’’ஆசிரமங்களில் எந்த ஒரு மனிதருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… எந்த விழிப்பு உணர்வும் உண்டாகாது.  அங்கே உங்கள் அடிமைகள் மட்டுமே உருவாவார்கள்… தனியே தன்னுடைய கருத்துக்களுடன் சிந்திக்கும் மனிதன் மட்டுமே ஞானியாக மாற முடியும்’’ என்றபடி வசதியாக சாய்ந்து உட்கார்ந்தேன். இந்த கருத்து குருஜியை கடுமையாகத் தாக்கியிருக்க வேண்டும். இதுகுறித்து என்னுடன் விவாதம் செய்யத் தயாரில்லை என்பது போன்று வேறு ஒரு கேள்வியை வீசினார்.

’’நீங்கள் இறைவனை எப்படி வழிபடுகிறீர்கள்…  என்ன மந்திரம் சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

’’நீங்கள்..?’’ என்று எதிர்க்கேள்வி போட்டேன்.

’’உலகத்தில் இருக்கும் அத்தனை மந்திரங்களும் ‘ம்’ என்ற எழுத்தில் அடங்கிவிடுகிறதே…’’ என்றார்.

’’எப்படி?’’ என்று கேட்டதும் சந்தோஷமாக பதில் சொல்லத் தொடங்கினார்.

’’ஒரு சிறிய பொருளைக் கீழே போட்டால்கூட சப்தம் உண்டாகும் என்பதுதான் அறிவியல். அதனால், ‘இவ்வளவு பெரிய பூமி சுற்றும் போது எப்படி சப்தம் இல்லாமல் இருக்கமுடியும்?’ என்று மேலை நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபொழுது விஞ்ஞானிகளிடம் கேட்டேன். பூமி சுற்றும்போது, ‘ம்’ என்ற சப்தம் வருவதாகவும், விண்வெளியைத் தாண்டிச் சென்றவர்களால் அதனைக் கேட்க முடியும் என்று சொன்னார்கள். அப்போதுதான் இந்த உலகமே இறைவனை ‘ஓம்’ என்ற மந்திரம் சொல்லி உச்சரித்து வணங்குவது புரிந்தது. ‘ஓம்’ என்று உச்சரிக்கும்போது, அடிவயிற்றின் மூலாதாரம் அசைக்கப்படுவதை அனைவரும் சாதாரணமாகவே உணரமுடியும். உங்கள் மந்திரம் என்ன?…’’ எனக் கேட்டார் ஆர்வத்துடன்.

’’மேலைநாட்டு விண்வெளி பயணிகளுக்கு ‘ம்’ என்ற சப்தம் கேட்டதா? வேடிக்கைதான். மௌனம்தான் சிறந்த மந்திரம், அதைக் கேட்டிருக்கிறீர்களா?’’ என்றேன்.

’’மௌனத்தை எப்படிக் கேட்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

’’நீண்டநேரமாக டி.வி. அல்லது ரேடியோ இயங்கும் தருணத்தில்,  திடீரென மின்சாரம் தடைபட்டதும், சப்தங்கள் நின்று போய் அற்புதமான மௌனவெளி உருவாகும். அந்த மௌனத்தைக் கேட்டுப் பாருங்கள். அதன்பின்னர் நீங்கள் முயற்சி செய்தால், எத்தனை சப்தம் நம்மைச் சுற்றி இருந்தாலும் மௌனத்தைக் கேட்க முடியும், மவுனத்தைப் பேச முடியும். அதையே மந்திரமாகப் போற்ற முடியும்…’’  என்றேன்.

அவருக்கு என்ன புரிந்ததோ, ‘’அற்புதம்… அற்புதம். இனி நானும் இதனை முயன்று பார்க்கிறேன்’’ என்றவர், ‘‘நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள்… உங்கள் வயது என்ன?’’ என்று எல்லோரையும் மயக்கும் தூண்டிலை என்னிடம் வீசினார்.

’’அகத்தியர் காலத்தில் இருந்து சித்தர்களோடு உலாவிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாலும் நம்பத்தான் செய்வார்கள்…’’ என்று சொல்லிச் சிரித்தபடி, ‘‘நீங்கள் சித்து விளையாட்டுகள் செய்வதுண்டா?’’ எனக் கேட்டேன்.

உடனே அவசரமாக, ‘‘நான் அப்படிப்பட்டவன் இல்லை. ஆனாலும் நான் சொல்பவை நடக்கிறது. என்னிடம் ஆசிர்வாதத்திற்காக வந்த பெரிய மனிதர்கள் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். கடவுள் என்னை இதற்காகவே படைத்திருக்கிறார் என நினைக்கிறேன். தேவையற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டி யோகா, தியானம், மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை எளிமையாக்கும் வழியைத்தான் சொல்லித் தருகிறேன்’’ என்றார்.

’’;மக்களது பிரச்சனைகளை யோகா, தியானம், மந்திரங்கள் தீர்த்து வைக்குமா?’’

’’எத்தனையோ நபர்கள் எங்கள் ஆசிரமத்துக்கு வந்தபின்னர் அமைதி அடைந்திருக்கிறார்கள். எங்களது பயிற்சி வகுப்பில் சேர்ந்தவர்களால் செய்யும் வேலையை திறம்பட செய்ய முடிகிறது. எந்த முடிவையும் மிக எளிதாக எடுக்க முடிகிறது…’’ என்றார்.

’’ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், அந்த பிரச்னையைத்தான் முழுமையாக ஆராய வேண்டுமே தவிர யோகா, தியானம் என்று திசை மாறி தப்பிக்கக் கூடாது. சரி, மக்கள் உங்களிடம் எதற்காக வருகிறார்கள், நிம்மதிக்காகவா அல்லது கடவுளைத் தேடியா?’’

’’மக்களது உடனடித் தேவை நிம்மதி. அதைத்தான் நாங்கள் தருகிறோம். நிம்மதியின் மூலம் அவர்களால் கடவுளை அடைந்து பேரின்பம் பெற முடியும்…’’ என்றார்.

சிரிப்பு வந்தது. ‘‘தவறாகச் சொல்லாதீர்கள். பேரின்பத்தை மக்கள் கேட்பதில்லை, அவர்கள் தேடுவதெல்லாம் பணம் மட்டும்தான். கடவுளே நேரில் வந்தால் கூட, ஆசைப்பட்டதை எல்லாம் அடைய உதவும் பணத்தைத்தான் கேட்பார்கள். அந்த பணத்தின் மூலம் நிம்மதி கிடைக்க விரும்புவார்கள். பணத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள், அதிகாரம் போன்றவற்றிற்குத்தான் ஆசைப் படுவார்கள்.  நீங்களும் பணக்கடவுளைத்தானே தேடுகிறீர்கள். அதில் விளைந்ததுதானே ஆசிரமங்கள், சீடர்கள்…’’ என்று சிரித்தேன்.

என்ன பதில் சொல்வது என்று அவர் அதிர்ச்சியுடன் தயங்கிக் கொண்டிருந்தபோது, இயற்கை பானத்துடன் அவரது சீடர் உள்ளே வந்தார். மூவரும் எதுவும் பேசாமல் குடித்தோம். சீடர் காலி கிளாசுடன் வெளியே சென்றதும் மனதைத் திறந்தார் குருஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *