பாலியல் தொழிலில் சிக்கிய பெண் ஒருத்தி, அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தாள்.

’’சாமி… நான் இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கு முந்தி கோயிலுக்குப் போனாலே சாமியாடத் தொடங்கிடுவேன். இப்போ கோயிலுக்குப் போக பயமா இருக்கு. எப்பவோ ஒரு தடவை போனாலும் சாமி வர்றது இல்லை. இந்தத் தொழிலை நிறுத்திட்டா கடவுள் என்னை மன்னிச்சுடுவாரா… முன்னைப் போல சாமியாட முடியுமா?’’ என்று கேட்டாள்.

’’கடவுள் உன் உடம்பில் இருந்து ஆடவைத்தார் என்று நிஜமாகவே நம்புகிறாயா? என்று கேட்டேன். உண்மை என்பது போல் தலையாட்டினாள்.

‘‘இந்த உலகில் இருக்கும் எல்லாமே கடவுள்தான். உன் உடம்பில் மட்டுமல்ல… கல், செடி, விலங்கு, பறவை என எல்லாமே கடவுள்தான். ஆனால் கடவுள் ஆடமாட்டார்… ஆட்டுவிக்கவும் மாட்டார்…’’ என்றேன்.

’’அப்படின்னா நான் ஆடுனது பொய்யா, அந்த நேரத்தில் என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியலையே?’’

’’நீ இந்து மதத்தை சேர்ந்தவள் என்பதால் சாமியாடியதாகச் சொல்கிறாய்… இதைத்தான் மற்ற மதத்தவர்கள் சாத்தான் என்கிறார்கள். ஆனால் இரண்டும் உண்மையல்ல. உன்னைப் போன்றவர்கள் ஆடுவதற்குக் காரணம், உறுதியில்லாத குழப்பமான மனநிலைதான். மெய்மறந்த நிலையிலும் சாமியாடுபவர்கள் உஷாராகவே இருப்பார்கள். சாமியாடும் பெண்கள் முந்தானை விலக அனுமதிப்பது இல்லை. கைக்குழந்தையுடன் சாமி ஆடுபவர்கள், அதனைக் கீழே போடுவது இல்லை. இவ்வளவு ஏன்… சாமியாடும்போது எதிரே ஒரு தூண் இருந்தால், பர்த்துப் பக்குவமாக விலகிப் போய்விடுவார்கள்…’’ என்று சிரித்தேன்.

’’என்னைப் பார்த்து சிலர் சாமியாடுறவன்னு கையெடுத்துக் குடும்பிடுவாங்க…’’

’’இதுபோன்ற போலி மரியாதைக்கு ஆசைப்பட்டுத்தான் பலர் மனதைத் திடப்படுத்திக் கொள்வதே இல்லை. மருத்துவரிடமும் செல்வதில்லை. நீ இப்பொழுது மனதை கல்லாக்கிக் கொண்டதால் சாமியாடுவது இல்லை. அதுதான் நிஜம்…’’ என்றேன்.

அவள் அமைதியாக இருந்தாள். ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்த தொழிலில் இருந்து விடுபடும் ஆசை அவள் முகத்தில் தெரிந்தது.

’’பெண்ணே… இந்தக் கணம் முதல் உன் மனதில் படிந்திருக்கும் பாசியைக் களைந்துபோடு. மீண்டும் புதிதாய் பிற. உன் குழந்தைகளுக்கு உன்னையே உதாரணம் காட்டுவது போல் வாழு. கஷ்டப்பட்டு முன்னேறுவதுதான் இறைவனுக்குப் பிடிக்கும்… காய்களையும் கனிகளையும் வாங்கி விற்பனை செய். உன் குடும்ப பிரச்னைகள் தீரும். நீ எத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறாய் என்று நேரில் பார்க்கும் பிள்ளைகள்தான் உன்னை மதிப்பார்கள்… நீ தவறு செய்து பணம் சம்பாதிப்பது தெரிந்தால்… நாளை அவர்களும் இதே வழியில் வருவார்கள்’’ என்றதும் அதிர்ந்தாள்.

