’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் பேசத்தான் வேண்டியிருக்கும். அதனால், எத்தனை கசப்பாக இருந்தாலும் உண்மையைப் பேசிப்பாரேன்’ என்று ஒரு வியாபாரியிடம் பேசிவிட்டு திரும்பினார் ஞானகுரு.
‘’உண்மை பேசுவதால் நமக்கு என்ன கிடைக்கும்..? நாம் சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பொய்யைத்தானே கற்றுக்கொடுக்கிறோம்’’ என்று கேட்டார் மகேந்திரன்.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’குழந்தை சாப்பிடாவிட்டால் பூச்சாண்டி வந்துவிடுவான் என்று பயம் காட்டுவது, நன்மையின் பொருட்டுத்தான். இதன் மூலம் குழந்தை பொய்யைக் கற்றுக்கொள்வதில்லை. ஆனால், நீ எந்த இடத்தில், எப்படி உண்மை பேசுகிறாய் என்பதைத்தான் குழந்தைகள் ஆர்வமுடன் வேடிக்கை பார்க்கும்.
ஒரு விளையாட்டுப் போட்டியைக் காண தன்னுடைய மகனை அழைத்துச்சென்றார் தந்தை. வாசலில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் டிக்கெட் என்று எழுதிப் போட்டிருந்தது. தந்தை டிக்கெட் கொடுப்பவரிடம் இரண்டு டிக்கெட் கேட்டார்.
டிக்கெட் கொடுப்பவருக்கு ஆச்சர்யம். உங்கள் பிள்ளையைப் பார்க்க 9 வயது போன்றுதான் தெரிகிறது, பிறகு ஏன் டிக்கெட் வாங்குகிறீர்கள்? என்னை ஏமாற்றக்கூடாது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த தந்தை, ‘என் மகன் என்னை ஏமாற்றுக்காரன் என்று நினைத்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். அவனுக்கு வயது 11’’ என்றார் தந்தை.
இதுதான் உண்மையைக் கற்றல். சிறு ஆதாயத்துக்காக தன் தந்தை பொய் பேசுவதை சிறுவன் பார்த்தால், அது தவறு இல்லை என்று நினைத்துவிடுவான். வாழ்நாள் முழுவதும் பொய் பேசுவான். அதுதான் ஆபத்து. ஒரு டிக்கெட் வாங்குவதால் நீ பெரிதாக எதையும் இழக்கப் போவதில்லை. ஆனால், அதில் குழந்தைக்கும் தந்தைக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மிக அதிகம்’’ என்றார் ஞானகுரு.
உண்மையின் ஆழம் மகேந்திரனுக்குப் புரிந்தது.