மகேந்திரன் ஒரு புதிய நண்பருடன் ஞானகுருவை சந்திக்க வந்தார். கொஞ்ச நேரம் நடந்து வந்ததிலே அவருக்கு மூச்சு இரைத்தது. அந்த அளவுக்கு உடல் பருமனாக இருந்தார்.
‘’சுவாமி, இவரது உடலைக் குறைப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா..? அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என்கிறார் மருத்துவர்’’ என்று அவருக்காகப் பேசினார் மகேந்திரன்.
’’உங்களுக்கு என்ன சுவை பிடிக்கும்..?’’
‘’இனிப்பும் காரமும் அதிகம் பிடிக்கும். ஆனால், இப்போது சர்க்கரை நோய் வந்துவிட்டதால் இனிப்பை வீட்டுக்குத் தெரியாமல் மட்டும் சாப்பிடுகிறேன்’’ என்றார் அந்த நபர்.
’’மனிதனின் உடலில் ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழும் சரிவர இயங்குவதற்கு ஆறு சுவைகளும் அவசியம். ஒருசில சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மற்றவற்றை கண்டுகொள்ளவில்லை என்றால் உடல் இப்படித்தான் தன்னுடைய வேலையைக் காட்டும்.
இனிப்பு உடலுக்கு உடனடி உற்சாகமும் வளர்ச்சியும் தரும். ஆனால், இது அதிகமானால் உடல் எடை அதிகரிக்கும். உடல் தளர்வு, சோர்வு, தூக்கம், சளி உருவாகும். அதனால் இதனை நன்றாகவே குறைத்துக்கொள்.
பசியைத் தூண்டி, செரிமானத்திற்கு உதவுகிறது கார சுவை. இது, ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். ஆனால், அதிக காரம் உடல் சூடு, எரிச்சலை அதிகரித்துவிடும், குடல் புண்ணை உருவாக்கும். எனவே காரத்தை தள்ளியே வை.
துவர்ப்பு சுவையை பலரும் எடுத்துக்கொள்வதே இல்லை. இது வயிற்றுக்கு நல்லது. சுறுசுறுப்பு கொடுக்கக்கூடது. அதிகம் எடுத்துக்கொண்டால் வாத நோய்கள் உருவாகும். போதைப் பொருட்களாக இதை எடுத்துக்கொள்வது ஆபத்தை வரவழைக்கும். எனவே எச்சரிக்கை உணர்வுடன் கொஞ்சமாக சேர்த்துக்கொள்.
உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்யும் புளிப்பு சுவையானது, இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், இதனை அதிகம் எடுத்துக்கொண்டால் நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகள் வரும். ஆகவே, அளவோடு சேர்த்துக்கொள்.
உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய சுவை என்றால் அது கசப்புதான். இது நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சலை தடுக்கக்கூடியது. உடல் கழிவுகளை அகற்றக்கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இனிப்பு, காரத்துக்கு இணையாக இந்த சுவையை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும், எலும்புகளை பாதிக்கும்.
கடைசியாக உவர்ப்பு. உப்பு இல்லாத பணம் குப்பையிலே என்பார்கள். இதுதான், உமிழ்நீரை சுரக்கச்செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இது அதிகரிப்பது ஆபத்து. ஆம், தோல் வியாதிகளை உருவாக்கிவிடும். உடலில் கட்டிகள், பருக்கள் தோன்றிவிடும்.
இந்த ஆறு சுவைகளும் அன்றாடம் உடலுக்குச் சேரும் வகையில் உணவு அட்டவணையை வகுத்துக்கொள். மூன்று நேரம் மட்டும் சாப்பிடு. தினமும் இரவு 7 மணி நேரம் தூங்கு. இளஞ்சூடான நீரை மட்டுமே பருகு. தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்’’
‘’சுவாமி அப்படி செய்தால் என் உடல் குறைந்துவிடுமா..?’’
‘’உன் நம்பிக்கைதான் உடலைக் குறைக்கும்’’
ஞானகுருவின் வார்த்தைகளில் தெரிந்த உறுதி உடல் பருமன் நபருக்கு சந்தோஷம் கொடுத்தது.