- ஞானகுரு : திருமண பந்தம் தற்போது அதிகம் சீர்குலைவது எதனால்?எஸ்.ரத்தினா, அழகர்சாமி தெரு.
ஞானகுரு : ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் நாலைந்து பெண்களைத் திருமணம் முடித்து அவர்களை சொத்துக்கள் என்று வீட்டுக்குள் பூட்டிவைத்தான். பெண்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும், ‘வீட்டுப்படியை பெண் தாண்டக்கூடாது… அவள் தேவி அம்சம்’ என்று ஏமாற்றி அடக்கி வைத்தான். அவள் படிக்கத் தொடங்கியதும், ‘தாலியை மதிக்கவில்லை என்றால் நரகத்துக்குப் போவாள்’ என்று மிரட்டிப் பார்த்தான். புருஷனை விட்டால் உணவுக்கும் வாழ்வுக்கும் ஆதரவு இல்லை என்பதால் பெண் இத்தனை காலமும் அமைதியாகவே இருந்தாள்.
காலம் மாறிவிட்டது. பெண் சம்பாதிக்கிறாள். யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இப்போதும், ‘நான்தான் படிக்கவும், வேலைக்குப் போகவும் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்’ என்று ஆண் எகத்தாளம் பேசினால், பெண் கோபமடையத்தான் செய்வாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சொல்லில் மட்டுமின்றி செயலிலும் காட்டும் கணவனுடன் மட்டுமே இனி அவள் இணைந்திருப்பாள். மீண்டும் தாய்வழிச் சமூகம் ஏற்படத்தான் போகிறது. அதன் முன்னோட்டத்திற்கே பயந்தால் எப்படி..?