செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் இளைப்பாற அமர்ந்தேன். குரங்குகளின் பசி தீர உணவு வாங்கிவர சங்கரன் போயிருந்த நேரத்தில், அடிவாரத்தில் இருந்து இளைஞன் ஒருவன் அவசர அவசரமாக மலையேறி வந்தான். வழக்கமாக குளிக்கப் போகிறவர்களைப் போன்ற உடையும் இல்லை, சந்தோஷ நடையும் இல்லை. குரங்குகள் படைசூழ இருந்த என்னைப் பார்த்ததும் கணநேர அதிர்ச்சி, அவன் கண்ணில் தெரிந்தது. ஆனால், சுதாரித்துக்கொண்டு வேகமாக ஏறத் தொடங்கினான்.

’’உன் பையில் இருக்கும் உணவைக் கொடுத்துவிட்டுப் போ…’’ என்று அவனை நோக்கி சப்தமாக சொன்னேன். காது கேட்காதவன் போன்று செல்ல முயன்றவன், கொஞ்ச நேர தயக்கத்துக்குப் பின் திரும்பி வந்தான்.

பதட்டத்தோடு பையில் இருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்து கீழே வைத்த போது, அந்த பைக்குள் சிகரெட் பாக்கெட், புத்தகங்கள், குட்டி ரேடியோ, செல்போன் போன்றவை இருப்பதைக் கவனித்தேன். அவனது பதட்டமும் பைக்குள் இருந்த பொருட்களும் அவனைப் பற்றி ஒரு கதை சொன்னது. குரங்குகள் அந்த பொட்டலத்தை நோக்கி பாய்ந்து நகர்ந்து, அபகரித்துக்கொண்டன.

’’இங்கு இன்னும் எத்தனை நாள் இப்படி ஒளிந்திருப்பாய்?’’ என்று அழுத்தம் திருத்தமாய்க் கேட்டேன்.

என் கேள்வியால் அதிர்ந்தவன் சட்டென்று ஒரு கத்தியை எடுத்து என் எதிரே நீட்டி, ‘‘நீங்க யாரு… உண்மையைச் சொல்லுங்க… போலீஸா?’’ என்றான்.

அவன் நடுக்கத்தை ரசித்தபடி, ‘‘உன்னைப் போன்ற சாதாரண குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு போலீஸ்காரர்கள், மாறுவேடம் போட்டு மெனக்கெடுவார்கள் என்று நினைக்கிறாயா? சிரிப்பு மூட்டாதே…’’ என்றேன்.

என்னை நம்புவதா வேண்டாமா என்று யோசித்தவன் மீண்டும், ‘‘நீங்க போலீஸ் இல்லையே…’’ என்று கேட்டான்.

’’சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவுஞ் சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே…’’ என்ற இடைக்காடர் சித்தரின் பாடலை வாய்விட்டுப் பாடினேன். அர்த்தம் புரியாமல் நின்றவனுக்கு என் மீது நம்பிக்கை வந்தது.

’’நீங்க புதுசா வந்திருக்கிற சாமியாரா?’’ என்றான்.

நான் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்து, ‘‘உன்னைப் பற்றிச் சொல்…’’ என்றேன்.

 ‘‘சாமி… என் பேரு பாலுச்சாமிங்க. திருநெல்வேலி பக்கத்துக் கிராமம். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பம். எங்க குடும்பத்தில இதுவரைக்கும் யாரும் காலேஜ் போனதில்லை, ஆனா நான் காலேஜ் முடிச்சுட்டு மேலயும் படிச்சு ஐ.ஏ.எஸ். முடிக்க ஆசைப்பட்டேன். ஆனா, நான் வெளியூர்ல காலேஜ் படிக்கிறபோதே, எங்க ஊருக்கு எப்ப திரும்பி வந்தாலும் வேற சாதிக்காரங்க கிண்டல் பண்ணுவாங்க… வம்பு இழுப்பாங்க. நானும் முடிஞ்சவரை பேசாமத்தான் இருப்பேன். ஆனா… போனவாரம் கொஞ்சம் வரம்பு மீறிப் பேசிட்டாங்க. என்னால தாங்க முடியலை, விஷயத்தை எங்க ஆளுங்ககிட்ட சொன்னதும் அவங்களும் ஆவேசமாயிட்டாங்க. அவங்க இடத்துக்கே போய் சண்டை இழுத்து இரண்டு பேரை வெட்டி சாய்ச்சிட்டோம்…

இனிமே அங்கே இருந்தா ஆபத்துன்னு இங்கே வந்துட்டேன். மத்தவங்க ஆளுக்கொரு பக்கம் போயிட்டாங்க. ஊர்ல எங்க அப்பன், ஆத்தாவெல்லாம் என்ன பாடு படுறாங்கன்னு தெரியலை. இப்போ எங்க சாதிச் சங்கத்தோட உதவியால, ராத்திரி மட்டும் கீழே ஒரு வீட்ல படுத்துத் தூங்கிட்டு, காலையில் மலைக்கு மேல ஒளிஞ்சுக்குவேன்.  அவங்கதான், ‘பயப்பட வேண்டாம், கேஸை நாங்க பாத்துக்கிடுறோம். நாங்க சொல்றவரைக்கும் வெளியே தலை காட்டாதே’ன்னு சொல்லி இருக்காங்க…’’ என்று பேச்சை நிறுத்தியவன் கண்களில் நீர் வழிந்தது.

