயத்துக்கும் வேலைப்பளு கூடுவதால், பிரச்னைகள் உருவாகும். அதனால் தேவைக்கும் அதிகமாகக் குடிக்காதே.
நீர் குடிப்பதைவிட தர்பூசணி, வெள்ளரிக்காய், பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர் குடிப்பது எளிதில் தாகம் தீர்க்கும். உடலுக்கும் நலன் தரும்’’ என்று முடித்தார் ஞானகுரு.
மகனுக்கு ஆலோசனை கேட்க வந்த மனிதர், தனக்கு உபதேசம் கேட்டுத் திரும்பினார்.