அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைக்குப் போகிறார்களோ இல்லையோ, வாரத்தில் இரண்டு நாட்கள் மருத்துவரைப் பார்க்க மட்டும் தவறுவதே இல்லை. ஓய்வு நேரத்தில் ஞானகுருவை சந்திக்க வந்தார்கள்.

‘’ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத்தான் நாங்கள் தினமும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், ஏதேனும் உடல் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுப்பதற்கு வழியே இல்லையா..?’’ மனைவி ஆதங்கத்துடன் கேட்டார்.

‘’உன் வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன..?” இயல்பாகக் கேட்டார் ஞானகுரு.

‘’காய்கள், பழங்கள், பால், பிரட், ஐஸ்க்ரீம், சாக்லேட், சமைத்த உணவு, இறைச்சி, மருந்துகள், குளிர்பானங்கள், முட்டை என எல்லாமேதான் வைத்திருக்கிறோம். எந்த ஒரு பொருளையும் உள்ளே வைப்பது என்றால், உள்ளே இருக்கும் பொருட்களுடன் சண்டை போட்டுத்தான் திணிக்க வேண்டியிருக்கும்’’ என்று சிரித்தார்.

’’உன் ஆரோக்கியத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறாய். வீட்டிலேயே அதிக ஆபத்தான நுண்ணுயிரிகள் வாழும் இடமாக கழிவறையைத்தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியில்தான் எக்கச்சக்க நுண்ணுயிர்கள் ஒளிந்திருக்கின்றன. காய்கள், பழங்களை முறையாகக் கழுவாமல் குளிர் பெட்டிக்குள் திணிப்பதுதான் இந்த நுண்ணுயிர்கள் உருவாகக் காரணமாகிறது. இந்த பெட்டியை மாதம் இரண்டு முறையாவது துடைத்து பராமரிக்க வேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் எப்போது துடைத்தீர்கள்..?””

‘’வாங்கிய பிறகு துடைப்பதற்கு தேவையும் அவசியமும் இல்லை, நேரமும் இல்லை’’ தயக்கத்துடன் பதில் சொன்னார் மனைவி.

‘’சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆபத்து. நீ உணவை சூடு செய்து, பின் குளிர்வித்து, மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது கெட்டுப்போன உணவை சாப்பிடுவதற்கு சமம். ஒரு நாள் வெளியே திறந்து வைத்த உணவை மறுநாள் உன்னால் சாப்பிட முடியுமா? முகத்திற்கு பக்கத்திலே கொண்டுபோக முடியாத அளவுக்கு கெட்ட வாடை வரும். ஆனால், குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து அப்படிப்பட்ட உணவைத்தான் பாதுகாத்து ஒரு நாள் மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுகிறாய். இதுதான் நோய்க்கு அடிப்படை காரணமாகிறது. இந்த உணவு சோம்பல், உறக்கம் தருவதாக இருக்கும். எளிதில் செமிக்காது. உடல் முழுவதும் கொழுப்புக் கட்டிகள் உருவாகும்.

பொதுவாக வயிற்றுக்குள் போகும் உணவு செரிமானமாக வேண்டும். செரிமானம் ஆகவில்லை என்றால் வாந்தியாக அல்லது பேதியாக வெளியேற வேண்டும். ஆனால், குளிர்வித்து சாப்பிடும் உணவுப் பொருட்கள் இந்த மூன்று வகையிலும் வெளியேறாமல் வயிற்றுக்குள் கெட்டுப் போய் மந்தமாகவே இருக்கும். மலம், ஜலம் வெளியேறுவது சிரமாக இருக்கும். இந்த உணவுதான் பசியைக் கெடுக்கும், பல்வேறு நோய்களுக்கு காரணமாகிவிடும். குளிர்சாதனப் பெட்டி மட்டுமல்ல, குளிர்சாதன அறையையும் தவிர்த்துவிடு. அவ்வப்போது சமைத்த உணவை மட்டும் எடுத்துக்கொள். குளிர்சாதனப் பெட்டியில் பால், மருந்துகளை மட்டும் வைத்திரு. அதன்பிறகு உன் ஆரோக்கியத்தைக் கவனி’’ என்றார் ஞானகுரு.

ஆரோக்கியத்தின் வாசல் அந்த தம்பதியருக்கு நன்றாகவே தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published.