வயதான ஒரு தம்பதியர் கவலை தோய்ந்த முகத்துடன் ஞானகுருவை சந்திக்க வந்தனர். ஞானகுருவுக்கு தட்சணையாக பழங்களும் புஷ்பங்களும் கொடுக்க, ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். ‘’நான் பூக்கள் பறிக்கப்படுவதை விரும்புவதில்லை. கைகளில் இருப்பதைவிட செடியில் மரணிப்பதே அதற்கு அழகு. பழங்கள் மரத்தில் பழுத்து வீணாகக் கூடாது. சரி, உங்களிடம் எல்லாம் இருந்தும்… எதுவும் இல்லாததுபோல் உணர்வது போல் இருக்கிறதே?’’ என்று கேள்வியை வீசினார்.
’’மிகச்சரியாகச் சொன்னீர்கள். எங்களிடம் எல்லாமே இருக்கிறது. எங்கள் குழந்தைகள் வளர்ந்து அவரவர் வாழ்க்கையை நோக்கிப் போய்விட்டனர். இனிமேல், எங்கள் வாழ்க்கையில் என்ன இருக்கிறது, வெறுமையும் இருளும் எங்களை விரட்டுகிறது’’ என்றனர்.
அவர்கள் இருவரையும் ஆழமாகப் பார்த்தபடி பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’என்னிடம் எல்லாம் இருக்கிறது என்ற வார்த்தையைக் கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. இதுதான் முழுமை. எல்லோருக்கும் எல்லாமும் இருக்கிறது என்பதே உண்மை. ஆனால், அதனை நாம் உணர்வதில்லை. வீடு, கார், புகழ், படிப்பு, நட்பு போன்ற எல்லாமே இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இரண்டையும் ஆனந்தமாக எடுத்துக்கொள்ள முடியும்.
எவரெஸ்ட் மலையை ஏறிய பிறகு, அந்த மலையேறிக்கு வேறு என்ன சாதனை குறிக்கோளாக இருக்க முடியும்? உலகத்திலே மிகப்பெரிய சிகரத்தை தொட்டபிறகு வெறுமைதான் கண்ணுக்குத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. வாழும் வரை வாழ்க்கை இருக்கிறது. அதனால், நம்பிக்கையும் ஆர்வமும் கலந்த எதிர்கால பார்வைதான் இனி தேவை.
எதிர்காலம் குறித்து குழந்தையும், சிறுவயதினரும் ஏன் பலத்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் தெரியுமா? தங்களால் எதிர்காலத்தில் நிறைய சாதிக்க முடியும், நிறைய இன்பங்கள் அனுபவிக்க முடியும், தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள்.
அதேநேரம், முதுமையைத் தொட்டவர்கள் எதிர்காலத்தைப் பார்ப்பதில்லை. தங்களுடைய இறந்த காலத்தை எண்ணி மகிழ்கிறார்கள். எப்படியெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்தோம், மீண்டும் அப்படியொரு வாழ்க்கை கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். கடந்த காலம் திரும்பக்கிடைக்காது என்று தெரிந்தாலும் தேடுகிறார்கள். அங்குதான் தவறு செய்கிறார்கள் ஆம், கிடைக்கவே கிடைக்காத கடந்த காலத்துக்கு ஆசைப்பட்டு நிகழ்காலத்தை சுமையாக நினைக்கிறார்கள். அதனால்தான், எதிர்காலமும் இருட்டாகத் தெரிகிறது.
நீ எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஆசைப்படுகிறோயோ, அப்படித்தான் இருக்கும். அதனால், நிறையவே ஆச்சர்யங்களையும், ஆனந்தத்தையும் எதிர்காலம் தரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் ஆர்வத்துடன் காத்திரு. இந்த எதிர்பார்ப்புதான் உயிர்ப்புக்குக் கொண்டுவரும்.
முதுமை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே ஒரு வட்டத்தை வரைந்துகொள்ள வேண்டாம். இளையவர்களாக இருக்கும்போது, உங்களுக்குப் பெற்றோர் போட்ட கோட்டுகளைத் தாண்டுவதில் எத்தனை ஆர்வம் காட்டினீர்களோ, எத்தனை பிடிவாதம் காட்டினீர்களோ, அப்படியே இப்படியும் செயலாற்றுங்கள்.
எதிர்காலம் பற்றி கனவு காண்பவர்களுக்கு முதுமை ஒருபோதும் எட்டிப்பார்க்காது. உடலுக்குத்தான் முதுமை வருமே தவிர, மனதுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் அல்ல. கடந்த காலத்தைவிட எதிர் காலமே இனிமையானது என்று நம்புங்கள்’’ என்று முடித்தார் ஞானகுரு.
தம்பதியர் முகத்தில் புன்னகை வந்தது.