‘’உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. உன்னிடம் இருப்பதில் அடுத்தவருக்கு என்ன கொடுப்பாய் என்பதில்தான் நீ எதிர்பார்க்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது’’ என்று செல்வந்தர் ஒருவருக்கு ஆலோசனை கூறிக்கொண்டு இருந்தார் ஞானகுரு.

‘’ஏன் அப்படி சொல்கிறீர்கள்?”’ என்று கேட்டார் மகேந்திரன்.

‘’வங்கியில் எக்கச்சக்கமாக பணம் பூட்டிக்கிடக்கிறது என்பதற்காக அதனை யாரும் பூஜிப்பதும் மதிப்பதும் இல்லை. அதேபோன்று ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக, மிகப்பெரிய கல்விமானாக அல்லது மிகப்பெரிய பலவானாக இருப்பதால் மட்டும் அவரை யாரும் பாராட்டவும் மதிக்கவும் மாட்டார்கள். அவருடைய செல்வத்தை பிறருக்குக் கொடுக்கும்போதுதான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்…’’

‘’நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பிறருக்கு ஏன் கொடுக்கவேண்டும்?”

‘’உன்னிடம் யாரும் வந்து ஒருபோதும் பங்கு கேட்கப்போவதில்லை. அதனால், நீ எவ்வளவு செல்வத்தை வேண்டுமானாலும் சேமித்து பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய்..? இன்னும் கூடுதலாக நிலம், பங்களா, கார், தொழிற்சாலை என்று ஆரம்பிக்க வேண்டுமானால் அந்த பணம் பயன்படலாம். ஆனால், எப்படியும் நீ படுக்கப்போவது ஒரே அறைக்குள் மட்டும்தான். மூன்று நேரம் மட்டும்தான் சாப்பிடப் போகிறாய். மேலும், நீ மரணிக்கும்போது இந்த செல்வத்தை நிச்சயம் கொண்டுபோக முடியாது.  

பின் எதற்காக பணத்தை சேமித்து வைக்கப்போகிறாய்..? உன் சந்ததிக்காகவா? நீ எவ்வளவு சேமித்து வைத்தாலும் அவர்கள் திருப்தி அடையப்போவதில்லை. அதனால், உன் சேமிப்பில் கொஞ்சம் பிறருக்குக் கொடுத்துப்பார். நீ சம்பாதிப்பதைவிட, சேமிப்பதைவிட கொடுப்பதில் இருக்கும் சந்தோஷம் புரியும். உன்னிடம் மிச்சம் இருப்பதையும், உனக்கு பயன்படாததையும் மட்டும்தானே கொடுக்கப் போகிறாய்..? தன்னிடம் விளையும் பழங்களையும், பூக்களையும் எந்த தாவரமும் தனக்கென்று சொந்தம் கொண்டாடுவது இல்லை. கொடுக்கக்கொடுக்க கிடைத்துக்கொண்டே இருக்கும். அதனால், கொடுத்துப்பழகு…’’

‘’என் செல்வத்தைக் கொண்டு நான் யாருக்கு, எப்படி உதவி செய்ய வேண்டும்..?”

‘’கொடுப்பது மட்டுமே உன் எண்ணமாக இருக்கட்டும். மழையைப் போல், காற்றைப்போல் எல்லோருக்கும் அள்ளிக்கொடு, அது நல்ல வகையில் பயன் தருகிறதா என்பதை கவனிக்க வேண்டியது உன் வேலை அல்ல’’ என்றார் ஞானகுரு.

பணத்தின் இன்னொரு அர்த்தம் மகேந்திரனுக்குப் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *