ஒரு பெண் மிகுந்த சோகத்துடன் ஞானகுரு முன்பு நின்றுகொண்டிருந்தாள். ‘’சாமி, கல் உப்பை கையில் வைத்துக்கொண்டு, ‘எனக்கு நிறைய பணம் கிடைக்கப்போகிறது’ என்று தொடர்ந்து கால் மணி நேரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த கல் உப்பை தண்ணீரில் கலந்து ஓடவிட வேண்டும். 10 நாட்கள் இப்படி செய்துவிட்டால் பணம் கொட்டும் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் செய்த வழிமுறையில் ஏதேனும் தவறு இருக்கிறதா?” என்று கேட்டாள்.

ஞானகுரு அழுத்தமான குரலில் பேசத் தொடங்கினார். ‘’உப்பு விளைவிக்கும் தொழிலாளி எத்தனை சிரமப்பட்டு அதனை சேகரிக்கிறான் என்பது தெரியுமா? கடுமையான வெயிலில் கண்கள் கூசும், உப்புக்காற்று உடலை அறுக்கும், உடல் முழுவதும் உப்பின் சுவை பொங்கும். கைகளிலும் கால்களிலும் ரத்தம் வழியும். அத்தனை வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு ஒரு நாள் கூலித்தொகை நூறு ரூபாய்க்கு வேலை செய்கிறான். நீ… அவன் கஷ்டப்பட்டு விளைவித்த உப்பை கையில் வைத்துக்கொண்டு, கண் கட்டு வித்தை போன்று பணம் கொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்… இது நியாயமா பெண்ணே..?”’

‘’அப்படி சொன்னால் பணம் கொட்டும் என்கிறார்களே, அது பொய்யா..?”

‘’மந்திரத்தில் மாங்காய் விழாது பெண்ணே. அது உன் மனதில் உறுதியை வரவழைப்பதற்கான குறுக்கு வழி. எல்லா குறுக்கு வழிகளும் நேர் பாதையைவிட துன்பம் தரக்கூடியவைதான். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் கவலை இன்றி இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வது உனக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுக்கலாம். நம்பிக்கையைக் கொடுக்கலாம். உன் மனதை அப்படி நீயே ஏமாற்றவும் செய்ய முடியும். ஆனால், பணம் ஒருபோதும் வானத்தில் இருந்து கொட்டாது. அப்படி கொட்டும் என்றால், அந்த உப்பு வியாபாரியும் தொழிலாளியும் எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? பணம் வேண்டுஅம் என்றால் அதற்கு நீ உழைக்க வேண்டும். சரியான வழியில் உழைக்க வேண்டும். சரியான பலன் கிடைக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும்…’’

‘’ஆனால், நிறைய பேருக்கு பணம் கிடைத்திருக்கிறதே…’’

‘’அப்படியா..? அவர்களிடம் இதை மட்டும் செய்யச்சொல். ’எனக்கு வயிறு பசிக்கவில்லை. நான் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டேன்’ என்று கையில் உப்பை வைத்துக்கொண்டு சொல்வதற்கு ஏற்பாடு செய். அவர்களுக்கு பசி தீர்ந்துவிட்டால், உணவு தேவைப்படாது. உலகம் முழுவதும் எல்லோரும் எல்லா உற்பத்தியையும் நிறுத்திவிடலாம். கை உப்பு வைத்து பசியை வெல்வோம். ஏன், உப்பையே கடவுளாகவும் கொண்டாடுவோம்’’ என்று சிரித்தார்.

தெளிவடைந்து கிளம்பினார் பெண்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *