சந்தன நிறம், அலைபாயும் கூந்தல், காந்தக் கண்கள், கன்னக்குழி போன்ற பல அழகம்சம் கொண்ட இளமதிக்கு தீராத கவலை ஒன்று உண்டு. அது, வலது கையில் முளைத்துள்ள ஆறாவது சுண்டு விரல்.
வலது கை சுண்டுவிரலுக்கு இலவச இணைப்பு போன்று குட்டி விரல் ஒன்று துருத்திக்கொண்டு நிற்கிறது. வலி, வேதனை போன்ற எந்தத் தொந்தரவும் கொடுக்காத சமர்த்துப் பிள்ளையாக ஒட்டிக்கொண்டு இருந்தாலும், இளமதிக்கு அந்த விரலை சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.
தன் அழகுக்கு இடைஞ்சலாக அந்த விரலை நினைத்தாள். தெருவில் கடந்துசெல்லும் அத்தனை பேரும் தன் கைவிரலைப் பார்த்து கிண்டல் செய்து சிரிப்பதாகவே இளமதிக்குத் தோன்றும். அது பிரமை என்று யார் சொன்னாலும் இளமதி ஏற்றுக்கொள்வதில்லை. நாலைந்து மருத்துவர்களைப் பார்த்து, அந்த விரலை அகற்றுவது குறித்து விசாரித்துவிட்டாள். நரம்புகளில் சிக்கல் ஏற்பட்டு நிஜ சுண்டுவிரல் பாதிப்படையலாம் என்று தட்டிக் கழித்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் எல்லா மருத்துவர்களும் தனக்கு எதிராக கூட்டு சதி செய்வதாகவே இளமதி நினைத்தாள்.
இதுவரை யாருக்கும் இளமதி கை கொடுத்தது இல்லை. நாசூக்காக கையை மறைத்தபடியே பேசுவாள். கோயிலுக்குப் போனாலும் கடவுளை மனதுக்குள் வேண்டுவாளே தவிர, கையெடுத்து கும்பிட்டது இல்லை.. நெருங்கிய தோழி சுமித்ராகூட, இவளது சுண்டுவிரல் விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது இளமதியின் பெருங்கவலை. அதனால் யாரிடமும் விரல் வருத்தத்தை பகிர்ந்துகொண்டதில்லை என்றாலும் தினம் ஒரு முறையாவது அந்த விரலைப் பார்த்து வருந்தியிருக்கிறாள்.
இன்றும் இளமதி தனிமையில் அழுகிறாள். அடுத்த வாரம் பெண் பார்க்க ஒருவன் வருகிறான், என்பதுதான் அழுகைக்குக் காரணம்.. விரல் விஷயம் தெரியும் என்று அப்பா சொன்னபிறகும் அவள் கவலை தீரவில்லை. பெண் பார்க்க வரும் ஒவ்வொரு நபரும் தன் விரலை வேடிக்கை பார்ப்பதாக நினைத்து நினைத்து அழுதாள் இளமதி. தன் வருத்தத்தை கொட்டித் தீர்ப்பதற்கு இருட்டுக் கோயிலுக்குப் போனாள். அங்கு தெப்பக்குளத்திடம் தன் வருத்தத்தைச் சொல்லி அழுதபோது, பின்னே ஒருவர் நிற்பது தெரிந்து திரும்பினாள்.
எழுபது வயதைத் தாண்டிய ஒரு கிழம் கம்பீரமாக நின்றது. வேட்டி, சட்டை, தாடி, மீசை எல்லாமே வெள்ளை. சட்டென்று அவள் அருகே அமர்ந்தார்.
‘’குழந்தை… உன்னுடைய குட்டி சுண்டுவிரலை எனக்குக் கொடுத்துவிடுகிறாயா?’’ கிழம் கேள்வியில் அதிர்ந்தாள். தெப்பக்குளத்திடம் பேசியதை ஒட்டுக் கேட்டிருக்கிறார் என்றதும் கோபத்துடன் குரல் எழுப்ப முற்பட்டவளை தடுத்து நிறுத்திப் பேசினார்.
‘’நீ பேசியதை தெப்பக்குளம் கேட்கலாம், நான் கேட்கக்கூடாதா? ஒட்டுக்கேட்ட விவகாரத்தை மறந்துவிடு. உன் குட்டி சுண்டுவிரலை எனக்குக் கொடுத்துவிடுகிறாயா?’’ மீண்டும் அழுத்தமாக கேள்வி கேட்டார்.
‘’எனக்கு இந்த விரல் வேண்டாம். ஆனால் எப்படி கொடுக்க முடியும்? வெட்டினால் நிஜ சுண்டுவிரலுக்கு பிரச்னை வரும்…’’
‘’உன் சுண்டுவிரலை நான் மறைய வைக்கிறேன், கவலைப்படாதே’’ என்று சொன்ன கிழத்தை உற்றுப் பார்த்தாள்.
‘’நீங்க யாரு… நான் இங்கே உங்களை பார்த்ததே இல்லை…’’
‘’இப்போதைக்கு கடவுள்ன்னு வைச்சுக்கோ…’’ என்று கிழம் சிரித்ததும் நெஞ்சுக்குள் கத்தி இறங்கியதைப் போன்று அதிர்ந்தாள் இளமதி.
‘’நிஜமாவா…?’’ விருட்டென எழப்போனவள் தோளைப் பிடித்து அமரவைத்தவர், ‘’என்னைப் பற்றிய ஆராய்ச்சி எதற்கு? உன் பிரச்னையை பேசித் தீர்க்கலாம். உன் எக்ஸ்ட்ரா சுண்டுவிரலை மறைய வைத்தால் எனக்கு என்ன தருவாய்?’’
