ஒரு குடும்பமே ஞானகுரு வருகைக்காக காத்திருந்தது. அனைவரும் ஆசி வாங்கியதும், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அவர்களது மகனை என் முன்னே நிறுத்தினார்கள். ‘’கல்யாணமே வேண்டாம்னு சொல்றான் சாமி. எனக்கு யாருடைய துணையும் வேண்டாம்னு சொல்றான். இவனுக்கு எப்படி புத்தி சொல்றதுன்னு தெரியலை’’ என்று அம்மா வருத்தத்துடன் பேசினார்.
’’திருமணம் என்பது ஒரு குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு. பெண்ணையும், குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பை சுமப்பதற்குப் பயந்துதான் திருமணத்தை மறுக்கிறாயா..?’’
‘’அப்படியெல்லாம் இல்லை. தனிமை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. ஒரு பெண்ணும் குழந்தைகளும் என் தனிமைக்குள் புகுந்துவிட்டால் நிம்மதி போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது’’
‘’மிகவும் சரியான பதில் வைத்திருக்கிறாய். ஆனால், இன்று உனக்கு இன்பம் தரக்கூடிய தனிமை, நாளையே வெறுமையாக மாறிவிடும். தனிமை எனும் கிணற்றுக்குள் உன்னால் எத்தனை நாள் தவித்திருக்க முடியும். அதுசரி, என்னைப் போல நீயும் சாதுவாக மாறிவிடுகிறாயா..?’’
‘’வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கும் ஆசை இருக்கிறது. நிறைய பணம் சம்பாதிக்கும் விருப்பம் இருக்கிறது. என்னுடைய பணியில் வெற்றி தொடும் விருப்பம் இருக்கிறது. அதற்கு திருமணம் தடையாக இருக்கும். மேலும், தனியாக வந்தது போன்று, தனியாகத்தானே போகப்போகிறோம். இடையில் மட்டும் எதற்காக இந்த பந்தம்..’’
‘’மனித வாழ்க்கை என்பதே கூட்டு வாழ்க்கைதான். நீ உண்பதற்கும் உடுப்பதற்கும் படுப்பதற்கும் பல நபர்களின் உழைப்பு தேவையாக இருக்கிறது. அத்தனை பேரின் உழைப்பையும் அனுபவித்துவிட்டு, தனிமையை ரசிக்கப் போகிறேன் என்கிறாய். இப்போது உனக்கு திருமணம் தேவையில்லாமல் போகலாம். ஆனால், ஒரு கட்டத்தில் உன் உடலுக்கும் உள்ளத்திற்கும் திருமண பந்தம் தேவைப்படும். அப்போது, உன் கைக்கு அகப்படாத பறவையாக திருமணம் பறந்து போகும்.
தனிமையில் வாழ்ந்துவரும் மூத்த பிரம்மச்சாரிகளை கேட்டுப்பார். தனிமையும், வெறுமையும் எத்தனை தூரம் கொடுமையானது என்பது புரியவரும். உலகில் எல்லோரும் உன்னை கைவிட்டதுபோன்ற உணர்வை தனிமை கொடுத்துவிடும். எல்லா மனிதர்களிடமும் பொறாமையும் கோபமும் வரும்.
திருமணம் என்ற பந்தத்தில் கொஞ்சம் சிக்கல்கள், முரண்கள் எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதுதான் இப்போது மனிதர்களை நாகரிகமாக மாற்றியிருக்கிறது. எல்லா நாகரிகமும் நன்மை செய்யும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், திருமண வாழ்வு வலியவனிடம் இருந்து எளியவனைக் காப்பாற்றுகிறது.
குழந்தை பெற்றுக்கொடுத்து உயிர்ச் சங்கிலியை நீட்டுவிப்பதற்கு மட்டுமல்ல, உன் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவும், ஆறுதல் சொல்வதற்கும், இன்பம் கொடுப்பதற்கும் ஓர் உறவு நிச்சயம் தேவை. உன் தாயோ, தந்தையோ இப்படி நினைத்திருந்தால் இங்கு நீ வந்திருக்க மாட்டாய்.
உண்மையில் திருமணம் என்பது ஆணைவிட பெண்ணுக்குத்தான் மிகப்பெரிய சிறை, தூக்கமுடியாத சிலுவை. ஆனால், பெண் அதனை தைரியமாக சமாளிக்கிறாள். நீ பயந்து நடுங்குகிறாய். உன் தாயும், தந்தையும், சகோதரர்களும் உன்னை விட்டு விலகிய பிறகு, இளமையும் உதிர்ந்தபிறகு உன்னிடம் வந்து பேசுவதற்கும், ஆறுதல் சொல்வதற்கும், உன் அனுபவங்களைக் கேட்பதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போதுதான் தான் உண்மையான தனிமை.
உன் சுதந்திரத்தை சிறையாக மாற்றாத ஒரு பெண்ணை கண்டுபிடி. திருமணத்துக்குள் நுழைந்துவிடு, இல்லையென்றால் என்னைப் போல் குடும்பத்தை துறந்துவிடு’’ சொல்லிமுடித்தார் ஞானகுரு.
அவன் சிந்திக்கத் தொடங்கினான்.