என்னுடன் நடந்த சந்திப்பு குருஜிக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்பது புரிந்தது. அவருடைய ஆன்மிக பரப்புரையைப் பாராட்டி, அவரது சேவைகளுக்குப் பட்டயம் தருவேன் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எங்களை வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் வேதாசலம், ‘‘உங்களைத் தேவையில்லாம தொந்தரவு செஞ்சிட்டேன், நீங்க ஏன் மக்களுக்கு வழி காட்டக்கூடாது… ஒரு ஆசிரமம் கூட வேண்டாம். தினமும் ஒரே இடத்துல இருங்க, சந்தேகம் கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்லுங்க.  தவறான வழியில போய்க்கிட்டு இருக்கிற மக்களுக்குக் கொஞ்சமாவது உதவி செஞ்சது மாதிரி இருக்குமே…’’ என்றார்.

’’என்னைவிட உங்களுக்கு மக்கள் மீது அதிக அக்கறை இருக்கிறது, மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள். எது நடந்தாலும் இயல்பாக எடுத்துக் கொள்கிறீர்கள், நீங்கள் ஏன் ஒரு ஆசிரமம் வைத்து குருஜியாக இருக்கக் கூடாது?’’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன்.

’’சாமி… எனக்கு இன்னும் எதுவுமே புரியலை. எனக்கே தெரியாதபோது, நான் எப்படி சீடர்களுக்குச் சொல்லித் தரமுடியும்?’’

’’இந்த பதில் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதில்லை, வேதாசலம்’’ என்றபடி ரோட்டுக்கு வந்தோம்.

எங்களின் எதிரே குற்றாலநாதர் கோயிலின் பூசாரி, சங்கரன் வந்து கொண்டிருந்தார். நீண்ட காலமாக அவரும் என்னை அறிவார். ஏனோ,  என்னைப் பார்த்ததும் சந்தோஷமடைந்தார்.

 ‘‘சாமி… எப்போ வந்தீங்க, இன்னும் கோயில் பக்கம் வரலையே…’’ என்று கொஞ்சம் நிறுத்தியவர், ‘‘உங்ககிட்ட தனியா கொஞ்சம் பேசணுமே..’’ என்றார்.

அவர் அப்படி சொல்லி முடிக்கும் முன்னரே வேதாசலம் என்னை விட்டு நகன்று கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

’’சொல்லுங்க…’’ என்றபடி அவருடன் திசை மாறி நடக்கத் தொடங்கினேன்.

’’எங்கப்பா இந்தக் கோயில்ல பூசாரியா இருந்தார், நானும் இத்தனை வருஷமா இருக்கேன். என்னோட பையன் நல்லா படிச்சு வேலைக்குப் போவான்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா, அவனும் பூசாரியா மாறப் போறேன்னு அடம் பிடிக்கிறான். அவனை நீங்கதான் எப்படியாவது மாத்தணும்’’ என்றார்.

எனக்கு அடக்கமுடியாத சிரிப்பு வரவே, வாய்விட்டு சிரித்தேன். என்னை சங்கரன் முறைப்பது போன்று பார்த்தபிறகுதான் நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினேன்.

’’என்ன சங்கரன்… உங்க கையால விபூதி வாங்க எத்தனையோ பெரிய மனிதர்கள் காத்திருக்காங்க. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பாலமாக இருக்கிற நீங்களே, இப்படி உங்க பையனோட ஆசையில விளையாடலாமா? கடவுளுக்கு அர்ச்சனை செஞ்சு அவனும் சொர்க்கம் போகட்டுமே சாமி…’’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன்.

சங்கரனுக்கு என்னுடைய குணம் தெரியும், அவ்வப்போது விவாதம் செய்வார் என்பதால் என் கிண்டலை கண்டுகொள்ளாமல் பேசினார்.

’’சும்மா நக்கல் பண்ணாதீங்க…  நான் கடவுளை தினமும் வேண்டிக்கிட்டு இருக்கிறதே, அவனாவது என்னயமாதிரி அன்னாடங் காய்ச்சியா இல்லாம ஏதாவது வேலைக்குப் போய் நிம்மதியா இருக்கட்டும்னுதான். என்ன செய்வீங்களோ தெரியாது, நாளைக்குக் காலையில உங்களைப் பார்க்க என் பையன் வைத்தியநாதனை அனுப்பி வைப்பேன். ஒழுங்கா காலேஜ்க்குப் போய் படிக்கச் சொல்லுங்க, படிச்சு நல்ல வேலைக்குப் போகச் சொல்லுங்க. உங்களைத்தான் மலை போல நம்பிக்கிட்டு இருக்கேன்…’’ என்றார்.

’’நாளைக்குக் காலையில செண்பகாதேவிக்கும் தேனருவிக்கும் போகப் போறேன். மலைமேல ஏற துணைக்கு ஒரு பையன் இருந்தா நல்லதுதான். நாளைக்கு காலையிலேயே அனுப்புங்க, அவனுக்கு அகத்தியரைத் தரிசனம் செய்ய வைச்சு துறவியாவே மாத்திடுறேன்…’’ என்றேன் உரக்க சிரித்தபடி.

முழுமையாக விடியும் முன்னரே வைத்தியநாதனை அனுப்பி வைத்திருந்தார் பூசாரி. குளித்து முடித்து வேஷ்டி, சட்டையில் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்த இருபது வயது இளைஞனைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

’’தம்பி… சிகரெட் வைத்திருக்கிறாயா?’’ என்று முதல் கேள்வியிலேயே அதிர்ச்சியைக் கொடுக்க நினைத்தேன். ஆனால் அவனோ கொஞ்சம்கூட அசராமல், ‘‘இதோ… வாங்கிட்டு வர்றேன் சாமி, என்ன பிராண்ட்?’’ என்று பணிவாகக் கேட்டு என்னை அசரடித்தான்.

