பார்வையிலே செல்வந்தர் என்பது தெரிந்தது. ஞானகுரு முன்பு அமைதியாக நின்றார். ‘’மனிதனுக்கு மட்டுமல்ல பணத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோரிடமும் ஒரே மாதிரி மதிப்பு கிடைப்பதில்லை. இத்தனைக்கும் பணம் என்பதற்கு நாடு முழுவதும் ஒரே மதிப்புதான். ஆனால், சரியான நபரிடம், சரியான இடத்தில் மட்டும்தான் சரியான மதிப்பு கிடைக்கும்’’ என்றார் ஞானகுரு.
‘’அதெப்படி இடத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த மாதிரி பணத்தின் மதிப்பு மாறும்..?” திருப்பிக்கேட்டார் அவர்
‘’ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு செல்வந்தனுக்கு இரண்டு பிள்ளைகள். மரணத்தின் தருவாயில் மூத்த மகனுக்கு தன்னுடைய 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் கொடுத்தார். அடுத்த மகனுக்கு ஒரு செல்லாத பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு இறந்துபோனார்.
இளையவனை தந்தை ஏமாற்றிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டினார்கள். அந்த செல்லாத நோட்டை கீழே எறிந்துவிட்டு வேலை செய்து பிழைத்துக்கொள் என்றார்கள். தந்தை காரணம் இன்றி அப்படி செய்திருக்க மாட்டார் என்று நம்பினான் இளையவன். ஒருசிலரிடம் அந்த பணத்தைக் காட்டினான். அனைவருமே அதை செல்லாத நோட்டு என்றுதான் கூறினார்கள். ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் பணம் அச்சிடும் நகரத்துக்குப் போனான். தன்னிடம் இருக்கும் ஒரு செல்லாத நோட்டைக் காட்டியதும், உடனே அவனை மேலதிகாரியிடம் அழைத்துப் போனார்கள்.
’30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நோட்டு தவறுதலாக அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு போய்விட்டது. அதனை யாராலும் கண்டறிய இயலவில்லை. இப்போது அதன் மதிப்பு பல கோடிகள்’ என்றார். அப்போதுதான் இளையவனுக்கு தந்தையின் செயலுக்கு அர்த்தம் புரிந்தது. அவனுடைய ஊரில் பணத்தை யாரிடமாவது காட்டியிருந்தால் செல்லாது என்று கிழித்துப் போட்டிருப்பார்கள். சரியான இடத்தில்தான் சரியான பொருளுக்கு மதிப்பு இருக்கும்.
ஆகவே, பணம் சம்பாதிப்பதற்கு தகுதியான இடத்தையும் காலத்தையும் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். மல்லிகைப்பூ விளையும் இடத்தில், அந்த பூவுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு என்றாலும் கழுதையிடம் கொடுத்தால் அப்படியே சாப்பிடுமே தவிர, அதைக் கொடுத்து நிறைய நோட்டு, புத்தகங்கள் வாங்கி சாப்பிடாது. அதனால் உனக்கு எல்லா இடங்களிலும் மதிப்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. ’’ என்றார்.
தெளிவுடன் கிளம்பினார் செல்வந்தர்.