கல்லூரிப் பெண் கவலை நிறைந்த முகத்துடன் நின்றாள். அவள் தலையைப் பார்க்கும்போதே, கவலையின் காரணம் புரிந்தது. ‘’பெண்ணே, கல்லூரி படிக்கும் வயதில் உனக்கு ஏன் இத்தனை மன அழுத்தம்?’’ கேள்வி எழுப்பினார் ஞானகுரு. அருகே நின்ற அவளது தாய், ‘’இந்த வயதிலேயே இளநரை வந்துவிட்டதே என்ற கவலைதான் அவளை பாடாய்படுத்துகிறது’’ என்று முகத்தில் கவலையைக் காட்டினார்.
‘’நீ சொல் பெண்ணே..? இளநரையினால் கவலையா அல்லது கவலையால் இளநரையா..?” மீண்டும் கேட்டார் ஞானகுரு.
‘’+2 முடித்ததும் மெடிக்கல் சேரவேண்டும் என்று வீட்டில் எல்லோரும் ஆசைப்பட்டார்கள் எனக்கு அத்தனை தூரம் படிப்பு வராது என்று சொன்னால் கேட்கவே இல்லை. மார்க் குறைவாகத்தான் வந்தது. சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், எனக்குப் பிடிக்காத இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்துவிட்டனர். எனக்கு ஏனோ கணக்கின் மீது விருப்பமே இல்லை. இப்போது தினம் தினம் கல்லூரிக்குப் போவதே நரகமாக இருக்கிறது. நான் பெற்றோரின் கனவை மண்ணாக்கிவிட்டேன் என்ற திட்டுக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த குற்றவுணர்வுடன் இப்போது இளநரையும் சேர்ந்துவிட்டது’’ என்றாள்.
‘’பெண்ணே, இளநரை வருவதற்கு இரண்டு காரணங்கள்தான். பரம்பரையால் வரலாம். உன்னுடைய தாய்க்கும், தந்தைக்கும் இன்னமும் முடியில் இளமை துள்ளுகிறது. அதனால் உன் இளநரைக்குக் காரணம் தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருப்பதுதான். நாட்பட்ட மன அழுத்தம் தலைமுடியின் வேர்க்கால்களில் உற்பத்தியாகும் நிறமி உற்பத்தி செய்யும் செல்களை பாதித்து இளநரையை உண்டாக்குகிறது…’’
‘’சுவாமி, என்ன இப்படி சொல்கிறீர்கள்..? இவளுக்கு டாக்டர் எக்கச்சக்க மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருக்கிறாரே..?”
‘’மருத்துவரிடம் போனால், அவருக்குத் தெரிந்ததை எழுதிக் கொடுக்கத்தான் செய்வார். ஆனால், மருத்துவத்தால் இளநரையை நீக்கமுடியாது. ஆனால், இது இனியும் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.. உன் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக வெளியே வா… இப்போது உன் முன்னே இரண்டு வழிகள் இருக்கின்றன. உனக்கு ஏன் கணிதம் பிடிக்கவில்லை என்று யோசி. அதனை எப்படி ரசித்துப்படிப்பது என்று கண்டுபிடி. அப்படி இல்லை என்றால், இப்போதே அந்த படிப்பில் இருந்து வெளியேறி, உனக்குப் பிடித்ததை படி…’’
‘’நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்களேன்…’’
‘’உன் பசிக்கு நான் சாப்பிட முடியாது மகளே… நீ முடிவெடு. விளைவு எதுவாக இருந்தாலும் தாங்கிக்கொள்ளும் உறுதியான மனம் கிடைக்கும். தேவையற்ற மன அழுத்தங்களை விட்டுத்தள்ளு. புரதமும், இரும்புச்சத்தும் அதிகம் எடுத்துக்கொள். உடலும் மனமும் வலுவாகும்’’
கல்லூரிப் பெண்ணுக்கு அசாத்திய நம்பிக்கை முகத்தில் தெரிந்தது.