கடவுளுக்கு ஏராளமான சக்திகள் இருப்பதாகவும், அவர் நினைத்தால் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியும் என்றும் நம்புகிறான் மனிதன். அதனால்தான், கடவுள் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது, கடவுள் தடுப்பதை எவராலும் கொடுக்கமுடியாது என்று வசனம் பேசுகிறான். பிச்சைக்காரனை கோடீஸ்வரனாக்குவது, சாகக்கிடப்பவனை பிழைக்கவைப்பது, துன்பங்களை துடைத்தெறிவது போன்ற அற்புத சக்திகள் கடவுளிடம் இருக்கிறது என்பதால்தான், விஷேச நாட்களில் தவறாது கோயிலுக்குப் போய், பவ்யமாக வரிசையில் நின்று அருள்பெற்று வருகிறான்.

கடவுளிடம் இருந்து அருள், ஆசிர்வாதம், அற்புதங்களை மட்டுமே மனிதன் எதிர்பார்க்கிறானே தவிர, கடவுள் நிலைக்கு தானும் உயரலாம் என்பதை யாரும் உணர்வதில்லை.

அதெப்படி சாத்தியம் என்று கேட்கிறாயா?

தர்மம் போடுங்க சாமி என்று உன்னை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி பிச்சை கேட்பவனுக்கு உன்னால் முடிந்த உதவியை செய்துபார். உன்னை அவன் கடவுளாக உயர்த்தி வாழ்த்துவான். அந்த கணத்தில் நீதான் அவனுக்கு கடவுள். ஏனென்றால் அவனது தேவையை நீ தீர்த்துவைக்கிறாய். தேவைப்படுபவருக்கு உதவுவதை அன்பு, அக்கறை, நேசம், பரிதாபம் என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் தேவைப்படுபவருக்கு உதவுவதுதான் கடவுளின் தன்மை.

சொக்கலிங்கமும் ராமசாமியும் நெருங்கிய நண்பர்கள். சொக்கலிங்கத்திற்கு மிகுந்த இரக்கசிந்தனையாளர் என்ற பெயர் உண்டு. ஊனமுற்ற நபர்கள், பிச்சைக்காரர்கள், மிகவும் வறிய சூழலில் வாடுபவர்களைப் பார்த்தால் வருத்தப்படுவார். மிகவும் துன்பப்படுபவர்களை பார்க்கநேர்ந்தால் கண்களில் நீர் தழும்ப, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். ஏனென்றால் அந்த சோகத்தை தாங்கும் சக்தி அவருக்கு இல்லை என்பார். ஆனால் வீடு தேடி யாரேனும் உதவி என்று கேட்டுவந்தால் தாராளமாக உதவி செய்வார். அதனால்தான் சொக்கலிங்கத்தை வள்ளல் என்று புகழ்ந்தார்கள்.

ராமசாமியும் நல்ல மனிதர்தான். யாராவது கஷ்டப்படுவது தெரிந்தால் அருகே சென்று விசாரித்து, அவர்களுடைய உடனடி தேவை என்னவென்று அறிந்து உதவி செய்வார். அனாதை இல்லத்துக்கு உதவி தேவை, கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவி தேவை என யாராவது கேட்டால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுவார். உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் சிக்கலில் அல்லது கஷ்டத்தில் இருப்பது தெரியவந்தால் உடனே அவர்களை தொடர்புகொண்டு பேசுவார். அவர்களுடைய பிரச்னை என்னவென்று அறிந்து ஏதேனும் உதவி செய்யமுடிந்தால் உதவுவார், இயலவில்லை என்றால் விசாரணையோடு நிறுத்திக்கொள்வார்.

இப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட சொக்கலிங்கமும் ராமசாமியும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் சேர்ந்து சென்ற பயணத்தில் விபத்து நடந்து, இருவரும் மரணத்தை தழுவினார்கள். அதன்பிறகு என்னவாகும்? அவர்களது ஆத்மாவை கவர்ந்துசென்று கணக்குப் பார்த்தான் சித்ரகுப்தன். ராமசாமிக்கு சொர்க்கத்தில் ஏ வகுப்பு கொடுத்தார் எமதர்மன். சொக்கலிங்கத்திற்கு என்னதான் கணக்கு பார்த்தாலும் சொர்க்கம் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகவே நரகத்திற்கு அனுப்பச் சொன்னார் எமதர்மன்.