‘’என்ன வேண்டும்?’’
‘’உன் உடலில் தேவையில்லாத ஏதேனும் ஓர் உறுப்பைக் கொடு. இந்த அலைபாயும் கூந்தலாக இருந்தாலும் பரவாயில்லை…’’ வில்லங்கமாக தெரிந்தது பெரியவர் பேச்சு.
‘’அதெப்படி… எனக்கு அழகே தலைமுடிதான், அதை எப்படி தரமுடியும்?’’
‘’சரி, யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கும் உன் கடைவாய்ப் பல் ஒன்றைக் கொடுத்துவிடு, நான் உன் விரலை மறைய வைக்கிறேன்…’’
‘’கடைவாய்ப் பல்லா… அது இல்லாம எப்படி நான் சாப்பிடுறது?’’
‘’கண் தெரியாதவர், காது கேளாதவர், கை, கால் இல்லாதவர், எத்தனை பேர் இருக்கிறார்கள். உன்னால் ஒரே ஒரு பல் இல்லாமல் வாழ முடியாதா? சரி, உனக்குத் தேவையில்லாத ஏதேனும் அவயம் இருக்கிறதா என்று தேடிப் பார்…’’
கால் விரல் தொடங்கி ஒவ்வொரு உறுப்பாக பார்வையை செலுத்தினாள் இளமதி. ஒவ்வோர் உறுப்பும் எத்தனை உபயோகமாக இருக்கிறது, எத்தனை அம்சமாக அமைந்திருக்கிறது என்று ஆசையாகப் பார்த்தாள். இத்தனை நாட்களும் சுண்டு விரலை மட்டுமே பார்த்து எரிச்சல்பட்டதால் எந்த அவயத்தையும் உருப்படியாக பார்த்ததே இல்லை என்பது புரிந்தது. ஏதோவொன்று இளமதியின் உள்ளத்தில் உடைந்து உடலெல்லாம் ஓடியது. கிழத்தைப் பார்த்தாள்.
‘’உனக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷத்தை ரசிக்கக் கற்றுக்கொள் மகளே. எது கிடைத்தாலும் அது அற்புதமே. யாருக்குமே கிடைக்காத ஆறாம் விரல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்று பெருமை கொள். ஒவ்வொரு நபரும் முதலில் அவர் உடம்பை நேசிக்க வேண்டும். அதுதான் ஆனந்தத்தின் ஆரம்பம். நீ தினமும் உன் உடல் உறுப்புகளுக்கு நான் சொல்லும்படி வந்தனம் செய். கொக்கு, பூனை, யானை என்று ஒவ்வொரு உயிரினமும் அதன் உடம்பை எப்படி கவனிக்கிறது என்று உற்றுக் கவனி. நீயும் உன் உறுப்புகளை நேசி… உறுப்புகளுடன் பேசு’’
‘’எப்படி பேச வேண்டும்..?’’
‘’என் அழகான கண்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சகல ஒலிகளையும் கேட்கும் என் காதுகளைக் காதலிக்கிறேன். மணம் பிரித்தறியும் என் மூக்கை விரும்புகிறேன். உணவுகளை ரசிக்கவும், ருசிக்கவும், செமிக்கவும் உதவி செய்யும் பல், நாக்கு, உதடு மற்றும் ஜீரண உறுப்புகளை ரசிக்கிறேன். என் உடலுக்கு உறுதி கொடுக்கும் எலும்புகளையும் மினுமினுக்கும் தோலையும் விரும்புகிறேன். ரத்தம், காற்று சுத்திகரிக்கும் இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளையும் காதலிக்கிறேன். கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளையும், இனப்பெருக்க உறுப்புகளையும் காதலிக்கிறேன். என் தலைமுடி, நகம், சிரிப்பு, எண்ணம் என எல்லாமே எனக்குப் பிடிக்கும். மொத்தத்தில் என்னை நான் காதலிக்கிறேன் என்று காலை எழுந்ததும் சொல். இரவு படுக்கும்போதும் சொல்.
நீ உன் உடலைக் காதலித்தால் உடலும் உன்னை காதலிக்கும். ஆரோக்கியமான உடல் கிடைக்கும். அதுதான் ஆனந்தத்தின் ஆரம்பம்…’’ தன் மனதில் இருந்த அத்தனை தடைகளும் உடைந்து புதிதாய் பிறந்ததாக உணர்ந்தாள். நன்றி சொல்ல வாய் திறக்கும் முன் மீண்டும் அவரே பேசினார்.
‘’இது நல்ல நேரம் இளமதி. இன்றே உன் உடலுக்கு உன் காதலைச் சொல்லிவிடு. அத்தனை அவயங்களுக்கும் உன் காதலை மனப்பூர்வமாக சொல்…’’ என்று உத்தரவிட்டதும் கண் மூடினாள். ஒவ்வொரு அவயத்தையும் மனக்கண் முன் கொண்டுவந்து தன்னுடைய காதலை மனப்பூர்வமாகத் தெரிவித்தாள். கூடுதலாக இருந்த சுண்டு விரலுக்கு முத்தம் கொடுத்தாள். இந்த உலகில் வெறுப்பதற்கு எதுவுமே இல்லை என்று இளமதிக்குத் தோன்றியது. ஆனந்தமாக கண் திறந்தாள்.
எதிரே கிழம் இல்லை. அவள் எதிர்பார்த்ததுதாம். முதன்முறையாக கோபுரத்தை நோக்கி கை குவித்துக் கும்பிட்டாள். ஆறாவது விரல் இளமதியின் மனதில் இருந்து மறைந்தேபோனது.