’’அட போப்பா, ஒரு சிகரெட்கூட வைச்சுக்காம என்ன பையன் நீ… போகும் வழியில் வாங்கிக் கொள்ளலாம்’’ என்றபடி எழுந்தேன்.

’’இல்லை சாமி… நான் அதெல்லாம் குடிக்கறதில்லை…’’ என்று பொறுப்பாகப் பதில் சொன்னான். எதுவும் பேசாமல் சிற்றருவியை நோக்கி நடந்தோம். கொஞ்சநேரத்திலேயே எனக்கு மூச்சு வாங்கியது. அதனால் பாதையை விட்டு விலகி பாறையின் மீது அமர்ந்தேன். வைத்தியநாதன் கொஞ்சம் தள்ளி நின்றபடி பேசத் தொடங்கினான்.

’’சாமி… சின்ன வயசுல இருந்தே குற்றாலீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டு இருக்கேன். கோயிலுக்குள்ளே இருந்தே பார்க்க முடிஞ்ச அருவி, அந்த அருவியின் வாசனை, அருவியின் சப்தம் எல்லாமே கடவுளா தெரிஞ்சது. கோயில் சந்நிதானத்துக்குள்ள தீபாரதனை காட்டும்போது, கடவுளைப் போலவே எங்க அப்பாவும் பளபளன்னு மின்னுவார். அதைப் பார்த்ததில் இருந்து எனக்கும் கடவுளைத் தொட்டு அபிஷேகம் செய்யவும், ஆராதனை செய்யவும் ஆசையா வந்திருச்சு. ஆனா, எங்கப்பா என்னய புரிஞ்சுக்கவே இல்லை. அப்பா எதுக்காக உங்ககிட்ட என்னய அனுப்பியிருக்கார்ன்னு  தெரியும். ஆனாலும், நீங்க எனக்குத்தான் உதவணும். நீங்க சொன்னா அப்பா கேட்பார். எனக்கு படிப்பு ஏறலை.. பிடிக்கலை… வேண்டாமே…’’ என்று மெல்லிய குரலில் சொல்லி முடித்தான்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், முழுமையாக கடவுளுக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் வைத்தியநாதன் விசித்திரமாகத் தெரிந்தான். இன்னும் முழுமையாக அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

’’நீ இதுவரை ஏதாவது தப்பு செய்திருக்கிறாயா?’’

கொஞ்சநேரம் யோசித்தான். ‘‘அம்மா, அப்பா சொன்னபடி கேட்காம இருக்கிறதும் தப்புத்தான், அப்படிப் பார்த்தா பள்ளிக்கூடம் போறேன், ஸ்பெஷல் கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு கோயில், அருவின்னு சுத்தியிருக்கேன். ஆனாலும் எப்படியோ படிச்சு பாஸாயிடுவேன். எனக்கு குடுக்கிற காசுல சாமிக்கு கற்பூரம், பூ வாங்கி வைச்சிட்டு, சாக்லேட் வாங்கி சாப்பிட்டதா பொய் சொல்லியிருக்கேன். பூசாரி இல்லாதப்ப, சாமி சிலையை தொட்டுக் கும்பிட்டிருக்கேன்… இதுபோல இன்னும் ஏதாவது இருக்கலாம். ஆனா, நினைவுக்கு வரலையே சாமி…’’ என்றான்.

’’நாயன்மார்கள், ஆழ்வார்கள் வரிசையில் நீயும் கடவுளுக்கு தீவிர பக்தனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்… அவ்வளவுதானே?’’ என்று சிரித்தபடி கேட்டதும் பதறினான்.

’’அப்படியெல்லாம் கேலி செய்யாதீங்க சாமி. நான் ஒரு சாதாரணமானவன், என்னமோ என் ஆசையெல்லாம் எப்பவும் கடவுள் சிலைகிட்டே இருக்கவும், அருவியை பாத்துக்கிட்டே இருக்கிறதும்தான்.’’ என்றான்.

’’யாரையாவது காதலித்திருக்கிறாயா?’’

’’என் தங்கச்சி தவிர வேறு எந்த பொண்ணுகிட்டேயும் பேசமாட்டேன் சாமி. சொந்தக்காரங்க வந்தாலும் அதிகம் பேசுறதில்லை. காதல் எல்லாம் தப்பு’’

’’ஏன்..?’’

அவன் பதில் சொல்லாமல் நின்ற நேரத்தில் ஏராளமான குரங்குகள் மரங்களில் இருந்து தாவி வந்து சேர்ந்தன, ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா என்று எங்களைச் சுற்றிப் பார்த்தது.

’’வைத்தியநாதா… அடிவாரத்திற்குப் போய் பொரி, இட்லி என ஏதாவது கிடைத்தால் வாங்கி வாயேன்…’’ என்று அனுப்பி வைத்து, ஒரு குரங்கை அருகே அழைத்தேன். எனக்கு குரங்கிடம் பயம் இல்லை, அதற்கும் என்னிடம் பயம் இல்லை. ஒன்று அருகே வந்து அமர்ந்தது. இன்னும் ஒன்று என் மேல் தாவியேறியது, தடவிக் கொடுத்தபடி இருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *