‘’உன்னைத் தொட்டுச்செல்லும் தென்றலை, உன் வீட்டு வாசலில் பூத்துநிற்கும் கொன்றை மரத்தை ரசிக்கவும் முடியாத அளவுக்குப் பரபரப்பாக இயங்குவதைத்தான் வாழ்க்கை என்று நம்பிக்கொண்டு இருக்கிறாயா?… அந்த பரபரப்பில் இல்லை வாழ்க்கை. அவற்றை ரசிப்பதற்கு நீ தினமும் ஒதுக்கவேண்டிய அரை மணி நேரத்தில்தான் இருக்கிறது, உன் உண்மையான வாழ்க்கை’’ என்றார் ஞானகுரு.

‘’அதென்ன அரை மணி நேரம் குருஜி..?’’ சந்தேகம் கேட்டார் மகேந்திரன்.

‘’இரவு நேரங்களில் தூங்குவதற்கு யாருமே அவசரம் காட்டுவதில்லை. எத்தனை நேரம் விழித்திருந்து தொலைக்காட்சியும் செல்பேசியும் பார்த்து மகிழ முடிகிறதோ… அத்தனை தூரம் சந்தோஷமாக இருக்கிறார்கள். காலையில் எழும்போதுதான் அவசரம் ஆரம்பமாகிறது. சரியாக பாத்ரூம் போகாமல், அனுபவித்துக் குளிக்காமல், அவசரமாய் காலை உணவை எடுத்துக்கொண்டு அல்லது எடுக்காமலே போகிறார்கள். காலையில் தொடங்கும் அவசரம் இரவு படுக்கைக்கு வரும் வரையிலும் நீடிக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல்தான் ஒவ்வொரு நபரும் சுதந்திரத்தை உணர்கிறார்கள். அதனால்தான், கூடுதல் நேரம் விழித்திருந்து விருப்பமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும், இணையங்களில் அரட்டை அடிப்பதற்கும் நேரம் ஒதுக்குகிறார்கள். தூக்கத்திற்கு கண்ணும், உடலும் கெஞ்சிய பிறகுதான் படுக்கைக்குப் போகிறார்கள். மீண்டும் பகலில் அவசர உலகம் ஆரம்பமாகிறது…’’

‘’இது தெரிந்த விஷயம்தானே…’’

‘’இந்த அவசரத்தை முடிவுக்குக் கொண்டுவரத்தான், அரை மணி நேரம் என்ற அற்புத மருந்து இருக்கிறது. எல்லா விஷயத்தையும் அரை மணி நேரம் முன்கூட்டியே முடிப்பது என்று உனக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொள். உன்னுடைய அலுவலகம் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது என்றால், 9:30 மணி என்று நிர்ணயித்துக்கொள். நீ போகவேண்டிய டிரெயின் இரவு 7 மணிக்குக் கிளம்புகிறது என்றால் 6:30 மணிக்கு அங்கு இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்துக்கொள்.

குழந்தைகளுக்கும் இதனை பழக்கிவிடலாம். பள்ளிக்கு அரை மணி நேரம் முன்கூட்டியே செல்வது எந்த தவறும் கிடையாது. திரை அரங்கத்திற்கும், திருமண வீடுகளுக்கும் முன்கூட்டியே செல்வது மிகப்பெரிய அனுகூலம். இந்த அரை மணி நேர மந்திரத்தை, முக்கியமாக இரவு படுக்கப்போகும் நேரத்தில் மிகச்சரியாகத் தொடங்க வேண்டும். ஆம், தினமும் இரவு 12:30 மணிக்குத் தூங்குபவராக இருந்தால், இனி 12 மணிக்கு படுக்கை என்று முடிவெடுத்துக்கொள். காலை எழும் நேரம் 7 என்பதை 6:30 ஆக்கிக்கொள். நீ ஒட்டுமொத்தமாக அரை மணி நேரத்தை மட்டும்தான் ஒதுக்கப்போகிறாய், ஆனால், உனக்கு 24 மணி நேரம் சுகமாய் கழியும்’’ என்றார் ஞானகுரு.

மகேந்திரனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *