புலரிப் பொழுதில் இட்லிக் கடையைத் திறக்க அவசரம் காட்டினார் வேதாசலம். ‘‘நமக்குத்தான் கையில் பணம் இருக்கிறதே… கடைக்கு லீவு விடுங்கள், ஊர் சுற்றலாம்…’’ என்று சொன்னதை காதிலே வாங்காதவர் போன்று புன்னகை முகத்துடன் அடுப்பை மூட்டி சாம்பாருக்கு பருப்பு வேக வைத்தார். நான் வெங்காயம்  எடுத்து உரிக்கத் தொடங்கியதும் வேகமாக வந்து தடுத்து நிறுத்தினார்.

’’இன்னைக்கு சரி, நாளைக்கு யார் பார்ப்பா? நீங்க வேடிக்கை பாருங்க, இல்லைன்னா திருப்பி ஒருக்க குளிச்சுட்டு வாங்க… அதுக்குள்ள இட்லி தயாராயிடும்…’’ என்றபடி வேலையில் மும்முரமானார்.

இனி காலை பத்து மணி வரை குற்றாலநாதரே அவரிடம் பேச வந்தால்கூட, ஒதுங்கி நிற்கச் சொல்லி விடுவார். அதுவரை ஒரு தூக்கம் போடலாம் என்று தோன்றவே, இடம் தேடி அலைந்தேன். ஆட்கள் அதிகம் புழங்காத ஒரு தெருவுக்குள் நுழைந்து அங்கிருந்த பழைய காலத்து வீடு போன்ற தங்கும் விடுதியின் பின்பக்கம் படுத்தேன். வயிற்றில் பசி, முகத்தில் லேசான வலியும் தொந்தரவு செய்யவே தூக்கம் வராமல் புரண்டேன்.

விடுதியின் பின்புறக் கதவு மெதுவாகத் திறக்க… உள்ளே இருந்து ஒரு பெண் சேலையை சரி செய்தபடி வெளியே வந்தாள்.

 ‘‘இன்னும் ஐநூறு ரூபாய் கொடு…’’ வாசலைத் தாண்டாமல் குரல் உயர்த்திக் கேட்டாள்.

உள்ளே இருந்து, ‘‘கத்தாதே… நீ கேட்டதைத்தான் கொடுத்தாச்சே, இன்னும் எதுக்குக் கேக்குற..’’ என்று குரல் வந்தது.

உள்ளேயிருந்து இன்னொரு ஆண் குரல், ‘‘ஏய்… எதுவா இருந்தாலும் உள்ளே வந்து பேசு…’’ என்று அதட்டியது.

உடனே அந்தப் பெண், ‘‘இங்க பாரு… பணத்தை எண்ணி வைச்சுடு. இல்லைன்னா பொது இடம்னு பார்க்க மாட்டேன், கெட்டவார்த்தையில வஞ்சிப்புடுவேன்… அசிங்கமாயிடும்…’’ என்று குரலை உயர்த்தினாள்.

உள்ளே கொஞ்சம் சலசலப்பு. அதன்பிறகு ஒரு கரம் மட்டும் வெளியே வந்து, ‘‘இந்தா இருநூறு ரூபாய் இருக்கு… ஓடிப்போயிடு…’’ என்று அவளை வெளியே தள்ளி கதவை இழுத்துச் சாத்திக் கொண்டது.

அந்தப் பணத்தோடு திரும்பியவள், அப்போதுதான் என்னைக் கவனித்தாள்.

’’சாமி… உள்ளே என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தியாக்கும்…’’ என்றாள் கோபத்துடன்.

’’அவர்களது பயத்தை பணமாக்கிக் கொண்ட உன் புத்திசாலித்தனத்தைப் பார்த்தேன். வேகமாகப் போ… குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கும்…’’ என்று பொடி வைத்துப் பார்த்தேன்.

உடனே மடங்கினாள். ‘‘சாமி… என்னைப் பத்தித் தெரியுமா?’’ என்று மிரண்டபடி அருகே வந்தாள்.

நான் சிரித்தபடி, ‘‘உன்னைப் போன்ற பெண்கள் இருப்பதால்தான் வக்கிரம் பிடித்த ஆண்கள் இன்னும் நல்ல மனிதர்கள் என்ற போர்வையில் நடமாட முடிகிறது…’’ என்றதும் அவள் கண்கள் கலங்கியது.

’’சாமி… எந்தப் பொம்பளையும் இந்த தொழிலுக்கு இஷ்டப்பட்டு வர்றதில்லே. நான் திருநெல்வேலிக்கு பக்கத்து கிராமத்தில இருக்கேன். என் புருஷன் கல்யாணம் முடிச்சு மூணு வருஷம் ஆகிறதுக்குள்ள இரண்டு பிள்ளைகளைக் கொடுத்துட்டு, இன்னொருத்தியை இழுத்துட்டுப் போயிட்டான். வீட்ல வயசாகிப் போன அவனோட அப்பா, அம்மா, என்னோட குழந்தைகளை எல்லாம் கவனிக்க வேற வழி தெரியலை. அதனால வாரத்துக்கு ஒரு நாள் இல்லேன்னா இரண்டு நாள் இந்த மாதிரி  குற்றாலம் வந்துட்டுப் போறேன் சாமி. இதெல்லாம் என் மாமியாருக்கும் தெரியும்…’’  என்று சொல்லி முடிக்கும் முன்னரே கண்களில் அருவி கொட்டியது.