உடனே அவள் ஜாக்கெட்டுக்குள் திணித்து வைத்திருந்த பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு எழுந்தாள். அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினேன். அந்தப் பணத்தை என் கைகளுக்குள் வைத்து ஆசிர்வதித்தேன்.

’’பெண்ணே… இந்த பணத்தின் மீது இருந்த அழுக்கை மந்திரம் மூலம் போக்கிவிட்டேன். இப்போது இது ஆசிர்வதிக்கப்பட்ட பணம். உன் வாழ்க்கையை மாற்றப் போகும் பணம்…’’ என்றபடி என்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, எழுந்து நடக்கத் தொடங்கினேன்.

அப்போது வேடிக்கையும் சிரிப்புமாக ஒரு இளைஞர் பட்டாளம் என்னைக் கடந்துசென்றது. ஒருவன், ‘‘டேய், சாமியாருடா, ஜோசியம் பார்க்கலாமா?’’ என்று கேட்டான்.  நான் அவர்களைத் தவிர்த்து நடைபோட்டேன். ஆனால், அவர்கள் விடாமல் என் முன்னே வந்து கை நீட்டினார்கள்.

’’என்ன கேட்க ஆசை?’’ என்று மனதில் இருந்த கோபத்தைக் காட்டாமல் கேட்டேன்.

’’நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன், அவளை கல்யாணம் முடிக்க முடியுமா?’’ என்று ஒருவன் கேட்க, இன்னொருவன், ‘‘டேய் சாமியார்கிட்ட வசிய மை இருக்குதான்னு கேளுடா… நம்ம வனிதாவை மடக்கலாம்’’ என்றான்.

அனைவரும்  கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் போலவே தெரியவே, அவர்களுடன் விளையாட நினைத்தேன்.

’’நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இன்னும் மூன்று மாதங்களில் இழுத்து மூடப் போகிறார்கள். அதற்குப் பின் வாருங்கள் உங்கள் அனைவருக்குமே எதிர்காலம் பார்க்கிறேன்…’’ என்று அவர்கள் கையை விலக்கினே.

அவர்கள் முகத்தில் திடீரென அதிர்ச்சி வந்தாலும் ஒருவன் மட்டும் அசராமல், ‘‘சாமி… எங்க கம்பெனி நம்பர் ஒன்னா போயிக்கிட்டு இருக்கு, அது எப்படி மூடுவாங்க!’’ என்று கேட்டான்.

’’ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும்…’’ என்று சிரித்தேன்.

இப்போது அந்த இளைஞர்களிடம் துடிப்பும் துள்ளலும் காணாமல் போனதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அதனால் நானே முன்வந்து, ‘‘பயந்துபோய் விட்டீர்களா?’’ என்று கேட்டேன்.

’’அப்படின்னா… நீங்க சொன்னது பொய்யா…?’’ என்று சந்தோஷமானார்கள். அந்த மகிழ்ச்சி எனக்கும் சந்தோஷமாகவே இருந்தது.

’’மன்னிச்சுக்கோங்க சாமி… தேவை இல்லாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டோம். நாங்க ஐ.டி. கம்பெனியில வேலை செய்றோம். ஒரே மாதிரி வேலை செஞ்சு போரடிச்சுப் போச்சுன்னு ஒரு சேஞ்ச்சுக்காக வந்திருக்கோம்…’’ என்றனர்.

’’எதையும் சலிப்பாக செய்யாதீர்கள். தினமும் குயில் ஒரே மாதிரி கூவுகிறது. பூக்கள் ஒரே மாதிரி மலர்கிறது, சூரியன் ஒரே மாதிரி எழுகிறது, மறைகிறது. இயற்கை  அதன் வேலையைச் செய்வதில் சலிப்படைவதே இல்லை.  இயற்கையிடம் இருந்து அன்றாட சந்தோஷங்களை கற்றுக்கொள்ளுங்கள். எதற்கும் சலிப்படையாதீர்கள். செய்வதை சந்தோஷமாக செய்யுங்கள்…’’ என்றபடி இடத்தைக் காலி செய்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *