நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி புத்தகங்களுடன் வந்துசேர்ந்தார் பக்தர் ஒருவர். ‘’குருவே… நிறைய சொத்து, சுகம் எல்லா இருக்குது. மாதத்தில் ஒரு வாரம் ஏதேனும் ஊருக்குப் போய், அங்கிருக்கும் கோயிலில் தஞ்சமடைந்துவிடுகிறேன். இதுவரை எத்தனையோ கோயிலுக்குப் போய்விட்டேன். ஆனால், எங்கேயும் என்னால் கடவுளை கண்டுபிடிக்கவே முடியவில்லை’’ வருத்தமான குரலில் கேட்டார்.
‘’கடவுளை நீ எங்கே தொலைத்தாயோ… அங்கே போய் தேடு’’ என்றார் ஞானகுரு.
‘’என்ன சொல்கிறீர்கள் குருவே… நான் எங்கே கடவுளை தொலைத்தேன்..’’
‘’தொலைந்த ஒரு பொருளைத்தான் தேட முடியும். நீ தொலைக்காத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பாய்..? கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என்ன உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டு தேடுகிறாய்? இப்படித்தான் இருக்கவேண்டும் என்றௌன் கற்பனையால்தான், நீ எதிர்பார்க்கும் கடவுளை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, இனியும் கண்டுபிடிக்க முடியாது’’
‘’அப்படியென்றால் கடவுளை எப்படி அறிவது..?’’
‘’நீ எதற்காக கடவுளை தேடுகிறாய்..? அவர் ஏன் உனக்கு காட்சி தர வேண்டும்..? உனக்கு கடவுளிடம் என்ன வேண்டும்..? நீ கடவுளை பார்த்தவுடன் என்ன கேட்கப் போகிறாய்? நீ கேட்பதை அவர் எதற்கு உனக்குத் தரவேண்டும்..? என்றெல்லாம் யோசித்துப் பார்த்திருக்கிறாயா..?
நீ வீட்டில் ஒரு கோழி வளர்க்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அது, தினமும் உன்னை கடவுளாக நினைத்து மனதுக்குள் பூஜை செய்கிறது என்றும் நினைத்துக்கொள். அந்த கோழிக்கு உன்னால் என்ன செய்துவிட முடியும்? அதிகபட்சம் அதனை நீ கொல்லாமல் இருக்கமுடியும். ஆனால், அதனை மரணத்தில் இருந்து தப்புவிக்க முடியுமா? கோழியின் மன உணர்வுகளை உன்னால் என்றைக்கும் புரிந்துகொள்ளவெ முடியாது என்பது போலத்தான், மனிதனின் உணர்வுகளை கடவுளால் எப்போதும் புரிந்துகொள்ளவே முடியாது.
இதுவரை மனித இனம் உருவாக்கியிருக்கும் கடவுளைத்தான் உன்னால் தேட முடியும். அது ஒரு கற்பனை. அதனால்தான் இதுவரை யாரும் கடவுளை கண்டதில்லை.
அதனால், இந்த வாழ்க்கையில் உன்னால் ஒருபோதும் கடவுளை அறிய முடியாது. அது தேவையும் இல்லை. ஏனென்றால், நீ தேடும் கடவுளால் உன் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவது இல்லை.
அதனால் உன் மனம் எதில் ஆனந்தம் கொள்கிறது, எது உனக்கு பாதுகாப்பு எண்ணம் கொடுக்கிறது என்று தேடிப் பார். அதனை மட்டும் தேடு. கடவுளை விட்டுத்தள்ளு, அவர் எப்படியாவது பிழைத்துப்போகட்டும்’’ என்றார் ஞானகுரு
‘’கடவுளை கண்டுப்பிடிக்கவோ, அறியவோ முடியாது எனும்போது எதற்காக இத்தனை கோயில்கள், உங்களைப் போன்ற வழிகாட்டிகள்’’ கேள்வியில் பெரும் ஏமாற்றமும் கோபமும் இருந்தது.
‘’கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. இன்னமும் முடிவு கிடைக்கவில்லை’’ என்று சிரித்தார் ஞானகுரு..