அவ்வளவுதான் சொக்கலிங்கம் கொந்தளித்துவிட்டார். வாழும் காலம் வரையில் பூலோகத்தில் எத்தனை உதவிகள் செய்திருக்கிறேன், எத்தனை கோயில் குடமுழுக்கிற்கு உதவியிருக்கிறேன், எத்தனை தர்மங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் சொர்க்கம் இல்லை, என்னைவிட குறைவாகவே தானம் செய்த ராமசாமிக்கு மட்டும் சொர்க்கமா என்று நியாயம் கேட்டார்.

சொக்கலிங்கத்தின் கணக்குகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துவிட்டு எமதர்மன் பேசினான். வள்ளல் என்ற பெயருக்காக நீ காலம் முழுவதும் உழைத்தாய். ஏன் கஷ்டப்படுகிறார்கள், உண்மையில் அவர்களுக்கு என்ன தேவை என்பது உனக்குத் தெரியாது. உன் கையில் இருந்த பணத்தை அள்ளிக் கொடுத்தாலே போதும் என நினைத்தாய். ஆனால் ராமசாமி உண்மையில் கஷ்டப்பட்டவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, அதை மட்டும் செய்தான். தேவையறிந்து கொடுப்பதுதான் தர்மம். அதில்தான் நிஜ அக்கறை, அன்பு தென்படும். நரகத்திற்கு செல்லும்போது நீ தர்மம் கொடுத்த பணம் முழுவதையும் கணக்குபோட்டு வேண்டுமானால் வாங்கிக்கொள் என்று அனுப்பியேவிட்டார்.

சரிதான். அள்ளிக்கொடுப்பதில் அல்ல, அக்கறை காட்டுவதில்தான் உண்மையான தர்மம் இருக்கிறது. எந்த பிரதிபலனும் பாராமல் உண்மையான அக்கறையுடன் உதவி செய்பவனே கடவுள். உனக்கு என்ன வேண்டும் என்பதை கடவுளிடம் கேட்கிறாய், அதைத்தான் கடவுள் கொடுக்கிறார் என்று நம்புகிறாய். நீ கடவுளிடம் ஏதேனும் நல்ல வேலை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாய். ஆசைப்பட்ட மல்டிநேஷனல் கம்பெனியில் இல்லை என்றாலும் ஏனேதும் கால்சென்டரில் வேலை வாங்கித்தரவேண்டும் என்பதுதான் உன் ஆசையாக இருக்கும். அதை நிறைவேற்றினால்தான் அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்வாய். அவர் வேலை வாங்கிக் கொடுத்தால்தான் கற்பூரம், தேங்காய் உடைப்பாய்.

நெஞ்சில் கை வைத்துச் சொல். நீ உடைக்கும் தேங்காய், ஏற்றும் சூடத்தால் கடவுளுக்கு எதுவும் நன்மை கிடைக்கப்போகிறதா என்ன..?

அதனால் நீ கடவுளுக்காக நீ காத்திருக்காமல், நீயே கடவுளாக மாறுவதற்கு முயற்சி செய்.  ஒரு முறை கடவுளாக இருந்து பார்த்தால்தான், அந்த சிம்மாசனத்தின் அருமை புரியும். வாங்குவதில் இருக்கும் இன்பத்தைவிட கொடுப்பதில்தான் அதிக இன்பம் என்பது புரியவரும். ஒவ்வொருமுறை நீ அக்கறையுடன் கொடுக்கும்போதும் கடவுளாக மாறிக்கொண்டே வருவாய். உன்னால் பணம் செலவிக்க முடியவில்லை என்றால் உடல் உழைப்பு கொடு. அதுவும் முடியவில்லை என்றால் ஒருவனது துன்பத்திற்கு ஆறுதல் சொல். அதுவும் உன்னை கடவுளாக்கிவிடும்.