’’சுதந்திரமாக ஜெயிலில் இருப்பதற்குப் பயந்து, காட்டுக்குள் கைதியாக இருக்கிறாய். அப்படித்தானே..?’’ என்றதும்,

’’நான் செஞ்சது தப்புத்தான். ஆனா… அவங்கதான் என்னைத் தூண்டினாங்க…’’

‘சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச

தஸ்யகர்த்தாரமா மாம் வித்ய கர்த்ததார மவ்யம்’ என்றேன்.

’’சாமி நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை…’’ பவ்யமாகக் கேட்டான்.

’’பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னது இது. மனிதர்களில் பல சாதிகளைப் படைத்த தன்னால்கூட, அதை மாத்தமுடியாதுன்னு சொல்லியிருக்கிறார். நீ வன்முறையால் மாற்றப் போகிறாயா?’’

’’கடவுளே அப்படிச் சொல்லியிருக்காரா… அப்படின்னா நாங்க காலங்காலமா அடிமையாத்தான் இருக்கணுமா?’’

’’கடவுள் சாதிப் பிரிவுகளைத்தான் நீக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார், ஆனால் மனிதன் நினைத்தால் சாதிகளையே இல்லாமல் செய்துவிட முடியும். மனித சாதி என்பதைத் தவிர வேறு சாதி தேவைதானா…?’’

’’சாதி இல்லைன்னா… எங்களுக்குக் கிடைக்கிற எந்த சலுகையும் கிடைக்காது. நாங்க மட்டும் கடைசிவரை கஷ்டத்தோடயே இருக்கணுமா?’’

’’எதுவும் ஒரு நாளில் நிகழப்போவதில்லை பாலுச்சாமி. ஆனால் உங்களது பாதையாவது அதை நோக்கிச் செல்வதாக இருக்கவேண்டுமே தவிர, சாதியை வலுவேற்றிக் கொள்வதில் அல்ல…’’

’’சங்கம் வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போதே எங்களுக்கு சிரமம் தருபவர்கள், தனித்தனியாக இருந்தால் சும்மா இருப்பாங்களா சாமி… தலையிலேயே மதிச்சுடுவாங்க…’’ என்றான் ஆத்திரத்துடன்.

’’உன்னுடைய சங்கம் திடீரென உன்னைக் கைவிட்டால் என்ன செய்வாய்?’’

’’அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க…’’ என்றான்.

’’உன்னால் சங்கத்துக்குப் பாதிப்பு வருமென நினைத்து, உன்னைக் காட்டிக் கொடுத்தால் என்ன செய்வாய்?’’

தலையைக் குனிந்தபடி இருந்தவன், ‘‘இரண்டு பேரைக் கொன்னாச்சு… காட்டிக் கொடுக்கிறவனையும் போட்டுத்தள்ள வேண்டியதுதான்…’’ என்றான்.

’’ஆஹா… நன்றாக சிந்திக்கிறாய். இருவரைக் கொன்றதற்கே இப்படிக் காட்டுக்குள் திரிகிறாய், இன்னும் கொலைகள் செய்தபின் எங்கே போவாய்? சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் அடுத்த ஜென்மத்தில் கிடையாது. இதோ இப்போது நீ பயந்து ஒளிந்துகொள்ளும் இடத்தில்தான் இருக்கிறது நரகம்’’  என்றேன்.

’’சாமி… ஒரு வாரம் இந்த மலையில் ஒளிந்துகிடப்பதே எனக்குப் பெரிய வேதனையாக… தண்டனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்வதுன்னு நீங்களாவது வழி காட்டுங்கள்…’’ என்று கேட்டான் பாலுச்சாமி.

’’அதோ வருகிறானே, அவன் போலீஸ் என நினைக்கிறேன். குத்திக் கொன்றுவிடு…’’ என்று சொன்னதும் பதறிப்போய், இடுப்பில் செருகியிருந்த கத்தியை மறுபடியும் ஆவேசமாக எடுத்தான்.

கத்தியுடன் நிற்கும் ஒருவனது ஆக்ரோஷத்தைப் பார்த்து அதிர்ந்து தூரத்திலேயே நின்றுவிட்டான், வைத்தியநாதன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *