ஒருவழிப் பாதையில் நுழைவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறுவது, வெள்ளைக்கோடு தாண்டி பயணிப்பது, ஹெல்மட் இல்லாமல், வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் ஏன் லைசென்ஸ்கூட இல்லாமல் வண்டியோட்டுவதை பலரும் சாகசமாகவே கருதுகிறார்கள். இதுபோன்ற சின்னச்சின்னதாக சட்டத்தை மதிக்காமல் நடப்பதுதான், பின்னர் ஒரு நாள் பெரிய சிக்கலில் மாட்டிவைக்கும்.
ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது. அதாவது எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நாடு, தேசியக்கொடி, தேசிய கீதத்தை பாதுகாக்க வேண்டும். சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை பின்பற்றி நடக்கவேண்டும். சாதி, மத, மொழி, இனம் போன்ற எல்லைகளைக் கடந்து சகோதர மனப்பான்மையுடன் வாழவேண்டும். குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு தருவதுடன், பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்பது ஏராளமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த சட்டங்களை எல்லாம் பிறருக்காகத்தான் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு உண்டு. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சட்டத்தை மதிக்காமல் தப்புகிறார்கள். சட்டத்தை சாதாரணமாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டவர்தான் ராஜேஸ்வரி.
கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு படிக்கவந்த ராஜேஸ்வரியை அழகி என்றுதான் சொல்லவேண்டும். நடுத்தரக்குடும்பம் என்பதால் கல்லூரி ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ராஜேஸ்வரியுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களில் பெரும்பாலோர் மிகவும் வசதியானவர்கள். வாசனைத் திரவியம் வாங்குவதற்குக்கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தார்கள். தினம் ஓர் ஆடை அணியும் பெண்களும் இருந்தார்கள். அதனால் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனிமையில் இருந்தாள் ராஜேஸ்வரி.
இந்த நேரத்தில்தான் ராஜேஸ்வரியிடம் தோழமையாக பேசினாள் ரோஸி. மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் என்று சொல்லிக்கொண்டாள். ராஜேஸ்வரியை அழகாக்குவதற்காக மேக்கப் பொருட்களும் தன்னுடைய உடைகளையும் கொடுத்தாள். அவற்றை அணிந்துகொண்டதும் மேலும் அழகாகத் தெரிந்தாள் ராஜேஸ்வரி. ஆனால், சில மாணவிகள் ராஜேஸ்வரியை தனிமையில் சந்தித்து, ‘ரோஸியுடன் சேரவேண்டாம், அவள் தவறான பெண்’ என்று சொன்னார்கள். ஆனால் அதனை ராஜேஸ்வரி நம்பவில்லை. தங்கள் நட்பை குலைப்பதற்கான முயற்சி என்று நினைத்தாள். அதனால் ரோஸியின் நட்பைவிட்டு விலகவில்லை.
ஒரு நாள் தற்செயலாக ரோஸியின் குடும்பத்தினர் ஹாஸ்டலுக்கு வந்தார்கள். அவர்களும் தன்னைப் போன்ற நடுத்தரக்குடும்பம் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தாள் ராஜேஸ்வரி. பிறகு எப்படி நிறைய பணம், உடை, அலங்காரப்பொருட்கள் கிடைக்கிறது என்று ரோஸியிடம் கேட்டாள்.
அதெல்லாம் உனக்கு வேண்டாம், வெளியே யாருக்கும் தெரியாத சின்னச்சின்ன வேலைகள் செய்கிறேன். அதனால் தேவையான பணம் கிடைக்கிறது. எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்திருக்கிறது என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு, என் கல்லூரிக் கட்டணத்தையும் ஹாஸ்டல் கட்டணத்தையும் நானே கட்டிக்கொள்கிறேன் என்றாள். அது என்ன வேலை என்று கேட்பதற்கு பயந்து அமைதியாக இருந்தாள் ராஜேஸ்வரி. அடுத்த சில மாதங்களில் ராஜேஸ்வரி வீட்டிலும் பணப்பிரச்னை வந்தது. ஹாஸ்டல் தொகை கட்டுவதற்கு தாமதமானது. அதனால் தானே முன்வந்து ரோஸிடம் உதவி கேட்டாள் ராஜேஸ்வரி.
வசதியான ஒருவருடன் ஒரே ஒரு நாள் தங்கினால் போதும் ஏராளமான பணம் தருவார், அவர் எனக்கு மட்டும் தெரிந்தவர் என்பதால் விஷயம் ரகசியமாக இருக்கும். வெளியே யாருக்கும் தெரியாது என்று ஆசை காட்டினாள் ரோஸி. பாதுகாப்பான உறவுக்கும் ரோஸி உறுதியளித்ததால், நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்தாள் ராஜேஸ்வரி. ஒரு விடுமுறை தினத்தில் ஊருக்குச் சென்றுவருவதாக சொல்லிவிட்டு, அந்த பணக்காரருடன் தங்கினாள் ராஜேஸ்வரி. ஹாஸ்டல் கட்டணம் மட்டுமின்றி நிறைய புடவைகளும் கிடைத்தது. தன்னுடைய தந்தை ஒரு மாதம் கஷ்டப்பட்டு உழைத்து கிடைக்கும் பணத்தை ஒரே நாளில் சம்பாதித்த சந்தோஷத்தில் மிதந்தாள் ராஜேஸ்வரி.
அந்த நபருக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது, மீண்டும் அழைக்கிறார் என்று சொன்னாள் ரோஸி. உச்சிகுளிர்ந்துவிட்டாள் ராஜேஸ்வரி. மீண்டும் அவரை சந்தித்து பணம் பெற்றுவந்தாள். அந்தப் பணத்தில் நல்ல செல்போன் வாங்கிக்கொண்டாள். அடிக்கடி அவர் கூப்பிடுவதும், ராஜேஸ்வரி செல்வதும் வாடிக்கையானது. அதன்பின் ஒரு நாள் அந்த நபர் வேறு ஓர் ஆணை அறிமுகப்படுத்தினார். நான் அந்த மாதிரி பெண் இல்லை என்று முரண்டு பிடித்தாள் ராஜேஸ்வரி. உடனே அவர் தன்னுடைய செல்போனில் இருந்து ஒரு படத்தை எடுத்துக்காட்டினார். அது ராஜேஸ்வரியின் நிர்வாணப் படம்.
தான் வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்தாள். அதன்பிறகு அந்த நபர் கைகாட்டும் நபர்களுடன் எல்லாம் செல்லவேண்டிய சூழலுக்கு ஆளானள். அப்படி ஒருவருடன் நகரத்துக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஹோட்டலுக்கு சென்றபோது போலீஸிடம் சிக்கிக்கொண்டாள் ராஜேஸ்வரி. கல்லூரி மாணவி என்று அழுது கெஞ்சியதால் வழக்குப்பதிவு செய்யாமல், ராஜேஸ்வரியின் பெற்றோரை வரவழைத்தார்கள். தங்கள் மகளை விலைமகளாகப் பார்த்த அவள் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு காணாமல்போன அந்தக் குடும்பம், இப்போது எங்கே, எப்படி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
தான் செய்வது தவறு என்பது ராஜேஸ்வரிக்கு நிச்சயம் தெரிந்தே இருந்தது. ஆனால், அந்த தவறு யாருக்கும் எப்போதும் தெரியவராது என்று நினைத்தாள். நமது நாட்டு சட்டப்படி திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது குற்றம். தன்னுடைய ஆதாயத்துக்காக சட்டத்தை மீற நினைத்து, தானே மாட்டிக்கொண்டாள் ராஜேஸ்வரி.
இவளைப் போன்றுதான் ஏராளமான நபர்கள் தங்கள் ஆதாயத்துக்காக சட்டத்தை மீறுகிறார்கள். குழந்தைகளை வேலைக்கு வைப்பது தவறு என்று தெரிந்தே, வசதியான அதிகாரிகளும் தொழிலதிபர்களும் வீட்டு வேலைக்கு சிறுவர், சிறுமிகளை வேலைக்கு அமர்த்துகிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என்றெல்லாம் சட்டத்தைப்பற்றி உயர்வாக பேசிக்கொண்டே சட்டத்தை மீறுகிறார்கள்.
இன்று சட்டத்தை அதிகம் வளைப்பது யார்?
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர்தான் சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்கொள்கிறார்கள். குழந்தை தொழிலாளர், கொத்தடிமை, கந்துவட்டி, வாகனத்திருட்டு போன்றவை எங்கு நடக்கிறது, யார் செய்வது என காவல்துறையினருக்கு நிச்சயம் தெரியும். ஆனால் தங்கள் ஆதாயத்துக்காக இந்த செயல்களை காவல்துறை முற்றிலும் ஒழிப்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து சட்டமீறலுக்கும் ஆரம்பம் காவல்துறை என்று உறுதியாகவே சொல்லலாம்.
மக்கள் ஏன் சட்டத்தை மீறுவதற்கு ஆசைப்படுகிறார்கள்?
தப்பில்லாமல் தப்புசெய்தால் தப்பில்லை என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். தனக்கு முன்னே ஒருவன் தவறு செய்து தண்டனை இல்லாமல் தப்புவதை பார்த்ததும், தானும் அப்படி செய்வதற்கு முன்வருகிறார்கள். ஒரு முறை தண்டனையின்றி தப்பியதும், மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான். தாங்கள் தவறு செய்வது மட்டுமின்றி தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத்தருகிறார்கள். ஒருவழிப்பாதையில் வேகமாக தந்தை செல்வதை பார்க்கும் மகனும்,, நாளை அப்படித்தான் செல்வான். இவை எல்லாவற்றையும் மீறி, சட்டத்தை மீறுவதால் கிடைக்கும் சிறு இன்பமும் தவறு செய்யத் தூண்டுகிறது.
சட்டத்தை மதிக்கத்தான் வேண்டுமா?
சட்டம் என்ற ஒன்று இருப்பதால்தான் உன்னுடைய வீட்டில் நிம்மதியாக தூங்க முடிகிறது. சட்டம் இல்லையென்றால் வலியவன் உன் வீட்டுக்குள் நுழைந்து சொத்துகள் மட்டுமின்றி மனைவியையும் அபகரித்துச் செல்வான். எல்லோருக்கும் சமமான உரிமை கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத்தை எல்லோரும் மதிக்கும்போதுதான் அனைவருக்கும் நியாயம் கிடைக்கும்.