  • ஆறுதல் சொன்னாலே கடவுள் ஆகமுடியுமா?

நிச்சயம் ஆகமுடியும். இந்துக் கோயில் மட்டுமின்றி மசூதிகளிலும் தேவாலயங்களிலும் மக்கள் கூட்டம்கூட்டமாக சென்று வழிபடுவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா? வீட்டில் அவர்களுக்குக் கிடைக்காத நிம்மதியும், ஆறுதலும் அங்கு கிடைக்கிறது என்பதுதான். தன்னுடைய மனக்குறையை தன்னைவிட உயர்ந்த ஒருவரிடம் சொல்லிவிட்டேன், அவர்  நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வெளிவருகிறான். அந்த நம்பிக்கைதான் கடவுள். கடவுள் தரும் நம்பிக்கையை ஒரு மனிதன் கொடுத்தால், அவனும் நிச்சயம் கடவுள்தான்.

  • எதற்காக கடவுளாக வேண்டும்?

மனிதன் என்ற நிலையில் நீ இருக்கும்போது எல்லாவற்றையும் கேட்பவனாக, எதிர்பார்ப்பவனாக, வாங்குபவனாக இருப்பாய். எத்தனை கொடுத்தாலும் உனக்கு நிறைவு கிட்டாது. ஒரே ஒரு முறை கடவுளாக இருந்துபார். கொடுப்பதில் இருக்கும் இன்பம் புரியும். உன்னைவிட வசதியில், நிம்மதியில், சந்தோஷத்தில் குறைந்த ஒருவனுக்குத்தான் உன்னுடைய அக்கறையை காட்டப்போகிறாய். அதனால் அவனுடைய சந்தோஷத்திற்கு நீ காரணமாகும்போது கடவுளாக இருப்பதன் மகிமை புரியும். அந்த சந்தோஷத்தை உணர்ந்தவன் மீண்டும் மீண்டும் கடவுளாகவே ஆசைப்படுவான். மனித நிலைக்கு திரும்பமாட்டான். தேவையற்ற ஆசை, பொறாமை, கோபம், பழி உணர்வு போன்றவை எட்டிப்பார்க்காது.

  • எல்லோரும் கடவுளாக முடியுமா?

நிச்சயம் முடியும். ஒரு பிச்சைக்காரன், சக பிச்சைக்காரனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யும்போது கடவுள் நிலைக்கு உயர்கிறான். சின்னக் குழந்தைகள் எல்லோரும் கடவுளாகத்தான் இருக்கிறார்கள். அம்மாவையும் ஒரு தங்கக் குவியலையும் காட்டினாலும், குழந்தை அம்மாவைத்தான் தேடிப்போகும். ஏனென்றால் குழந்தையின் தேவை அம்மாவுக்குத்தான் தெரியும் என்று நம்புகிறது. குழந்தையைப் போல் வாழமுடியாது என்றாலும் சின்னச்சின்ன உதவிகள் செய்து எல்லோரும் கடவுள் நிலையை அடையமுடியும். தினமும் யாருக்கேனும் ஏதாவது ஓர் உதவி செய்யவேண்டும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். பணத்தால் மட்டுமின்றி மனதாலும் செய்துமுடிக்கலாம். சமீபத்தில் உறவுகளை இழந்த ஒருவருக்கு போன் செய்து, சோகத்தில் இருந்து மீண்டுவர தோள் கொடு. ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உன்னால் உதவ முடியவில்லை என்றாலும், அதற்கான ஒரு நபரை கண்டுபிடித்து உதவிசெய்யச் சொல்லுங்கள். தினம்தினம் மனிதர்கள் மீது அக்கறையும் அன்பும் காட்டத்தொடங்கிவிட்டால், எல்லோருமே கடவுளாகிவிடலாம்.

  • மனிதர்கள் கடவுளாகிவிட்டால் கடவுள் என்ன செய்வார்?

கடவுளுக்கு அப்போது பூமியில் எந்தத் தேவையும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *