பணத்துக்காகத்தானே சாமியார்கள் ஆசிரமம் அமைக்கிறார்கள் என்ற ரீதியில் நான் கேட்டது, அந்த சாமியாரின் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்திருக்க வேண்டும்.
‘’நான் பணத்தைத் தேடவில்லை… அது தானாகவே என்னை வந்து சேர்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்துகிறேன். நான் செல்லும் வழியில் தெளிவாகவே இருக்கிறேன், என் வழியில் சீடர்களும் சந்தோஷமாக வருகிறார்கள். அதனால் அதைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். உங்களைப் போன்று வேதாந்தம் மட்டும் பேசிக் கொண்டு, யாருக்கும் வழி காட்டாமல் திரிவதைவிட, எங்கள் இயக்கம் எத்தனையோ நபர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது, மரம் நட்டு சுற்றுச்சூழல் காத்திருக்கிறது…’’ என்ற குருஜியின் பேச்சில் கொஞ்சம் உஷ்ணம்.
அவரது கோபம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. நான் எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிடுவேனோ என்று பயந்ததுபோல், அவரே பேச்சைத் தொடர்ந்தார்.
’’மனம், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், தயவு செய்து இதைப் பற்றி மட்டும் பேசுங்கள்…’’ என்றார்.
’’பூமிக்குக் கீழே இருக்கும் ஏழு உலகங்களான அதலம், விதாலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் பற்றி எதுவும் தெரிய வேண்டாமா?’’ என்று கேட்டதும், கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தார்.
’’அப்படியெல்லாம் உலகங்கள் உண்மையில் இருக்கிறதா என்ன.. அப்படியே இருந்தாலும் மக்களுக்கு இவை தேவையில்லைதானே?’’ என்றார்.
’’ஆஹா… அற்புதமாகச் சொன்னீர்கள்… மக்களுக்கு அது போலவே மனம், ஆத்மா, சொர்க்கம், நரகம் என்பவை பற்றிய கவலைகளும் தேவையில்லை…’’ என்றபடி எழ முயற்சித்தேன். உடனே அவர் எழுந்து வந்து சமாதானப்படுத்தும் வகையில் என் தோளில் கைவைத்து அமரவைத்தார்.
’’அதெப்படி?’’
’’மனம் என்ற ஒன்றே இல்லை எனும்போது, அதைப் பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது?’’
’’தெரிந்தேதான் இப்படிப் பேசுகிறீர்களா? இந்த உடல் என்பது கண்ணுக்குத் தெரியும் பொருள், கண்ணுக்குத் தெரியாத உடல்தான் மனம். நாம் சாப்பிடும் உணவு மூன்று விதமாக ஜீரணமாவதாக உபநிடதங்கள் கூறுகின்றது. மிகவும் கனமான பகுதி மலமாக மாறி வெளியேறி விடுகிறது. நடுப்பகுதி உடலைச் சேர்ந்து மாமிசமாகிறது. மிகவும் சூட்சுமமான பகுதி மனமாக உருமாறுகிறது. அதைப் போய் இல்லை என்கிறீர்களே…?’’ என்று குருஜி கேள்வி எழுப்பினார்.
புன்னகையுடனே தொடர்ந்தேன். ‘‘ஒருவரது அனுபவங்கள், எண்ணங்கள், சிந்தனைகள், ஞாபகங்கள், உணர்வுகள் போன்றவற்றின் தொகுப்பால் கிடைக்கும் அறிவையே நீங்கள் மனம் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். மனம் என்பது ஒரு மாயத் தோற்றம். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு கனவு, ஒரு பிம்பம் அவ்வளவுதான். அதனால்தான் யாராவது அமைதியான மனம் வேண்டும் என்று கேட்டாலே சிரிப்புத்தான் எனக்கு வரும். மனம் என்பது நிஜமல்ல என்பதால், அமைதியான மனம் என்பது சாத்தியமல்ல. மனம் என்பதும் நீங்கள் அல்ல. இன்னும் ஆழமாகச் சொல்லப் போனால் உண்மை என்ற ஒன்றேயில்லை…’’ என்றேன்.
பதில் கூறமுடியாமல் அமைதியாக இருந்தவரைப் பார்த்து, ‘‘உங்கள் ஆசிரமத்தில் ஆத்மாவைப் பற்றி என்ன போதிக்கிறீர்கள்?’’ எனக் கேட்டேன்.
’’பஞ்சபூதங்களின் கூட்டணியால் உருவான மனித உடலையும், மனதையும் இயக்குவதுதான் ஆத்மா. ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இல்லாமல் இருந்து உண்டாவதில்லை, உண்டாகிப் பின்பு இல்லாமல் போவதில்லை. மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர ஆத்மாவுக்கு அல்ல…’’ என்றார்.
’’அப்படியானால் இறைவன்..?’’
’’உடலை இயக்குவது ஆத்மா என்பது போலத்தான், இந்த உலகை இயக்குவது பரமாத்மா. நெருப்புக்கு சுடும் இயல்பு, நீருக்கு குளிரும் இயல்பு, செடிகளுக்கு பூக்கும் இயல்பு இன்னும் சொல்லப் போனால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சக்தியைத்தான் பரமாத்மா என்கிறோம்… இறைவன் என்கிறோம்.’’ என்றார்.
’’ஆத்மா, பரமாத்மா போன்ற கண்ணுக்குத் தெரியாத சங்கதிகளும், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளும் இன்றைய மனிதர்களுக்குத் தேவையில்லாதவை. அதுபோன்றே உடலைத் தொந்தரவு செய்யும் யோகா, தியானம் போன்றவைகளையும் விட்டு ஒழியுங்கள்…’’ என்றபடி எழுந்தேன்.
’’அப்படியானால் கடவுள்…’’
’’கடவுள் பற்றிய கவலை மனிதர்களுக்கு வேண்டாம். மனிதனைப் பற்றிய கவலை மட்டுமே அவனுக்குப் போதும்’’.
’’நாங்கள் மனிதர்களுக்கு உதவுவதையே முக்கிய கடமையாகச் செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்…’’ என்று அவரும் வழியனுப்பத் தயாரானார்.
’’இந்த உலகத்தில் விளையும் பொருட்களை சரியாகப் பங்கீடு செய்தால், உலக மக்கள் அனைவருமே பசி, பட்டினி, ஏழ்மை என்பதை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஏழ்மையும், மிதமிஞ்சிய பணமும் பிரிந்து கிடப்பதற்கு காரணமே அரசுகள்தான். ஏழைகளுக்கு உதவிகள் செய்வதாகச் சொல்லி அரசுகள் செய்யும் தவறையே நீங்களும் செய்கிறீர்கள்…’’ என்றேன்.
’’அப்படின்னா… ஜனநாயகம் சரியில்லைன்னு சொல்றீங்களா?’’
’’ஜனநாயகம் மட்டுமில்ல, மன்னராட்சி, கம்யூனிஷம், முதலாளித்துவம் என்று இதுவரை உண்டான அத்தனை புரட்சிகளும் மாற்றங்களும் வலிமை குறைந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை, செய்யாது. மேலும் இன்றைய உலகம் முழுமையான முதலாளித்துவத்தை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது… அதனால் இன்னும் அதிகமான ஏழைகள் உண்டாவார்கள். நீங்களும் அதிக அளவில் சேவை செய்யலாம்…’’ என்றபடி நடக்கத்தொடங்கினேன்.