’’ஊனமாய் பிறந்துவிட்டால் வேறு என்னதான் செய்ய முடியும்?’’ என்றேன்

’’என்ன சாமி சொல்றீங்க? எனக்கு ஊனம் இல்லையே…’’ என்றாள்.

’’கை, கால், கண் இல்லாதவர்கள் ஊனமுள்ளவர்கள் அல்ல பெண்ணே. அவர்கள் வாழத் துடிக்கிறார்கள், நம்பிக்கையுடன் போராடுகிறார்கள். வாழ்க்கையை நேர் வழியில் வாழ்வதற்குப் பயந்து தவறான வழிகளில் செல்பவர்கள்தான் ஊனமானவர்கள். உன் குழந்தைகளின் பசிக்குப் பயந்து பணிந்துவிட்டாய்.. அதனால்தான் உன்னை ஊனம் என்று சொன்னேன்’’

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தவள், ‘’சாமி… நான் படிக்காதவ, கூலி வேலை செஞ்சு நாலு உசுரைக் காப்பாத்த முடியுமா? எங்கே வேலைக்குப் போனாலும் என்கிட்ட இதைத்தான் கேட்கிறானுங்க. நிம்மதியான வாழ்க்கை வாழ எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடையாது சாமி..’’ என்றாள் இயலாமையுடன்.

’’உனக்கு கையும் காலும் செம்மையாகவே இருக்கிறது. கூலி வேலைக்குப் போகும் இடங்களில் எல்லா பெண்களுக்குமே ஆண்களால் தொந்தரவுதான். ஆனால் எத்தனை பேர் பாதை மாறுகிறார்கள்? மனதில் திடம் உள்ளவளை எந்த ஆணாலும் ஆசை வலையில் விழவைக்க முடியாது. உன்னை நம்பு…

சிறிய குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடும். அதை பொம்மை என்று நம்பாமல் அதனை உயிர் உள்ளதாகவே நினைத்து விளையாடும், அன்பு செலுத்தும். ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை வளர்ந்து அது பொம்மைதான் என்று தெரிந்ததும், தூக்கி எறிந்துவிடும். நீ பொம்மை வைத்து விளையாடுகிறாய்… விரைவில் விலகிவிடு அல்லது வாழ்க்கை உன் கையைவிட்டுப் போய்விடும்…’’ என்றேன்.

’’சாமி.. நான் பண்றது தப்புன்னா, என்கிட்ட வர்றவனுங்களும் தப்புத்தான செய்றாங்க, அவனுங்களை கண்டம்துண்டமா வெட்டிப் போடணும் சாமி!’’ என்றாள் ஆத்திரத்துடன்.

’’காமத்தில் தோல்வி கண்ட ஆண்கள், வெவ்வேறு பெண்களிடம் இன்பம் இருக்கிறதா என்பதைத் தேடித்தேடிப் பார்க்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் ஒரு தோல்விதான். ஏனென்றால் பெண்ணை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது.’’

’’பிறகு எதுக்கு சாமி, இப்படி ஆம்பளைங்க அலையுறாங்க…’’

’’நீ சொல். பல்வேறு ஆண்களுடன் கூடும்போதும் உன்னால் இன்பம் அனுபவிக்க முடிகிறதா?’’

’’இல்லைங்க. சொன்னபடி பணம் கிடைக்குமாங்கிற பயம் இருக்கும். வீட்டிற்கு எப்போ போய்ச் சேர்வோம்னு மனசு துடிக்கும்…’’

’’ஆம். உன்னைப் போல் பெண்கள் பணத்துக்காக மட்டுமே செயல்படுவதால் ஆண்களுக்கு இன்பம் கிட்டாது. மேலும் ஆண்கள்,  அவர்களே செயல்படவேண்டும் என்ற ஈகோ உடையவர்கள். அவர்களுக்கு மட்டுமே இன்பம் வேண்டும் என்று அவசரமாக செயல்படுபவர்கள். அதனால் அவர்களும் இன்பம் அடைவதில்லை, பெண்களையும் அடைய விடுவதில்லை. பெண்ணை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, அவள் ஆனந்தம் அடைந்த பின்னர் இன்பம் காண முயற்சி செய்யும் ஆணால் மட்டுமே காமத்தில் திருப்தியடைய முடியும்.’’

’’சாமி… இத்தனை விவரமாப் பேசுறீங்க, என்னோட வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டக்கூடாதா?’’ என்று கேட்டாள்.

’’விடிந்துவிட்டது பெண்ணே…. தூங்குபவர்களை மட்டுமே எழுப்ப முடியும். நடிப்பவர்களை எழுப்ப முடியாது. நீ உண்மையில் திசை மாற விரும்பினால் உன்னால் முடியும்…’’  என்றபடி வெறுமையாக புன்னகைத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *